சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி செயல் இயக்குநர் (Executive Director & State Head ) வி.சி.அசோகன், பேசும் போது, ``தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு புதிய திட்டங்களுக்காக இந்தியன் ஆயில் நிறுவனம் ரூ.54 ஆயிரம் கோடியை மூதலீடு செய்துள்ளது. கூடவே பசுமையான தூய்மையான எரிபொருளை வழங்குவதை உறுதி செய்யும் பொறுப்பையும் இந்தியன் ஆயில் தன் தோள்களில் சுமந்துள்ளது. இதைப் பொறுத்தவரை, COP-26 உச்சிமாநாட்டில் பஞ்சாமிர்த இலக்குகளின் ஒரு பகுதியாக 2070-ம் ஆண்டுக்குள் பிரதமரால் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் நிகரப் பூஜ்ஜிய உறுதிப்பாட்டுடன் நாங்கள் இணைந்துள்ளோம். இந்தியன் ஆயில் ஏற்கனவே 2046-ம் ஆண்டிற்குள் நிகர-பூஜ்ஜியச் செயல்பாட்டு உமிழ்வை அடையத் தீர்மானித்துள்ளது.
பசுமை ஆற்றலுக்கு நாட்டை மாற்றுவதற்கு ஒரு வலுவான பசுமை நிகழ்ச்சி நிரலை பின்பற்றி வருகிறோம். உயிரி எரிபொருள்கள், உயிரி எரிபொருள்கள், புதுப்பிக்கத்தக்கவை பசுமைஹைட்ரஜன், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மூலம் கார்பன் ஈடுசெய்தல் பணிகளிலும் செயலாற்றி வருகிறோம்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெட்ரோலுடன் 10 சதவிகித எத்தனால் கலப்பை எட்டி இருக்கிறோம். 2025 -ம் ஆண்டிற்குள் இதை 20 சதவிகிதமாக உயர்த்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறோம்.
மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 26 சில்லறை விற்பனை நிலையங்களில் 20 சதவிகித எத்தனால் கலக்கப்படப் பெட்ரோல் (E-20) விநியோகம் நடைபெற்று வருகிறது. 2024-ம் ஆண்டுக்குள் இதை 66 நிலையங்களுக்கு விரிவுபடுத்த உள்ளோம். 100 சதவிகிதம் எத்தனால் மூலம் கூட வாகனங்களை இயக்கலாம். இதன் மூலம் எரிபொருள் விலையும் குறையும். ஆனால், தற்போது உள்ள வாகனங்கள் எத்தனாலுக்கு ஏற்ற வகையில் இல்லை. வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுடன் இது சம்பந்தமாகப் பேசி வருகிறோம்.
இந்தியன் ஆயில் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் 400 EV சார்ஜிங் நிலையங்களை நிறுவியுள்ளது. மேலும் 300 நிலையங்களைத் தமிழகத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். சென்னை விமான நிலையத்திலும் ஒரு EV சார்ஜிங் நிலையம் அமையவிருக்கிறது. நாமக்கல்லில் உள்ள பயோ கேஸ் உற்பத்தி ஆலையில் ஐஸ்வர்யம் என்ற பெயரில் இயற்கை உரம் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இது விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தின் மூலம் மரகன்றுகள் நடும் பணியிலும் ஈடுப்பட்டு வருகிறோம் ’’ என்றார்.
இந்நிகழ்வில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (நிறுவன தொடர்பு) முதன்மை பொது மேலாளர் வெற்றிச்செல்வன், மண்டல சேவைகள் பிரிவு இயக்குநர் தனபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
source https://www.vikatan.com/environment/policy/ethanol-fuel-organic-fertilizer-indian-oil-company-green-work
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக