Ad

ஞாயிறு, 19 ஜூலை, 2020

``விஜய்கிட்ட ஒரு விஷயம் மாத்தணும்னு சொன்னேன்... அதுக்கு அவர்?!'' - ஒளிப்பதிவாளர் ரத்னவேல்

Randy... இந்திய சினிமா உலகில் இந்தப் பெயருக்கு செம டிமாண்ட். எந்த ஜானர் படமாக இருந்தாலும் சரி, லைட்டிங், ஃப்ரேம், புதுப்புது முயற்சி என ஒளிப்பதிவில் சென்சுரி அடிப்பவர். கோலிவுட்டில் பிஸியாக இருந்த இவரை டோலிவுட் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்று, தனது பேரன்பால் ஹைதராபாத்திலேயே வைத்துக்கொண்டது. இன்றைய ஒளிப்பதிவாளர்களின் மானசீக குரு பாலு மகேந்திரா முதல் ஒளிப்பதிவிற்காக ஆஸ்கர் வாங்கிய ராபர்ட் ரிச்சர்ட்சன் வரை ரத்னவேலுவின் ஒளிப்பதிவிற்கு ரசிகன் என கூறியிருக்கிறார்கள். அந்தளவிற்கு வேலையில் கில்லி. 23 வருட சினிமா பயணத்திலிருந்து சில சுவாரஸ்யமான விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

``ஒரே ஒரு படம்தான் உதவி ஒளிப்பதிவாளரா வேலை செஞ்சிருக்கீங்களே?"

``ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல சேர்ற வரைக்கும், சினிமா பத்தி அவ்ளோவா தெரியாது. இங்க வந்து எல்லா ஊர் சினிமாவும் பார்க்க ஆரம்பிச்சு, சினிமானா என்னனு கத்துக்கிட்டேன். படிச்சு முடிச்சவுடனே ஒரு படத்துல துணை ஒளிப்பதிவாளரா வேலை செய்ய வாய்ப்பு கிடைச்சது. ஆனா, எனக்கு ராஜீவ் மேனன் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா சேரணும்னு ஆசை. ஆனா, அவர் விளம்பரங்கள்ல மட்டும் வேலை செய்றதுனால அவர்கிட்ட சேர்ந்தால் மாசத்துக்கு மூணு நாள்தான் வேலை இருக்குமேன்னும் யோசனை. நிறைய யோசிச்சு அவர்கிட்டயே கடைசி அசிஸ்டென்டா சேர்ந்துட்டேன். மூணு நாள் ஷூட்டிங்குக்கு முப்பது நாள் தயாராவோம். ஒரு ப்ரொஃபசர் மாதிரி இருந்து எனக்கு நிறைய சொல்லிக்கொடுத்தார். நாற்பதுக்கும் மேற்பட்ட விளம்பரங்களிலும் `பாம்பே' படத்துலயும் அவர்கிட்ட உதவி ஒளிப்பதிவாளரா இருந்தேன். ஆனா, பத்து படத்துல வேலை செஞ்ச அனுபவம் கிடைச்சது. அப்புறம் `அரவிந்தன்' படத்துல ஒளிப்பதிவாளராகிட்டேன்."

``ஒரு சீனை சொன்னவுடன் எங்களுக்கு படத்துடைய விஷுவல் மனசுக்குள்ள ஓடும். அப்படி இயக்குநர் கதை சொன்னவுடன் உங்க மனசுக்குள்ள ஓடுற விஷுவல் எப்படியிருக்கும்?"

ஒளிப்பதிவாளர் ரத்னவேலு

``கதையை படிக்கும்போது மனசுக்குள்ள ஒரு விஷுவல் இருக்கும். அதை இயக்குநர் அவருடைய பர்சனல் பார்வையில இருந்து சொல்றதை கேட்கும்போது வேறொரு கற்பனை இருக்கும். வருஷ கணக்குல ஒருத்தர் எழுதுற கதையை மக்களுக்கு விஷூவலா கொடுக்கிறதுதான் ஒரு ஒளிப்பதிவாளருடைய வேலை. எந்தளவுக்கு கதைக்குள்ள ஆழமா போறோமோ அந்தளவுக்கு விஷுவல்ல தெரியும். இயக்குநர் கதை சொல்லும்போது, அதை நல்லா தெளிவா புரிஞ்சுக்கணும். இயக்குநர் ஒரு மலைனு சொல்வார். கேமராமேன் சுவிட்சர்லாந்துல இருக்கிற மலையை யோசிப்பார். ஆனா, இயக்குநர் திரிசூல மலையை நினைச்சு சொல்லியிருக்கலாம். அதனால, தெளிவா கேட்டு புரிஞ்சுக்கணும். இயக்குநருடைய பார்வையில இருந்தே ஒவ்வொரு விஷயத்தையும் யோசிக்கணும். அப்புறம்தான், அதுல நம்ம கிரியேட்டிவிட்டியைப் பயன்படுத்தணும். ஒளிப்பதிவாளருடைய கற்பனை இயக்குநர் கதையை கெடுத்திடக்கூடாது. சில இடங்கள்ல, நம்ம கிரியேட்டிவிட்டி இயக்குநருடைய கற்பனைக்கு அழகு சேர்க்கும். அதற்கு உதாரணம், `சேது', `ரங்கஸ்தலம்' படங்கள்ல வர்ற காட்சிகளும் அதுக்கான கலர் டோனும். இயக்குநர் - ஒளிப்பதிவாளர் ரெண்டு பேருக்குமான எண்ண ஓட்டங்கள் ஒரே மாதிரி இருக்கும்பட்சத்தில்தான் அந்தப் படம் பேசப்படும்."

`` `சேது' படத்துக்கு இயக்குநர் பாலாவுக்கு எவ்வளவு போராட்டங்கள் இருந்ததுனு தெரியும். இப்போ அவர் கொஞ்சம் பிரச்னையில இருக்கார். அவருடைய மன வலிமை எப்படிப்பட்டது?"

``பாலா வெளியே பார்க்கும்போது கடுமையா இருக்க மாதிரி தெரியும். ஆனா, அவர் ரொம்பவே சாஃப்ட். ரொம்ப எமோஷனலான நபர். ஆனா, தனக்கு இதுதான் வேணும்னு முடிவு பண்ணிட்டார்னா, அவ்ளோதான். அது கிடைக்கிற வரை விடமாட்டார். `சேது' படத்துக்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் இல்லை. அப்புறம், பாலாவே பசங்களை ரெடி பண்ணார். பாண்டிமடம் போர்ஷனுக்கு ரியாலிட்டியா இருக்கணும்னு அந்த ஊர்ல இருந்த யாசகர்கள் நிறைய பேரை கூட்டிட்டு வந்து அவங்களுக்கு மொட்டை அடிச்சு அந்த காஸ்ட்யூம் போட்டுவிட்டு நடிக்க வெச்சார். அவருக்கு பிரச்னைகள் வரும்போதெல்லாம் அதிலிருந்து வெளியே வந்திடுவார். மனவலிமையும் நம்பிக்கையும் அதிகம் அவருக்கு. நிச்சயம் பாலா மீண்டு வருவார்"

``தெலுங்குல உங்களுக்கும் இயக்குநர் சுகுமாருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கே! அவருடனான நட்பு?"

இயக்குநர் சுகுமாருடன் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு

``சுகுமார்க்கு சரியா கதை சொல்ல வராது. ஆனா, அவருடைய சிந்தனை எல்லாம் அபாரமா இருக்கும். `ஜெயம்' படத்துடைய ஷூட்டிங்ல இருந்தபோது கோரியோகிராஃபர் சங்கர் மாஸ்டர் என்கிட்ட, ``அல்லு அர்ஜுனை வெச்சு பெருசா ஒரு படம் பண்ணப்போறாங்க. அதுக்கு சுகுமார்னு ஒருத்தர் இயக்குநர். உங்களுடைய `சேது', `நந்தா' பார்த்துட்டு நீங்கதான் பண்ணணும்னு சொல்றாராம்'னு சொன்னார். அப்போதான் அடுத்தடுத்து ஹிட் படங்கள்னு வளர்ந்து வந்துட்டிருந்தேன். இந்த சமயத்துல தெலுங்கு பக்கம் போகணுமானு தோணுச்சு. அப்புறம் சங்கர் மாஸ்டர் சொல்லிட்டார்னு அரைமனசா கதைக்கேட்க ஹைதராபாத் போனேன். சுகுமார் சொன்ன கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஒருகட்டத்துல நான் கதைக்குள்ள ஆழமா போயிட்டேன். அந்தப் படம்தான் `ஆர்யா'. ப்ளாக்பஸ்டர் ஹிட்டாச்சு. அவர் ஒரு மேக்ஸ் புரொஃபசர்ங்கிறதுனால வெவ்வேறு கோணத்துல ஒரு விஷயத்தை பார்ப்பார். அவர்கூட வொர்க் பண்றது ரொம்பப் பிடிச்சுப்போய் `ஜகடம்', மகேஷ்பாபுவோட `நேனொக்கடின்னே', ராம்சரணோட `ரங்கஸ்தலம்'னு தொடர்ந்து 16 வருஷமா அவர்கூட பயணிச்சுட்டு இருக்கேன். இயக்குநர் - ஒளிப்பதிவாளர் அப்படிங்கிறதைத் தாண்டி நல்ல நண்பர்களாக மாறிட்டோம். அவருடைய அடுத்தப் படம் `புஷ்பா'வுக்கும் என்னை கூப்பிட்டார். ஆனா, `இந்தியன் 2' பண்ணிட்டு இருக்கிறதுனால பண்ணமுடியாமல் போயிடுச்சு. அந்தப் படத்துடைய கதை எனக்கு தெரியும். ரொம்ப நல்ல படமா வரும்."

``டி.ஐனா என்ன? அதுல ஒளிப்பதிவாளருடைய பங்கு என்ன?"

``சினிமாவுல டி.ஐ ரொம்ப முக்கியமான வேலை. ஒளிப்பதிவு பண்ணிட்டு வர்ற எல்லா விஷயத்தையும் ஒரே டோன்ல மாத்தி படத்துக்கு விஷுவலா பலம் சேர்க்கிற வேலை. தவிர, கிராஃபிக்ஸ் காட்சிகள் இருந்தால் அது தனியா தெரியாமல் படத்தோடு ஒன்றி வர்றதுக்கு சில வேலைகள் செய்யணும். அதுக்கு வி.எஃப்.எக்ஸ் பத்தின அறிவு இருக்கணும். அதையெல்லாம் பண்ற கலரிஸ்ட்களுடைய வேலை வெளியே தெரியமாட்டிங்குது. ஒரு ஒளிப்பதிவாளருடைய மேற்பார்வையிலதான் டி.ஐ நடக்கும். ஆனா, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் சரி செய்ற வேலை எங்களுடையது இல்லை. ஆனா, இப்போ அதையும் நாங்கதான் பார்த்துட்டு இருக்கோம். ஒளிப்பதிவு பண்ணும்போதே நல்ல விஷுவலுக்கு மெனக்கெட்டு பண்ணணும். அப்புறம், கிரேடிங்ல அதை அழகாக்கிலாம். ஆனா, இப்போ இருக்கிற இளம் ஒளிப்பதிவாளர்களுக்கு நான் சொல்றது `எல்லாத்தையும் டி.ஐல பார்த்துக்கலாம்'னு நினைக்காதீங்க."

`` `வாரணம் ஆயிரம்' படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடிதான் உங்க அப்பாவும் கெளதம் மேனன் அப்பாவும் இறந்துட்டதா கேள்விப்பட்டோம். கதையில நிறைய அப்பா சென்டிமென்ட் சீன் இருக்கும். எவ்ளோ எமோஷனல் கனெக்டா இருந்தது?"

ஒளிப்பதிவாளர் ரத்னவேலு - இயக்குநர் கெளதம் மேனன்

``இந்தப் படம் கதையெல்லாம் முடிச்சு ஆரம்பமாகுற நேரத்துல எங்க ரெண்டு பேருடைய அப்பாவும் அடுத்தடுத்த வாரத்துல இறந்துட்டாங்க. இப்போ வரை இந்தப் படத்துல நான் பண்ண வேலைக்கு பாராட்டுகள் வருது. எல்லாமே கெளதமுடைய ஃபீல்தான். கதையாவே ரொம்ப எமோஷனலான இருக்கும். ஒரு பையனுடைய வாழ்க்கையில நடக்குற பல விஷயங்களை பதிவு பண்ணும்போது நிறைய கலர் டோன் பயன்படுத்த முடிஞ்சது. எனக்கு பயங்கரமான ஸ்கோப் கொடுத்தார் கெளதம். அப்பா சீன் எடுக்கும் போதெல்லாம் ரொம்ப எமோஷனலா இருக்கும். என் அப்பா இறக்குற தருவாயில இருக்கும்போது என்னை பார்க்கணும்னு சொல்லியிருக்கார். நான் மும்பையில இருந்தேன். இந்த மாதிரி தகவல் வந்தவுடனே ஏர்போர்ட் கிளம்பி வந்துட்டேன். நான் புக் பண்ண ஃப்ளைட் கேன்சலாகிடுச்சு. அடுத்த ஃப்ளைட்டும் கேன்சலாகிடுச்சு. எனக்கு ரொம்ப பயமாகிடுச்சு. மூணாவதா ஒரு ஃப்ளைட் கிடைச்சு கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டே வந்தேன். அப்பப்போ போன் பண்ணி `அப்பாவுக்கு உயிர் இருக்குல'னு கேட்டுக்கிட்டே இருந்தேன். ஏர் போர்ட்ல இருந்து வெளியே வந்து கத்திப்பாரா பாலத்துக்கிட்ட வரும்போது அப்பா இறந்துட்டார்னு தகவல் வந்தது. அவர் என்னை பார்க்கணும்னு சொல்லியிருக்கார். ஆனா, அப்போ அவர்கூட இருக்க முடியலையேனு இப்போ வரைக்கும் அந்த குற்றவுணர்வு எனக்கு இருக்கு. இதே மாதிரி கெளதம், அவர் அப்பா இறக்கும்போது லண்டன்ல இருந்தார். நாங்க எல்லோரும் அவர் வீட்டுக்கு போயிட்டோம். அவர் லண்டன்ல இருந்தும் வர தாமதமாகிடுச்சு. இதைப் பத்தி ரெண்டு பேரும் அடிக்கடி பேசிக்குவோம். அதனாலகூட அவர் அந்தப் படத்துல சூர்யா அப்பா இறக்கும்போது ஆர்மி கேம்ப்ல இருக்கிற மாதிரிவெச்சிருக்கலாம்."

```எந்திரன்' மாதிரி ஒரு பெரிய படத்துல வேலை செஞ்சுட்டு அடுத்தப் படமா `ஹரிதாஸ்' பண்ணது எவ்வளவு சவால்?"

ஒளிப்பதிவாளர் ரத்னவேலு

``இயல்பான படங்கள் பண்ணிட்டு இருந்த எனக்கு `எந்திரன்' மிகப்பெரிய வாய்ப்பு. `நீங்க நிறைய ரியலிஸ்டிக்கான படங்கள் பண்ணியிருக்கீங்க. அதே சமயம், நிறைய விளம்பர படங்களும் பண்ணியிருக்கீங்க. அதுல இருக்கிற உங்க கிரியேட்டிவிட்டியை `எந்திரன்'னுக்கு கொடுங்க'னு சொன்னார் ஷங்கர். `எந்திரன்' ரொம்ப ரொம்ப சிரமமான படம். அனிமெட்ரானிக்ஸ், படம் முழுக்க கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்னு ஹாலிவுட் அளவுக்கு பண்ணணும்னு நிறைய ஹோம் வொர்க் பண்ண வேண்டியதா இருந்தது. எது சிஜினு விஷுவல்ல தெரியாமல் இருக்க என்ன பண்ணணும்னு நிறைய தேடித்தேடி படிச்சேன். படத்துக்கு கேமரா ரிப்போர்ட்டே 3600 பக்கம் எழுதி வொர்க் பண்ணோம். ஷங்கர் சாரும் டெக்னிக்கலா பயங்கரமா மெனக்கெட்டார். படம் முழுக்க டபுள் ஆக்‌ஷன் இருக்கிறதுனால ஒவ்வொரு ஷாட்டையும் ரெண்டு முறை எடுக்கணும். காலையில முழுக்க வசீகரன் கேரக்டரை எடுப்போம். மதியத்துக்கு மேல சிட்டி கேரக்டரை எடுப்போம். க்ளைமேக்ஸ் போர்ஷன் எடுக்கும்போது ரொம்ப சிரமமாவும் சவாலாவும் இருந்தது. அமெரிக்கா, ஹாங்காங், சீனானு பல நாடுகள்ல இருந்து சிஜி பண்ணி அனுப்புவாங்க. எல்லாத்தையும் ஒன்னுவிடாமல் ஒவ்வொரு லேயரையும் பார்த்துப்பார்த்து கலர் கரெக்‌ஷன் பண்ணோம். இப்போ `ஹரிதாஸ்' பத்தி பேசுவோம். அந்தப் படத்துடைய இயக்குநர் குமாரவேலன் என் நண்பர். ஆட்டிஸம் பையனை மையப்படுத்தின கதைனு சொன்னவுடன் சுவாரஸ்யமா இருந்தது. `எந்திரன்' முடிச்சவுடன் பாலிவுட்ல இருந்து நிறைய வாய்ப்புகள் வந்தது. தமிழ், தெலுங்குலயும் பட வாய்ப்பு இருந்தது. ஆனா, நான் `ஹரிதாஸ்' பண்ணதுக்கு காரணம், அந்தக் கதையில இருந்த யதார்த்தம். பொருளாதார ரீதியாகவும் டெக்னிக்கலாகவும் ரொம்ப பெருசா வொர்க் பண்ணிட்டு அப்படியே இங்க வந்தேன். ரெண்டு வருஷம் கிரீன் மேட், வி.எஃப்.எக்ஸ், அனிமேஷன்னு பார்த்துட்டு, இதுல லைவ்லியா எடுக்கிறது ரிலாக்ஸா இருந்தது. எனக்கு நல்ல பெயரும் வாங்கிகொடுத்தது. இந்தப் படத்துடைய நிகழ்ச்சியில பாலு மகேந்திரா சார் ``I'm a great fan of Randy"னு சொன்னது லைஃப் டைம் மொமன்ட்!"

``சினிமாவுல உங்க கிரியேட்டிவிட்டிக்கான இடம் இருக்கும். விளம்பர படங்கள்ல அது எப்படி சாத்தியம்? இல்லை அதுக்குனு சில விஷயங்கள் இருக்கா?"

`கைதி நம்பர் 150' படப்பிடிப்பில் காஜல் அகர்வாலுடன் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு

``1993-ல விளம்பர படங்கள் வொர்க் பண்ணும்போது ரொம்ப குறைவா இருந்தது. எல்லா கேமராமேனுக்கும் அந்த வாய்ப்பு தரமாட்டாங்க. தென்னிந்தியாவுலேயே மொத்தம் நாலஞ்சு ஒளிப்பதிவாளர்கள்தான் விளம்பரப்படங்கள் எடுப்பாங்க. விளம்பரப் படங்கள் சினிமாவுல இருந்து முற்றிலும் மாறுபட்ட விஷயம். ராஜீவ் சார்கிட்ட வொர்க் பண்ணிட்டு இருந்ததுனால எனக்கு `பி' லெவல் விளம்பங்கள் வரும். அதுல நல்ல அனுபவம் கிடைச்சது. இது நல்லா பண்ணவுடன் `ஏ' லெவல் விளம்பரங்கள் வாய்ப்பு கிடைச்சது. அப்போ விளம்பரங்கள் கொண்டாடப்பட்டுச்சு. ஒரு நாளுக்கு ஆறு ஷாட்தான் இருக்கும். ஒரு பால் அழகா தெரியணும்னு அரைநாள் லைட்டிங் பண்ண காலம் எல்லாம் இருக்கு. ஒரு டியோடரன்ட்டை இந்தியாவுல லான்ச் பண்றாங்க. அதுக்கான விளம்பரத்தை நான் எடுக்கிறேன். இதுடைய ஒரிஜினல் வெர்ஷன் ஜமைக்காவுல ஷூட் பண்ணியிருந்தாங்க. அந்த டியோவை மணல்ல வெச்சு பண்ணியிருந்தாங்க. அதே மாதிரி பண்ணணும்னு மெரினால இருந்து கொஞ்ச மணலை எடுத்துட்டு வந்து பண்ணோம். வொர்க் அவுட் ஆகலை. சரினு இதுக்காக மொரிஷீயஸ் போய் மணல் எடுத்துட்டு வந்தாங்க. அவ்ளோ பர்ஃபெக்‌ஷன் இருக்கும். ஒரு வாட்ச் விளம்பரம் பண்ணா, வாட்சுடைய டயல் தெரியணும், அதுக்குள்ள இருக்கிற பிராண்ட் பெயர் அழகா தெரியணும், ரிச் லுக் வரணும் இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கு லைட்டிங் மாத்தி வெச்சு எடுக்கணும். அன்னிக்கு ஒரு புது டெக்னிக்கை பயன்படுத்தணும்னா விளம்பரங்ள்ல மட்டும்தான் பண்ண முடியும். சினிமாவுல முடியாது. இப்போ அப்படியே தலைகீழா மாறி எந்த டெக்னாலஜியா இருந்தாலும் சினிமாவுலதான் பண்ணமுடியும்னு ஆகிடுச்சு."

``ஒரு படத்துக்கான கலர் டோன் எப்போ முடிவாகும்? அதுக்கு உங்களுடைய மெனக்கெடல் என்ன?"

ரங்கஸ்தலம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் சுகுமார் - ஒளிப்பதிவாளர் ரத்னவேலு - ராம்சரண்

``மூணு முறை ஸ்கிரிப்டை படிக்கும்போதே ஒரு ஐடியா கிடைச்சுடும். கொஞ்சம் குழப்பமா இருந்தால், சின்னதா டெஸ்ட் ஷூட் எடுத்து கலர் கரெக்‌ஷன் எல்லாம் பண்ணி பார்த்து எந்த கலர் டோன்ல போலாம்னு முடிவு பண்ணிடுவேன். காஸ்ட்யூம் டிசைனர்கிட்டயும் இதுதான் கலர் டோன். இந்த நிற காஸ்ட்யூமை அதிகம் பயன்படுத்துங்க, இந்த நிறங்கள் கொஞ்சம் கூட ஃப்ரேம்ல இருக்கக்கூடாதுனு தெளிவா சொல்லிடுவேன். பீரியட் படம் பண்ணும்போது மக்களை வேற ஒரு உலகத்துக்கு கூட்டிட்டு போகணும். `சைரா நரசிம்ம ரெட்டி' பண்ணும்போது ரொம்ப சவாலா இருந்தது. 1800-கள்ல நடக்குற கதை. அப்போ மின்சாரமே கிடையாது. எல்லாமே நெருப்புல வர்ற வெளிச்சம்தான். நிஜத்துல தீப்பந்தத்தை வெச்சு ஷூட் பண்ணா வராது. அதனால நிறைய டெஸ்ட் ஷூட் பண்ண வேண்டியதா இருந்தது. கேஸ் சிலிண்டர் லைட்டை கான்ட்ராக்ட் எடுத்து கொஞ்சம் நெருப்பு வெளிச்சத்தை சேர்த்து அந்த கதைக்கான மூட் செட் பண்ணோம். வெளியே போனால் நிலா வெளிச்சம், சூரிய வெளிச்சம்... உள்ள வந்தா நெருப்பு வெளிச்சம் அதுக்குத் தகுந்த மாதிரி லைட்டிங் பண்ண பெரிய சிரமமா இருந்தது. அதுதான் லாஜிக். பழைய காலத்து காஸ்ட்யூமை மட்டும் போட்டுட்டு லொகேஷன்ல நிக்கவெச்சா பீரியட் படமாகாது. கொடுக்கிற டோன், லைட்டிங் அளவு இதெல்லாம்தான் பீரியட் மூடைக் கொண்டு வரும். இதுல ஆர்ட் டைரக்டர், காஸ்ட்யூம் டிசைனருக்கான பங்கும் ரொம்ப ரொம்ப பெருசு."

``ரஜினிகாந்த் கூட ரெண்டு படம், சிரஞ்சீவி கூட ரெண்டு படம் வொர்க் பண்ணியிருக்கீங்க. இவங்க ரெண்டு பேருக்கும் இருக்கிற ஒற்றுமை என்ன?"

`லிங்கா' படப்பிடிப்பில் ரஜினியுடன் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு

``இரண்டு பேருக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு. செட்ல ரெண்டு பேரும் அவ்ளோ ஜாலியா இருப்பாங்க. நல்ல ஹியூமர் சென்ஸ் உள்ளவங்க. `லிங்கா' நேரத்துலதான் ரஜினி சார் உடம்பு சரியில்லாமல் இருந்து திரும்ப வந்து நடிச்சார். ஆனா, அதைக் காட்டிக்கவேமாட்டார். அவருக்கான மனவலிமை அபாரமா இருக்கும். சிரஞ்சீவி சார் ரொம்ப வருஷம் கழிச்சு சினிமாவுல நடிக்கிறதுனால அவரை ஸ்பாட்ல இருக்கிறவங்களே அப்படிப் பார்த்து ரசிப்பாங்க. டான்ஸ் ஆடும்போது அவருடைய ஐகானிக் மூவ்மென்ட் இருந்தால், கைத்தட்டி விசில் அடிக்க ஆரம்பிச்சுடுவாங்க. நமக்கும் பார்க்க செமயா இருக்கும். ரெண்டு பேருக்குமான எனர்ஜி வேற லெவல். அதே மாதிரி, அவங்களுக்கு பிடிச்சுடுச்சுனா உடனே கூப்பிட்டு பாராட்டிடுவாங்க"

``விஜய் தோற்றத்துல சேஞ்ச் ஓவர் கொடுத்தது `திருமலை' படம். இந்தப் பட அனுபவம்?"

`` `சேது', `நந்தா' பண்ணவுடன் விஜய் தன்னுடைய `பகவதி' படத்துக்கு வொர்க் பண்ணணும்னு கேட்டார். வொர்க் பண்ணேன். படமும் ஹிட்டாச்சு. ஆனா, எனக்கு ரொம்ப திருப்தியா இருந்தது `திருமலை'தான். ரமணா ரொம்ப அருமையான கதை சொல்லியிருந்தார். அவர் பேசுறது சூப்பரா இருக்கும். `ஜெயம்' படத்துடைய ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து கதை சொன்னார். வழக்கமா இல்லாமல் விஜய்க்கு வித்தியாசமான காஸ்ட்யூம் கொடுக்கலாம். ப்ரவுன் கலர் டோன்ல போகலாம்னு அப்போவே ஐடியா வந்திடுச்சு. அவர் கெட்டப்பை மாத்தினா என்ன?'னு ரமணாகிட்ட கேட்டேன். அவரும் விஜய்கிட்ட கேட்டார். `மாத்திடலாமே'னு செட் பண்ணதுதான் அவருக்கான அந்த லுக். செம ஸ்மார்ட்டா இருந்தார். அப்புறம், அதுவே செட்டாகிடுச்சு. விஜய் கூட வொர்க் பண்ணது ரொம்ப நல்ல அனுபவம். தொழில்ல மட்டுமல்ல பர்சனலாவும் அவர் ஒரு ஜென்டில்மேன்."

``தமிழ் ஒளிப்பதிவாளர்கள் இந்திய திரைப்பட உலகில் மோஸ்ட் வான்டட். இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்ததுனு நினைக்கிறீங்க?"

``சென்னையில ஃபிலிம் இன்ஸ்டியூட் இருக்கிறது முக்கிய காரணம். புனே, சென்னை இந்த ஃபிலிம் இன்ஸ்ட்யூட்ல படிச்சு வந்த ஒளிப்பதிவாளர்கள்தான் இந்தியா முழுக்க பெரிய அளவுல இருக்காங்க. அடிப்படை ரொம்ப உறுதியா இருக்கு. படிப்பு, அனுபவம், பெரிய ஒளிப்பதிவாளர்கிட்ட வேலை செய்ற வாய்ப்புனு எல்லாமே இருக்கிறதுனால இங்க உருவாகுற ஒளிப்பதிவாளர்களுக்கு டெக்னாலஜிக்கு தன்னை பொருத்திக்கிறது, வேகமா வொர்க் பண்றது, சொந்தமா துணிஞ்சு முடிவெடுக்கிறதுனு சில விஷயங்கள் சாதகமா இருக்குனு நினைக்கிறேன். அதனாலதான், தமிழ் ஒளிப்பதிவாளர்கள் மோஸ்ட் வான்டடா இருக்காங்க."

``மாஸ் ஹீரோவுடைய இன்ட்ரோ சாங், இல்லை அவங்களுக்கான மாஸ் சீன்ல ஒளிப்பதிவாளருடைய பங்கு என்ன?"

`சைரா நரசிம்ம ரெட்டி' ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் சிரஞ்சீவியுடன் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு

``சுவாரஸ்யமான கேள்வி. நான் தெலுங்கு படங்கள்ல இதை நிறைய சந்திச்சுட்டு இருக்கேன். ஒரு ஹீரோவுக்கு இயல்பை மீறின இமேஜ் கொடுக்கிறதுல ஒளிப்பதிவாளருடைய பங்கு நிறைய இருக்கு. அவங்களுக்கான பில்டப் எப்படியெல்லாம் இருக்கணும்னு பெரிய டிஸ்கஷன் போகும். `சைரா' படத்துல சிரஞ்சீவி சாருக்கான இன்ட்ரோ சீன் அவர் தண்ணிக்குள்ள ரொம்ப நேரம் தியானம் பண்ற மாதிரி. இந்தக் கேரக்டர் அந்தளவுக்கு சக்தி பெற்றவன்னு சொல்லிட்டாங்க. அவ்ளோ நேரம் தண்ணிக்குள்ள மூழ்கி எடுக்க முடியாது. அதனால, தண்ணி இல்லாமல் எடுத்துட்டு, அப்புறம், அதுக்கு தகுந்த மாதிரி லைட் செட் பண்ணி அந்த எஃபெக்ட் கொடுக்கலாம்னு சிஜி டீமோட சேர்ந்து முடிவு பண்ணோம். அதுக்கு ஒரு டெஸ்ட் எடுத்தோம். அதிகம் முடி வெச்சிருக்கிறதுனால தண்ணிக்குள்ள அவர் முடி ஆடணும். அதுக்கு ஒரு ப்ளோயரை வெச்சு முடியை ஆட வெச்சோம். மகேஷ்பாபுவோட `நேனொக்கடின்னே' ஹீரோ ஒரு ராக்ஸ்டார்ங்கிறதுனால அதுக்கான செட், லைட்டிங் போட்டோம். `ரங்கஸ்தலம்' படத்துல ஹீரோ சாதாரண மோட்டார் ஷெட் வெச்சிருக்கிற பையன்தான். ஆனா, அவனுக்கான இன்ட்ரோ ஒருத்தரை கொலை பண்ண சைக்கிள்ல போய்க்கிட்டிருக்கான் அப்படிங்கிறதுதான். டாப் ஆங்கிள்ல இருந்து ட்ரோன் சைக்கிள்கிட்ட வருது. பக்கத்துல வந்தவுடன் அவனுடய மூச்சு சத்தமும் சைக்கிள் சத்தமும் கேட்கும். அப்புறம், ஹீரோ முகத்தை காட்டலாம்னு சொன்னேன். அப்படிதான் ஓகே பண்ணோம். ஹீரோ இன்ட்ரோ சீன்னு சொன்னாலே ஒளிப்பதிவாளருக்கு டென்ஷன்தான். இயக்குநர் எழுதுறதை விஷுவலா மாத்த நிறைய யோசிக்க வேண்டியதா இருக்கு"

``நந்தா, பேரழகன், மாயாவி, வாரணம் ஆயிரம்... சூர்யா கேரக்டர்லயும் தோற்றத்துலயும் பயங்கர ஸ்கோப் இருக்கிற இந்தப் படங்களுக்கு நீங்கதான் ஒளிப்பதிவாளரா இருந்திருக்கீங்க. உங்களுக்கும் சூர்யாவுக்குமான நட்பு?"

ஒளிப்பதிவாளர் ரத்னவேலு

``சூர்யா எனக்கு தம்பி மாதிரி. `வாரணம் ஆயிரம்' படத்துக்கு பிறகு, அவர்கூட வொர்க் பண்ணலை. இருந்தாலும் என்கிட்ட நான் தெலுங்குல பண்ண படங்கள் பத்தி பேசுவார். ரொம்ப மெனக்கெட்டு பண்ணுவார். இயக்குநர் டேக் ஓகே சொல்லிட்டாலும் இவருக்கு திருப்தி இல்லைனா, இவர் ஒன் மோர் கேட்டு நடிப்பார். `நந்தா' பண்ணும்போதே சூர்யா வேற லெவல்ல வருவார்னு நிறைய பேர்கிட்ட சொல்லியிருக்கேன். நல்ல மனிதர். கெளதம் `மின்னலே' பண்றதுக்கு முன்னாடி சூர்யாவுக்கு கதை சொல்லணும்னு என்கிட்ட கேட்டார். ஏன்னா, அப்போ இருந்தே எனக்கும் சூர்யாவுக்கும் பழக்கம். சூர்யா கதைக்கேட்டுட்டு என்கிட்ட, `கதை சூப்பரா இருக்கு. ஆனா, நான் அதுக்கு சரியா இருப்பேனானு தெரியலை. இப்போ பண்ண முடியாது'னு சொல்லிட்டார். நானும் கெளதம்கிட்ட சொல்லிட்டேன். `நந்தா' படத்துல ஆக்‌ஷன் சூர்யாவுக்கு சூப்பரா செட்டாகி இருந்தது. அதைப் பார்த்துட்டு `மின்னலே' முடிச்சதோட மறுபடியும் சூர்யாவை கெளதம் அணுக, இந்தமுறை ஓகே சொல்லிட்டார். ஆனா, வெவ்வேற படங்கள் இருந்ததுனால என்னால அவங்களோட சேர்ந்து பயணிக்க முடியலை. `வாரணம் ஆயிரம்'தான் எங்களை சேர்த்தது."

Also Read: ``சிம்ரன், த்ருவ் பிடிக்கும்... கமர்ஷியல்ல எதெல்லாம் முக்கியம்?'' - ஷங்கர்

``உங்களுடைய படத்தை எப்போ எதிர்பார்க்கலாம், என்ன ஜானர்ல இருக்கும்?"

ஒளிப்பதிவாளர் ரத்னவேலு

``கடந்த ஆறு வருஷமா நான் படத்தை இயக்கணும்னு பிளான் பண்ணிட்டு இருக்கேன். ஆனா, அடுத்தடுத்து பெரிய படங்கள் வந்திட்டு இருக்கு. ஸ்கிரிப்டை முழுமையா முடிச்சு ரெடி பண்ணி வெச்சிருக்கேன். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானர் அது. `இந்தியன் 2' படத்தை முடிச்சதும், டைரக்‌ஷன் பத்தி யோசிக்கணும்."



source https://cinema.vikatan.com/tamil-cinema/cinematographer-rathnavelu-speaks-on-his-23-years-of-cinema-career

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக