சென்னை மணலி அறிஞர் அண்ணாநகரைச் சேர்ந்த நாகராஜன் என்ற பெயின்டிங் கான்டிராக்டர் ஆன்லைன் சூதாட்டத்தில் 20 லட்ச ரூபாய் வரை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். சில நாள்களுக்குமுன் அதேபகுதியின் புதுநகரைச் சேர்ந்த பவானி என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 3 லட்ச ரூபாயை இழந்ததோடு 20 சவரன் தங்க நகைகளை விற்று அதில் வந்த பணத்தையும் இழந்திருக்கிறார். இதனால் மன உளைச்சலிலிருந்தவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். கடந்த வாரத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி 5 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த இளைஞர் ஒருவர், கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் நடந்திருக்கிறது. அரூர் அருகே, ‘ஆன்லைன் ரம்மி’ சூதாட்டத்தில் பணத்தை இழந்த, தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
தருமபுரியில் ஆன்லைன் ரம்மி மற்றும் கேரளா லாட்டரியில் பல லட்சங்களை இழந்த இளைஞர் கடன் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இப்படிப் பாலின வேறுபாடின்றி சமூகத்தின் அனைத்துப் படிநிலையில் இருப்பவர்களும் ஆன்லைன் சூதாட்டத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்வது தொடர் கதையாகியிருக்கிறது.
மத்திய அரசோ ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு, மாநில அரசுகளிடமே உள்ளது எனத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சிக்கிம் உள்ளிட்ட சில மாநிலங்களைப்போலத் தமிழ்நாட்டிலும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும் எனப் பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. தொடர் தற்கொலைகள் நடந்துவரும் சூழலில் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதில் மெத்தனம் காட்டுகிறதா என்ற கேள்வி எழுந்தது...
ஆன்லைன் ரம்மி தடை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மெத்தனமாக இருக்கிறதா என சைபர் க்ரைம் சிறப்பு வழக்கறிஞர் கார்த்திகேயனிடம் கேட்டோம். ``டி.ஜி.பி அலுவலகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கியிருக்கிறேன். மாநில அரசு சட்டத்தை இயற்றினாலும் அது வெறும் பேப்பர் அளவில்தான் இருக்கும். அது நடைமுறைக்கு வருவது மத்திய அரசின் கைகளில்தான் இருக்கிறது. மாநில அரசு சொல்லும் ஆப்களை கூகுள் நிறுவனத்துக்குச் சொல்லி அதைத் தடை செய்ய வைக்க மத்திய அரசால் மட்டுமே முடியும். அப்போதுதான் ஆப்கள் தடை செய்யப்படும். மரத்துக்கடியிலோ கிளப்புகளிலோ ரம்மி விளையாடினால் அவர்களைக் கண்டுபிடித்து கைது செய்யலாம். ஆனால், ஆப்கள் மூலம் எவர் எங்கிருந்து விளையாடுகிறார் என்று கண்டுபிடிப்பதே இயலாதது. எனவே, இது சற்று சிக்கலானதுதான். தமிழ்நாட்டில் ஏற்கெனவே சட்டம் இயற்றியிருக்கிறது. ஆனால், அந்தச் சட்டத்தை நீதிமன்றம் சென்று தடை செய்துவிட்டன ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள்.
இனி, அப்படி ஒரு சட்டம் இயற்றினால் நிறுவனங்கள் தடை செய்ய முடியாத அளவு அது இருக்க வேண்டும். அதற்கான ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறேன்.” என்றவரிடம் அது குறித்துப் பகிர்ந்துகொள்ளச் சொன்னோம்.
“கேம் ஆப் சான்ஸ் அல்லது கில் என்ற இடத்திலிருந்துதான் இந்தச் சட்டத்தை அவர்கள் தடை செய்திருக்கிறார். இனி உருவாக்கும் சட்டம் ரம்மி ஆன்லைன் விளையாட்டை நெறிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். ரம்மிக்கு மட்டுமல்ல பணம் செலுத்தி விளையாடும் அனைத்து ஆப்களும் இதற்குக் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். விளையாடுவதற்குக் குறிப்பிட்ட அளவுதான் பணமும் நேரமும் செலவிட வேண்டும் எனக் கொண்டுவர வேண்டும். இப்படி சில விவரங்களைச் சேர்த்தால் தடை செய்வது எளிது.
மற்றொன்று தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாநில அரசு ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வதில் தீவிரமாகத்தான் இருக்கிறது. மத்திய அரசுதான் கொஞ்சம் மெத்தனமாக இருக்கிறது.” என்றார் விவரமாக…
இது குறித்து தி.மு.க வழக்கறிஞர் சரவணனிடம் பேசினோம். “தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வதில் மாநில அரசு தீவிரமாக இருக்கிறது. அ.தி.மு.க அரசு முறையாக இந்தச் சட்டத்தைக் கொண்டு வராததால் இவ்வளவு பிரச்னை. சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறோம். உயர் நீதிமன்றம் நாங்கள் சுட்டிக்காட்டியவற்றைச் சரி செய்து மீண்டும் புதிய சட்டம் இயற்றுவதில் எந்தத் தடையும் இல்லை என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் மனதில் வைத்துதான் முன்னாள் நீதியரசர் சந்துரு தலைமையில் தம்ழிநாடு அரசு குழு அமைத்திருக்கிறது. அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் விரைவில் புதிய சட்டம் இயற்றப்படும். எப்படிச் சட்டம் இயற்றினாலும் அதை எதிர்த்து ஆன்லைன் ரம்மியைக் கொண்டு வந்துள்ள நிறுவனங்கள் நீதிமன்றங்கள் செல்லும். அப்படி அவர்கள் நீதிமன்றம் சென்றாலும் எந்தச் சிக்கலும் வராத வகையில் ஆராய்ந்து, பொறுமையாக, சட்டம் இயற்ற வேண்டும் என்பதால்தான் நிதானமாகச் செயல்பட்டு வருகிறோம்.
ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் பிரச்னைகள் குறித்துத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளும் அரசும் பல்வேறு விழிப்புணர்வுப் பிரசாரங்களைச் செய்து வருகின்றன. ஆனால், இது தனிமனித ஒழுக்கத்தால்தான் தடை செய்ய முடியும். தனிமனிதன் ஒருவன் தன் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் இதனால் ஏற்படும் தீமையை உணர்ந்து செயல்பட்டால் சட்டம் தேவையே இல்லை.” என விளக்கமளித்தார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/when-government-delaying-inaction-against-online-rummy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக