அனைவருக்கும் பசுமை வணக்கம்!
‘‘நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 10 நாள்களில் அகற்றவில்லை என்றால், தமிழகத் தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட வேண்டியிருக்கும். ஆக்கிரமிப்பை அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் உட்பட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்; ஊதியம் பெற அனுமதிக்க முடியாது.”
- கடந்த சில தினங்களுக்கு முன் இப்படி அதிரடி கிளப்பியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். சென்னையின் பெத்தேல் நகர் உட்பட இரண்டு இடங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை சமீபத்தில் கறாராக அகற்ற வைத்தது இதே உயர் நீதிமன்றம். ஏழைகள், எளியவர்கள், நடுத்தர மக்கள்... போக்கிடம் இல்லாமல் ஆக்கிரமித்துவிட்டார்கள் என்றெல்லாம் இரக்கப்பட்டுவிடாமல், நீர்நிலைகளைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்கிற நீதிமன்றத்தின் அக்கறை போற்றுதலுக்குரிய ஒன்றுதான் என்பதில் துளியும் சந்தேகமில்லை!
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருந்த பெத்தேல் நகர் மக்களை, காலி செய்த சென்னை உயர் நீதிமன்றம், தன்னுடைய மதுரைக் கிளை அமைந்திருப்பதே, உலகனேரி என்கிற மிகப்பெரிய கண்மாயில்தான். அதுவும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் என்பதை ஏன் கணக்கில் எடுக்கவில்லை என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது. சரி, நீதிமன்றம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. இதோ, மாண்புமிகு நீதிபதிகளுக்காக சென்னை, நெற்குன்றம் ஏரியை ஆக்கிரமித்து அடுக்குமாடிக் குடியிருப்புகள் தற்போது கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இரவு-பகலாக வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன. ஏற்கெனவே, இந்த ஏரியின் ஒரு பகுதி ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்பட்டுவிட்டன.
போக்கிடம் இல்லாமல் ஆக்கிரமித்த ஏழை எளியவர்களைக்கூட வெளியேற்றிய நீதிமான்கள், லட்சம் லட்சமாக சம்பளம் வாங்கும் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளுக்காகவும் நீதிபதிகளுக்காகவும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதைக் கண்டும் காணாமல் இருப்பது என்ன நியாயம்?
- ஆசிரியர்
source https://www.vikatan.com/government-and-politics/agriculture/waterbody-encroachment-by-people-but-court-building-also-encroached
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக