Ad

ஞாயிறு, 19 ஜூலை, 2020

ஆகஸ்ட் 1 முதல் ஊரடங்கு தளர்வு? முதல்வர் எடுத்த முக்கிய முடிவு... பின்னணி தகவல்கள்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தமிழகத்தில் 1.65 லட்சத்தைக் கடந்துள்ளது. இதில் 1.13 லட்சம் பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 49,452 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 2,403 ஆக உள்ளது. மார்ச் 25-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், தொழில் நிறுவனங்கள், வியாபாரத் தளங்கள் முடங்கியுள்ளன. ஒரு சில வாரங்கள் ஓடிய பேருந்துகளையும் தற்போது முற்றிலுமாக ஜூலை 31-ம் தேதி வரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி

இந்த முடக்கத்தால் 85,000 கோடி ரூபாய் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில்தான், கொரோனா ஊரடங்கை நீட்டிப்பதா, வேண்டாமா என்பதை தீர்மானிப்பது குறித்து அமைச்சரவைக் கூட்டம் கடந்த ஜூலை 14-ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

Also Read: 'எடப்பாடி ஆட்சிக்கு சிக்கல் வருவதை விரும்பும் பி.ஜே.பி' - பின்னணி என்ன?

``கொரோனா ஊரடங்கால தொழில்கள் எல்லாம் நசுங்கிப் போயிடுச்சு. இதுக்கு மேலயும் ஊரடங்கை நீட்டிச்சுகிட்டு இருந்தா எந்த வருவாயும் இருக்காது. நீங்க என்ன நினைக்குறீங்க?” என அமைச்சரவைக் கூட்டத்திலேயே மற்ற அமைச்சர்களிடம் முதல்வர் கருத்து கேட்டுள்ளார். முதல்வரின் கருத்தை ஆமோதிப்பதாக அமைச்சர்களும் கூறியுள்ளனர். பின்னர் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடமும் கொரோனா சிகிச்சையில் இருக்கும் அமைச்சர் தங்கமணியிடமும் ஊரடங்கை தளர்வு செய்வது குறித்து விவாதித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி - வேலுமணி

``முழுவதுமாக திறந்துவிட்டால் ஏகப்பட்ட நெருக்கடியாகிவிடும். இன்னும் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரவில்லை. மக்களிடமும் கட்டுப்பாடு இல்லை. மருந்து நம் கைக்கு வந்த பிறகு முழு தளர்வை அறிவிக்கலாம். அதுவரை தொழில் நிறுவனங்களுக்கும் கட்டுமான தொழில்களுக்கும் விலக்கு அளிக்கலாம். பொதுப் போக்குவரத்தை 50 சதவிகிதம் அளவுக்கு திறந்துவிடலாம். சினிமா ஷூட்டிங்கிற்கு அனுமதி அளிக்கலாம்” என சீனியர்கள் ஆலோசனை அளித்துள்ளனர்.

அரசியலும் ஊரடங்கும்

ஊரடங்கை தளர்வு செய்வதற்கு வெறும் பொருளாதாரம் மட்டுமல்ல, சில அரசியல் காரணங்களும் முன்வைக்கப்படுகிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க சீனியர் ஒருவர், ``வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, புதிய திருத்தங்களை மேற்கொள்ளும் பணி ஆகியவை ஆகஸ்ட் மாதம் தொடங்கப் பெறும். இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஜூலை மத்தியில் வெளியிடும். இப்பணியில் ஆசிரியர்களும் வருவாய்த்துறை அலுவலகர்களும்தான் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்நேரம் வரையில் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்கான அறிவிப்பு வெளிவரவில்லை.

தேர்தல் ஆணையம்

அப்படியே அறிவிப்பை வெளியிட்டாலும், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களையும் வருவாய்த்துறையினரையும் வேறு பணிக்கு மடைமாற்றுவது சிரமமாகிவிடும். வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்க்காமல் தேர்தலை நடத்திடக் கூடாது என யாராவது வழக்கு தொடர்ந்தால், தேர்தல் தள்ளிப்போகும் வாய்ப்புள்ளது. இதற்காகத்தான் ஊரடங்கை தளர்வு செய்து நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் ஊரடங்கைத் தளர்வு செய்து, செப்டம்பர் மாதத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை தொடங்கலாம் என ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Also Read: “நடப்பாண்டில் கொரோனா தடுப்பூசி வர வாய்ப்பில்லை..!” - மருத்துவ ஸ்டார்ட்அப் சொல்லும் உண்மை!

கட்டுமானப் பணியிலும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப்பணியிலும் ஈடுபட்டு வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் ஊருக்குச் சென்றுவிட்டனர். அவர்களை மீண்டும் தமிழகத்துக்கு அழைத்துவந்து பணிகளைத் தொடங்க வேண்டுமானால், இங்கு இயல்பு நிலை திரும்பியாக வேண்டும். ஏகப்பட்ட டெண்டர்கள் அந்தரத்தில் தொங்குவதால், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காகவும் ஊரடங்கை தளர்வு செய்ய வேண்டிய நெருக்கடி எடப்பாடிக்கு ஏற்பட்டிருக்கிறதாம்.

எடப்பாடி பழனிசாமி

அமைச்சர்கள் தங்கமணி, நிலோஃபர் கபிலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்கள். கிருஷ்ணகிரி தி.மு.க எம்.எல்.ஏ செங்குட்டுவன் உட்பட பல எம்.எல்.ஏ.க்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனாலும் மாநிலத்தின் வருவாய் அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதால், `தங்கள் உடல்நிலையை மக்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். சமூக விலகல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றைக் கடைப்பிடித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்’ என்று அறிவித்துவிட்டு ஊடரங்கை தளர்வு செய்யும் முடிவுக்கு எடப்பாடி வந்திருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் திடீரென கொரோனா மரணங்கள் அதிகரித்து, தொற்று வேகமாக பரவினால் எடப்பாடியின் முடிவில் மாற்றம் ஏற்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/news/edappadi-palanisamy-took-new-decision-on-lockdown-restrictions-from-august-1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக