Ad

சனி, 18 ஜூலை, 2020

1983 உலகக் கோப்பையின் Unsung ஹீரோ... இந்தியா ஏன் ரோஜர் பின்னியை மறந்தது?! #HBDRogerBinny

1983 உலகக் கோப்பை! இந்திய அணியின் கடைசி லீக் போட்டி. பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இங்கிலாந்து மண்ணில் எதிர்கொண்டது இந்தியா. ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் லீக் போட்டியில் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்திருந்தது. வெற்றி என்பதைத் தாண்டி அந்தப் போட்டிக்கும் சேர்த்துப் பழி தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது இந்திய அணி.

Roger Binny

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார் கபில்தேவ். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான யஷ்பால் ஷர்மாவும் சந்தீப் பட்டேலும் பார்ட்னர்ஷிப் அமைத்து, இந்திய அணி 150 ரன்களுக்கு மேல் எடுக்க உதவினர். 6-வது டவுன் இறங்கிய ரோஜர் பின்னி 32 பந்துகளைச் சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 21 ரன்களைச் சேர்த்து ரன் அவுட் மூலம் வெளியேறினார். ரோஜர் பின்னியின் 21 ரன்கள் மூலம் இந்தியா 200 ரன்களைத் தாண்டியது. அதன்பின் ஆடிய இந்திய பெளலர்கள் சேர்த்த சொற்ப ரன்களும் ஆஸ்திரேலிய பெளலர்கள் வாரி வழங்கிய 37 எக்ஸ்ட்ராஸ்களும் இந்திய அணி 247 ரன்களைக் குவிக்க உதவியது.

இந்திய அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில், இந்திய பெளலர்களை வெளுத்து வாங்கி, 60 ஓவர்களில் 320 ரன்களைச் சேர்த்திருந்தது ஆஸ்திரேலியா. இந்தப் போட்டியில், `248 ரன்கள்தானே எளிதாக அடித்துவிடுவார்கள்' என்பதுதான் அநேக ரசிகர்களின் எண்ணமாக இருந்தது. அந்த எண்ணத்தை தன் பந்துவீச்சு மூலம் சுக்குநூறாக உடைத்தார் ரோஜர் பின்னி. ஆஸ்திரேலிய அணியின் மூன்று முக்கிய விக்கெட்டுகளோடு சேர்த்து மொத்தம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்து காட்டினார் பின்னி.

ரோஜர் பின்னி - 1983 உலகக் கோப்பை
அதற்கு முன்பான சில போட்டிகளில், பின்னி சிறப்பாகப் பந்துவீசியிருந்தாலும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திப் பழி தீர்த்த அந்தத் தருணத்தில்தான் இந்திய ரசிகர்கள் பின்னியை ஹீரோவாகக் கொண்டாடத் தொடங்கினர்.

பேட்டிங்கில் 21 ரன்கள், பெளலிங்கில் 29 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் என ஆல்ரவுண்ட் பர்ஃபாமன்ஸ் காட்டி ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார் பின்னி. இந்த வெற்றியின் மூலம், ஒரு சிறப்பான வெற்றியோடு இங்கிலாந்து மண்ணில் வீரநடை போட்டு அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா.

ஆல் ரவுண்டரான ரோஜர் பின்னி 1983 உலகக் கோப்பையில் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை என்றாலும் மிகச் சிறப்பாகப் பந்து வீசியிருந்தார். இங்கிலாந்து பிட்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களால் சாதிக்க முடியாது என்ற கருத்து நிலவி வந்த காலகட்டத்தில், 18 விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்தத் தொடரிலேயே அதிக விக்கெட் வீழ்த்தியவராகச் சாதித்துக் காட்டியது பின்னியின் க்ளாஸுக்கு உதாரணம்.

Roger Binny

1983 உலகக் கோப்பையின் லீக் போட்டிகளில் மட்டுமல்ல அரையிறுதி, இறுதிப் போட்டிகளிலும் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் பின்னி. அரையிறுதிப் போட்டியில், 69 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி பலமாக இருந்த இங்கிலாந்து அணியின் ஓப்பனர்கள் இருவரையும் அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்பி, இங்கிலாந்து அணியை பலம் இழக்கச் செய்தார் பின்னி. இறுதிப் போட்டியில்கூட மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவான் கிளைவ் லாய்டை வெறும் 8 ரன்களுக்கு பெவிலியன் அனுப்பியது ரோஜர் பின்னிதான். ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கிய ஆல் ரவுண்டராக இருந்த ரோஜர் பின்னியை காலப் போக்கில் கிரிக்கெட் ரசிகர்கள் மறந்து போனது அல்லது நினைக்கத் தவறியது வருத்தத்திற்குரிய விளையாட்டுச் செய்திதான்.

Roger Binny In 1983 Worlc cup - Infographics

இப்போதுள்ள இந்தியக் கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் 1983 உலகக் கோப்பையில் விளையாடிய கபில்தேவை மட்டுமே தெரிந்திருக்கிறது. 1983 உலகக் கோப்பையைக் கைப்பற்றியதில் ரோஜர் பின்னிக்கும் மிகப் பெரிய பங்குண்டு.

Also Read: 26 வயதினிலே... சச்சினுக்கும் கோலிக்கும் இவ்வளவு ஒற்றுமைகளா? #MotherOfCoincidencesInCricket

1992-ம் ஆண்டு உலகக் கோப்பையில்தான் தொடர் நாயகன் விருது கொடுப்பது அறிமுகப்படுத்தப்பட்டது. ஒருவேளை 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையில், தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டிருந்தால், அதற்கான ரேஸில் கடும் போட்டியை ஏற்படுத்தியவர்களுள் ஒருவராக இருந்திருப்பார் பின்னி.

ரோஜர் பின்னி வெறும் உலகக் கோப்பையில் மட்டும் சிறப்பாக விளையாடியவர் அல்ல... நீண்ட நேரம் விக்கெட்டே விழாமல் இருக்கும் சமயத்தில் விக்கெட் எடுத்துக் கொடுப்பது, இந்திய அணியின் டாப் ஆர்டர் சரிவைச் சந்திக்கும்போது ரன்கள் சேர்ப்பது எனப் பல நேரங்களில் பாகுபலியாக இந்திய அணியைத் தூக்கிப் பிடித்து அசத்தியிருக்கிறார் பின்னி. அதில் இரண்டு போட்டிகளை அடுத்தடுத்து காணலாம்...

முதல் போட்டி, 1983-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராகப் பெங்களூருவில் நடந்த டெஸ்ட் போட்டி. 81 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையிலிருந்தது இந்திய அணி. அந்த நிலையில் களமிறங்கினார் பின்னி, அடுத்த சில நிமிடங்களில் கவாஸ்கரும் பெவிலியனுக்குச் செல்ல நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் பின்னி. 7-வது விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்தது பின்னி-மதன் லால் இணை.

பாகிஸ்தானுக்கு எதிரான அந்தப் போட்டியில், கடைசி வரை ஆட்டமிழக்காமல், 233 பந்துகளைச் சந்தித்து 83 ரன்களைச் சேர்த்து, ஒரு பிரமாதமான டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடி அணியை மீட்டிருந்தார் ரோஜர் பின்னி!

இரண்டாவது போட்டி, 1987-ம் ஆண்டு அதே பாகிஸ்தான் அணிக்கெதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி. அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 52 ரன்களைச் சேர்த்து இந்திய அணி 400 ரன்களுக்கு மேல் எடுக்க உதவினார் பின்னி. பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸில், அந்த அணியின் ஓப்பனர் ஷோயப் முகமது ரன் அவுட் ஆன பிறகு நீண்ட நேரம் விக்கெட்டே விழாமல் இருந்தது. அதன் பின் இன்னொரு ஓப்பனர் ரமீஸ் ராஜாவின் விக்கெட்டை எடுத்தார் ரவி சாஸ்திரி. அதன் பின்னும் 178 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்தது பாகிஸ்தான் அணி. அந்தச் சமயத்தில் 'எனக்கு விக்கெட் வேண்டும்' என்று பின்னி கையில் பந்தை ஒப்படைத்தார் அப்போதைய இந்தியக் கேப்டன் கபில்தேவ். வரிசையாக அடுத்தடுத்த ஓவர்களில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி 229 ரன்களுக்கு பாகிஸ்தானைச் சுருட்டினார் ரோஜர் பின்னி. அந்த மேட்ச் டிராவில் முடிந்தாலும் மேன் ஆஃப் தி மேட்ச் விருது பின்னிக்கே கிடைத்தது.

இவ்வாறு அணிக்கு விக்கெட்டோ ரன்களோ தேவைப்படும்போது தன் பங்களிப்பைத் தந்து பல முறை அணியை மீட்டெடுத்திருக்கிறார் பின்னி. அணியை மட்டுமல்ல சில சமயங்களில் அணி வீரர்களைக்கூட மீட்டிருக்கிறாராம் பின்னி. அதெப்படி என்கிறீர்களா?

1983 world cup team

1983 உலகக் கோப்பை தொடரின்போது நடைபெற்ற ஒரு பார்ட்டியில், வீரர்கள் அனைவரும் நீச்சல் குளத்திற்கு அருகே கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது இந்திய அணி வீரரான கீர்த்தி ஆசாத், ரோஜர் பின்னியை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு விளையாடியிருக்கிறார். அதைத் தொடர்ந்து அணியின் மற்ற வீரர்கள் ஆசாத்தை நீச்சல் குளத்தில் தள்ளிவிட, நீச்சல் தெரியாத ஆசாத் தத்தளித்திருக்கிறார். உடனே மீண்டும் தண்ணீரில் குதித்து ஆசாத்தை மீட்டெடுத்திருக்கிறார் பின்னி.

ரோஜர் பின்னி இந்திய அணிக்காக 1979 முதல் 1987 வரை விளையாடியிருக்கிறார். பின்னி, ஒரு பெளலிங் ஆல் ரவுண்டராகவே வலம் வந்திருந்தாலும், பேட்டிங்கிலும் நேர்த்தியான ஷாட்களை ஆடக் கூடியவர். அதுமட்டுமல்லாமல் இக்கட்டான சூழ்நிலைகளில் அணிக்குத் தேவையான ரன்களை அடித்துத் திறம்படவே செயல்பட்டிருக்கிறார் பின்னி. தனது 8 ஆண்டுக்கால சர்வதேச கிரிக்கெட்டில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருந்தாலும் இந்தியாவின் `ஆல் டைம் பெஸ்ட்' ஆல் ரவுண்டர்களை பட்டியலிட்டால் பின்னிக்கு நிச்சயம் முக்கிய இடமுண்டு.

Roger Binny Stats
இந்திய டெஸ்ட் அணியில் ஆடிய முதல் ஆங்லோ இந்திய வீரர் ரோஜர் பின்னிதான்!

பின்னி ஓய்வு பெற்ற பிறகும் கிரிக்கெட்டுடன் நெருங்கிய தொடர்பிலேயே இருந்தார். 1987-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் 1992 வரை கர்நாடகா அணிக்காக முதல் தரப் போட்டிகளில் ஆடினார் பின்னி. அதன்பின் 1999-2000-ம் ஆண்டுகளில், முகமது ஃகைப் தலைமையிலான இந்தியாவின் ஜூனியர் அணிக்குப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று, திறம்படச் செயலாற்றி, இந்திய அணியின் முதல் ஜூனியர் உலகக் கோப்பை வெற்றிக்கு வழி வகுத்தார். பின்னர் 2012-ம் ஆண்டு இந்திய அணியின் தேர்வுக் குழுவில் இடம்பெற்றார்.

தற்போது கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள `பந்திப்பூர் தேசியப் பூங்கா'வின் அருகில் உள்ள தன் சொந்த நிலத்தில் விவசாயம் செய்வதோடு, ஒரு மாந்தோப்பையும் உருவாக்கியிருக்கிறார் பின்னி.

Also Read: பார்ட்னர்ஷிப்களின் மன்னன்... நாட்வெஸ்ட்டின் நாயகன்... ஆனால் 26 வயதிலேயே வாக் அவுட்... ஏன்? #HBDKAIF

2000 Under-19 World cup

வனவிலங்குகளை அதிகம் விரும்பும் பின்னியின் மாந்தோப்புக்கு, அருகில் இருக்கும் பந்திப்பூர் தேசியப் பூங்காவிலிருந்து யானைகள், சிறுத்தைகள், காட்டு நாய்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி வருமாம். இந்த 3 மாத கால லாக்டௌனில், அவரது மாந்தோப்பில் விவசாயம் பார்த்துக்கொண்டு வனவிலங்குகளையும் ரசித்துக்கொண்டு உற்சாகமாக இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார் பின்னி.

இன்றைய தலைமுறை கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பின்னியைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்திய அணியின் 1983 உலகக் கோப்பை வெற்றியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் `1983' படத்தில், நிஷாந்த் தாகியா என்ற நடிகர் ரோஜர் பின்னியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். இந்தப் படம் வெளியான பின்பு உலகக் கோப்பை வெற்றியில் ரோஜர் பின்னியின் பங்கு என்னவென்பதை இந்தத் தலைமுறையும் நிச்சயம் அறிந்துகொள்ளும்.

1983 movie poster

Also Read: கபில் தேவ் - ரன்வீர் சிங்... ஶ்ரீகாந்த் - ஜீவா... 1983 ரியல் அண்டு ரீல் ஹீரோஸ்! #VikatanPhotoCards

பிறந்தநாள் வாழ்த்துகள் ரோஜர் பின்னி!


source https://sports.vikatan.com/cricket/birthday-article-about-indian-world-cup-hero-roger-binny

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக