சரவணன் அண்ணாதுரை, தி.மு.க செய்தித் தொடர்பாளர்
“உண்மைக்குப் புறம்பான கருத்து. இந்தியாவில் 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே சென்றிருக்கிறார்கள். அதானி, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறார். யாரின் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது என்று ஒன்றிய நிதியமைச்சர் தெளிவாகச் சொல்ல வேண்டும். நாட்டின் ஜி.டி.பி குறைந்திருக்கிறது. ஏற்றுமதி அளவு குறைந்துள்ளது. பெட்ரோல், டீசல், காஸ் விலை அதிகரித்திருக்கிறது. உண்மையில் இந்தியாவில் விலைவாசி மட்டுமே தொடர்ந்து அதிகரித்துவருகிறது. சுடுகாட்டில் புதைப்பதற்கு மட்டுமே ஜி.எஸ்.டி கிடையாது என்கிறார்கள். ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது என்றால், அங்கு வேலையின்மை இருக்கக் கூடாது. ஆனால், இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. எந்தப் புள்ளிவிவரமும் நாடு பொருளாதாரத்தில் முன்னேறிச் செல்வதாகச் சொல்லவில்லை. இவர்கள் மட்டும் வெறும் வாயில் பொருளாதாரம் வளர்கிறது என்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தைச் சரியான பாதையில் எடுத்துச்செல்லும் திறன் படைத்த நிர்வாகிகள் யாரும் பா.ஜ.க-வில் இல்லை. கார்ப்பரேட் பெருநிறுவனங்களுக்கு வரியைக் குறைத்துவிட்டு, அரிசிக்கும் கோதுமைக்கும் வரியை அதிகரித்து மக்களைக் கஷ்டப்படுத்துகிறார்கள். இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. நாட்டை 50 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றிருப்பதுதான் இவர்கள் ஆட்சியின் சாதனை.”
கே.பி.ராமலிங்கம், தமிழ்நாடு பா.ஜ.க துணைத் தலைவர்
“யதார்த்தமான உண்மையைச் சொல்லியிருக்கிறார். தற்போதைய சூழலில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலகின் வளர்ந்த நாடுகள்கூட பொருளாதார வளர்ச்சியில் ஆட்டம் கண்டிருக்கின்றன. ஆனால், மத்திய பா.ஜ.க அரசின் சீரிய முயற்சியாலும், நிதியமைச்சரின் திறமையாலும் இந்தியாவின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியடைந்திருக்கிறது. இந்தியாவின் நிலையிலிருந்த பல உலக நாடுகள் இன்று கடுமையான பொருளாதார வீழ்ச்சியைக் கண்டிருக்கின்றன. ஆனால், இந்தியா முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. நாட்டின் பொருளாதார நிலவரம் தெரியாமல் எதிர்க்கட்சியினர் உளறிக்கொண்டிருக்கிறார்கள்.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் பா.ஜ.க ஆட்சியில், மக்களின் ஏழ்மை நிலையைப் போக்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திவருகிறோம். இந்தியாவில் 11 சதவிகிதம் ஏழ்மை நிலை குறைந்திருக்கிறது. இது குறித்து எந்த எதிர்க்கட்சியினரும் பேசுவதே கிடையாது. உண்மையான புள்ளிவிவரங்களை மறைத்து, வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்கிறார்கள். நடைபெறும் பா.ஜ.க ஆட்சியில் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சியினர் பொறாமையில், இல்லாத பிரச்னை குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.”
source https://www.vikatan.com/news/politics/discussion-about-nirmala-sitharaman-comments-on-indian-economy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக