Ad

புதன், 3 ஆகஸ்ட், 2022

``எடப்பாடி தலைமையில் பதவி; பன்னீர் தலைமையில் மா.செ-க்கள்” - விருதுநகர் அதிமுக-வில் நடப்பது என்ன?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் தினம், தினம் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது. ஆட்சிக்கொருத்தர், கட்சிக்கொருத்தர் என இரட்டை குதிரைகள் பூட்டிய வண்டியாய் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் அ.தி.மு.க.தொண்டர்கள் இயங்கி வந்தனர்.

எனினும் ஒற்றைத் தலைமை என்னும் விவகாரம் அ.தி.மு.க.வில் புகைச்சலை ஏற்படுத்தி பின்னாளில் பெரும் பூகம்பத்தையே உண்டுபண்ணியது. இதற்கிடையே, கட்சிப் பொதுக்குழுக்கூட்டம் நடத்த எடப்பாடி தரப்பில் முடிவு செய்யப்பட்டது.

அ.தி.மு.க பொதுக்குழு

தொடர்ச்சியாக, அ.தி.மு.க.பொதுக்குழுவுக்கு தடைக்கோரி ஓ.பி.எஸ். தரப்பில் தொடரப்பட்ட வழக்கிலும் கூட பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, நடைபெற்ற அ.தி.மு.க.பொதுக்குழு கூட்டத்தில் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுச்செய்யப்பட்டார். சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார் உள்பட அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், பெஞ்சமின் உள்பட கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலருக்கும் முக்கியப்பொறுப்புகள் வழங்கப்பட்டன.

அ.தி.மு.க.வில் நடந்த இந்த அதிரடி மாற்றத்தைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி. மற்றும் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக செயல்பட்ட வைத்திலிங்கம் உட்பட்டவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி அ.தி.மு.க.வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இந்த உறுப்பினர் நீக்கத்தை எதிர்த்தும், அ.தி.மு.க.வுக்கு உரிமைக்கோரியும் ஓ.பி.எஸ்.தரப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் போட்டிக்கு, போட்டியாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயக்குமார், சி.வி.சண்முகம் உள்பட பலரை கட்சியிலிருந்து நீக்கி ஓ.பி.எஸ். அறிவிப்பு வெளியிட்டார்.

இ.பி.எஸ்.,ஓ.பி.எஸ்.

இதுதவிர, தமிழ்நாடு முழுமைக்கும் பல்வேறு மாவட்டங்களில் அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளவர்களை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்தும் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில், விருதுநகர் மாவட்டத்தில் எடப்பாடி தரப்பு ஆதரவாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கி ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதற்கு பதிலாக, விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை தொகுதியை உள்ளடக்கி விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக பாலகங்காதரன், சாத்தூர், சிவகாசி தொகுதிகளை உள்ளடக்கி விருதுநகர் மத்திய மாவட்டச் செயலாளராக தெய்வம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் தொகுதிகளை உள்ளடக்கி விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளராக கதிரவன் ஆகியோரை நியமித்து ஓ.பி.எஸ்.அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான போஸ்டர்கள் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பிறகு, அவருக்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகளும் மாவட்டம் வாரியாக கணக்கெடுக்கப்பட்டு கட்சிப் பொறுப்பிலிருந்து எடப்பாடி நீக்கி வருவது தெரிந்த கதைத்தான். எனினும் விருதுநகர் மாவட்டத்திலிருந்து அப்படி எந்தவொரு பட்டியலும், தலைமைக்கு கொடுக்கப்படவில்லை என்றே இங்குள்ள அ.தி.மு‌.க.வினர் கூறுகின்றனர். இந்நிலையில், ஓ.பி.எஸ்.ஸின் ஆதரவாளர்கள் என சொல்லும் வகையில் புதிதாக வெளியாகியிருக்கும் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் உள்ளூர் அதிமுக-வில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓ.பி.எஸ்.

ஓ.பி.எஸ்.அணி தரப்பில் விருதுநகர் மாவட்டத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள் மூவருமே, எடப்பாடி தலைமையில் கீழ் ஏற்கனவே பொறுப்பில் இருந்து வருகிறார்கள். அதன்படி, மாவட்ட மாணவர் அணி செயலாளராக கதிரவனும், மாவட்ட இலக்கிய அணி செயலாளராக தெய்வமும், மாவட்ட கலைப் பிரிவு செயலாளராக பால கங்காதரனும் இ.பி.எஸ். தலைமை அ.தி.மு.க. தலைமையில் பொறுப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விளக்கம் கருத்து கேட்க எடப்பாடி தரப்பு ஆதரவாளரும், விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை.

விருதுநகர் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பம்குறித்து தொண்டர்களிடம் பேசினோம். ``கட்சிக்குள்ள நடக்கிற எந்தவொரு விஷயமானாலும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி காதுக்கு போகாம இருக்காது. விருதுநகர் மாவட்டத்துல அவர் எடுக்கறது தான் கடைசி முடிவா இருக்கும். அதனால எந்த நிர்வாகியும், எந்த தொண்டனும் அவர் பேச்சை மீறி செயல்பட மாட்டாங்க. அதனாலதான் எடப்பாடி - ஓ.பி.எஸ்.தலைமை சண்ட வந்தப்போ கூட விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 2 மாவட்ட செயலாளர்களும் இ.பி.எஸ். தரப்புக்கு ஆதரவு தெரிவிச்சாங்க.

போஸ்டர்

எல்லா மாவட்டத்திலேயும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை நீக்கம் செஞ்சப்போ கூட விருதுநகர் மாவட்டத்திலிருந்து அப்படி எந்தவொரு பட்டியலையும் கே.டி.ஆர்.கொடுக்கல. ஆனா, இப்போ ஓ.பி.எஸ்.தரப்பில் புதுசா மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுருக்காங்க. இதப்பார்க்குறப்போ கட்சிக்கெதிரா செயல்படுறவங்கள அடையாளம் தெரிஞ்சும் அவங்கள தலைமைக்கு காட்டிக் கொடுக்காமல் விட்டுவிட்டாரோனு நினைக்க தோணுது" என்றார்.

உள்ளாட்சித் தேர்தலையொட்டி வெற்றிபெற்ற அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு தி.மு.க.வில் ஐக்கியமான நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க.வின் கூடாரம் காலியாகிவிட்டதாக பேச்சு அடிபட்டது. ஆகவே தற்போது இருப்பவர்களையும் இழந்துவிட்டால் ஒட்டுமொத்தமாக எல்லாம் அஸ்தனமாகிவிடும் என்ற அச்சத்தினாலேயே அவர், கட்சித் தலைமைக்கு இதுகுறித்து சொல்லாமல் இருந்திருப்பார் என ரகசியம் பேசிக்கொள்கின்றனர் ர.ர-க்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/virudhunagar-admk-confuse-after-ops-favor-district-secretaries-poster

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக