Ad

ஞாயிறு, 19 ஜூலை, 2020

புதுக்கோட்டை: இறுதிச்சடங்கில் கூடிய உறவினர்கள்! - ஒரே குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதுக்கோட்டையில் கடந்த மாதம் வரையிலும் 100-க்கும் குறைவாக இருந்த தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1,000-ஐ தாண்டியுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால்தான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. புதுக்கோட்டை அருகே அன்னவாசலைச் சேர்ந்த ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் காரணமாகத் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு கொரோனா இருந்தால், அங்கேயே அடக்கம் செய்யச் சொல்லி உறவினர்கள் கூறியுள்ளனர். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் இறந்தவருக்கு கொரோனா நெகட்டிவ் எனக் கூறி அவர்களிடம் உடலை ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. கொரோனா இல்லை என்று தெரிந்தவுடன் உடலை வாங்கி வந்த உறவினர்கள் சொந்த ஊரில் தங்களது சமுதாய முறைப்படி இறந்தவரின் உடலை அடக்கம் செய்தனர்.

Also Read: `நான் ஒரே மகன்.. இறுதிச் சடங்கு செய்ய வேண்டும்' -தந்தை மரணத்தால் துபாயில் தவிக்கும் கடலூர் இளைஞர்

இறுதிச்சடங்கில் குடும்பத்தினர் உட்பட உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த நிலையில்தான் மறுநாள் காலை இறந்தவருக்குக் கொரோனா தொற்று இருந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தனர். உறவினர்கள் கூடி அடக்கம் செய்ததால் குடும்பத்தினர் உட்பட உறவினர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியடைந்தனர். இறந்தவரின் குடும்பத்தினர் உட்பட உறவினர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டு சுமார் 25 பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில், இறந்தவரின் குடும்பத்தினர் 10 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா

மேலும், இறுச்சடங்கில் பங்கேற்ற பலரும் தாமாக முன்வந்து தங்களுக்குப் பரிசோதனை செய்யக்கோரி பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். இறுதிச்சடங்கில் பங்கேற்ற பலருக்கும் இன்று பரிசோதனை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கொரோனா பரிசோதனை முடிவு முழுமையாகத் தெரிவதற்கு முன்பாக இறந்தவரின் உடலை மருத்துவமனை நிர்வாகம் கொடுத்ததால்தான், பலருக்கும் தொற்று பரவியுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அன்னவாசலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



source https://www.vikatan.com/news/death/10-from-a-family-tested-corona-positive-after-attending-a-funeral

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக