Ad

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

தொடர்ந்து வந்த கொலை மிரட்டல்கள்... அமெரிக்க கூட்டத்தில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து!

இந்திய வம்சாவழியை சேர்ந்த உலகின் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு வெளியில் சௌதாகுவா இன்ஸ்டிடியூட்டில் நேற்று உரையாற்ற சென்று இருந்தார். அமெரிக்க நேரப்படி காலை 11 மணிக்கு அவரிடம் மேடையில் ஒருவர் நேர்காணல் நடத்திக்கொண்டிருந்தார். ஆயிரக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். நேர்காணல் நடந்துகொண்டிருந்த போது சல்மான் ருஷ்டி தன்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டிருந்தார். அந்நேரம் மேடையிக்கு வந்த கறுப்பு சட்டை மற்றும் கறுப்பு மாஸ்க் அணிந்த நபர் சல்மான் ருஷ்டியிடம் வாக்குவாதம் செய்தார்.

அதோடு யாரும் எதிர்பாராத நேரத்தில் தன்னிடம் இருந்த கத்தியால் சல்மான் ருஷ்டியின் கழுத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக குத்தினார். சில நொடிகளில் பல முறை அந்த நபர் கழுத்தில் குத்தினார். இதனால் சல்மான் ருஷ்டி ரத்த வெள்ளத்தில் மேடையில் சரிந்து விழுந்தார். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தொடர்ந்து சல்மான் ருஷ்டிக்கு அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து முதலுதவி செய்தனர்.

உடனடியாக அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை தாக்கிய நபர் உடனே கைது செய்யப்பட்டார். என்ன காரணத்திற்காக அந்த நபர் இத்தாக்குதலில் ஈடுபட்டார் என்று தெரியவில்லை. அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சல்மான் ருஷ்டியிடம் நேர்காணல் நடத்தியவருக்கும் தலையில் லேசாக காயம் ஏற்பட்டது. தாக்குதல் நடந்த கூட்டத்தில் 2,500 பேர் கலந்து கொண்டிருந்தனர். இத்தாக்குதலை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவருக்கு பல இடங்களில் காயம் இருந்ததாக சிகிச்சையளிக்கும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

1988-ம் ஆண்டு சல்மான் ருஷ்டி எழுதிய சாத்தானின் கவிதைகள் என்ற சர்ச்சைக்குறிய புத்தகத்திற்காக இஸ்லாமிய நாடுகள் மற்றும் அமைப்புகள் கொலை மிரட்டல் விடுத்ததோடு, அவரை கொலை செய்வோம் என்றும் மிரட்டல் விடுத்திருந்தன. இதனால் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் தொடர்ந்து மறைந்து வாழ்ந்து வரும் சல்மான் ருஷ்டியின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ஈரானிய மத தலைவர் ஒருவர் சன்மானமும் அறிவித்திருந்தார். இக்கொலை மிரட்டலுக்கும், தற்போது நடந்துள்ள தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் இக்கொலை மிரட்டல் 33 ஆண்டுகளுக்கு முன்பு விடுக்கப்பட்டது ஆகும். கொலை மிரட்டலால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.

ஹெலிகாப்டருக்கு கொண்டு செல்லப்படுகிறார்

அடிக்கடி தனது வீட்டை மாற்றிக்கொண்ட சல்மான் ருஷ்டி, தனது பிள்ளைகளிடம் கூட தான் எங்கு இருக்கிறேன் என்று சொல்ல முடியாத நிலையில் இருந்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு கொலை மிரட்டல் சற்று தணிந்த பிறகு வெளியுலகிற்கு சல்மான் ருஷ்டி தலைகாட்ட ஆரம்பித்தார்.

மும்பையில் பிறந்த 75 வயதாகும் சல்மான் ருஷ்டி, 1981ம் ஆண்டு எழுதிய `மிட்நைட்ஸ் சில்ரன்’ என்ற புத்தகத்திற்கு புக்கர் விருது கிடைத்தது. இது தவிர பல புத்தகங்களை எழுதியுள்ள சல்மான் ருஷ்டி இங்கிலாந்து குடியுரிமை பெற்று கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்தார். 2012-ம் ஆண்டும் ஈரானிய அமைப்பு ஒன்று சல்மான் ருஷ்டியின் தலைக்கு சன்மானம் வழங்குவதாக அறிவித்தது. சல்மான் ருஷ்டியின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு எழுத்தாளர் தஸ்லிமா நஸ்‌ரீன் கடும் கண்டனமும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார். 2007-ம் ஆண்டு சல்மான் ருஷ்டியின் இலக்கிய சேவைக்காக இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிரிட்டனின் உயரிய விருதான சர் பட்டம் கொடுத்து கெளரவித்தார் என்பதும் குறிப்பிடதக்கது.



source https://www.vikatan.com/news/crime/attempted-assassination-of-author-salman-rushdie-in-a-meeting-attended-by-2500-people-in-america

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக