ஆனந்த விகடன் மற்றும் சிவராஜவேல் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய யூபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி ஆகிய போட்டித் தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம் திருச்சியிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் ஜூலை 31-ம் தேதி நடைபெற்றது.
இந்த ஆலோசனை முகாமில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் IAS கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார். முன்னதாக யூபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு ஒருவருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வினை சிவராஜவேல் ஐஏஎஸ் அகாடமி நடத்தியது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் பேசுகையில், “என்னுடைய தந்தையின் ஆசைக்கேற்ப, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் நான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு சிவில் சர்வீஸ் தேர்விற்குப் படிக்க ஆரம்பித்தேன். அனைத்து பாடங்களுமே படிக்க முடிபவைதான். எனக்கு இது வராது, அது வராது என மற்றவர்கள் கூறுவதைப் பற்றியோ, அல்லது உங்களுக்கே தோன்றுகிறது என்றோ தவிர்க்காதீர்கள். முக்கியமாக உங்களுக்கு எதில் பயம் இருக்கிறதோ, எந்த விஷயம் செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களோ அதனைத் திரும்பத் திரும்பச் செய்யுங்கள். கண்டிப்பாக உங்களால் அவற்றை வெல்ல முடியும். என்னுடைய பயிற்சி காலத்தில் நான் எழுதிய மாதிரித் தேர்வுகள்தான் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தன. பயிற்சித் தேர்வுகளும், ஒவ்வொரு செய்திகளிலும் நுணுக்கமாக நாம் கற்கும் விஷயங்களும்தான் நம்மை இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற வைக்க உதவும். ஆர்வம் (interest) மட்டும் இல்லாமல் வேட்கையும் (passion) இருந்தால் கண்டிப்பாக நம்மால் வெற்றி பெற முடியும்.
ஒரு டாபிக்கைப் படிக்கையில் நானாகத் தேடி அதுகுறித்து ஒரு நோட்ஸ் எடுத்து வைத்துக் கொள்வேன். குறைவாகவே புத்தகங்களை வைத்திருப்பேன். அதையே திரும்பத் திரும்பப் படிக்கும் போது, எனக்கு முழுதாக அந்தப் புத்தகங்களில் இருக்கும் அனைத்துமே தெரியும். அப்படி படித்துத்தான் வெற்றி பெற்றேன். தேர்விற்குப் பயந்து கொண்டே இருக்காமல், அந்தப் பயத்தை உங்களுடைய வாய்ப்பாக மாற்றும் போது நீங்கள் வெற்றி பெறுவது நிச்சயம். படிக்கும்போது என்ஜாய் செய்து படியுங்கள். தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பது போரடிக்கிறது என்றால், அதுவரை நீங்கள் படித்தவற்றை எழுதிப் பாருங்கள். ஒருமுறை எழுதுவது ஐந்து முறை படிப்பதற்குச் சமம். உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் செதுக்கியதாக இருக்க வேண்டும். அதை மகிழ்வாகச் செதுக்குங்கள்” என்றார்.
தொடர்ந்து யூபிஎஸ்சி தேர்வில் 2021-2022 பேட்சில் அகில இந்திய அளவில் 338-வது இடம் பெற்று தேர்ச்சி பெற்ற ஏஞ்சலின் ரெனிட்டா பேசும்போது, “தஞ்சாவூர் மாவட்டம்தான் என்னுடைய சொந்த ஊர். அரசுப் பள்ளியில்தான் படித்தேன். அதனாலேயே கல்லூரி காலத்தில் எனக்கு நிறைவே தாழ்வு மனப்பான்மை இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது, விகடனின் மாணவ பத்திரிகையாளராகத் தேர்வானேன். அதன்பிறகுதான் எனக்கு பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவம்தான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறது. யூபிஎஸ்சி தேர்வெழுதிய முதல் முயற்சியில் நான் தோல்வியடைந்தேன். இரண்டாம் முயற்சியில் முதல்நிலை தேர்விற்கு மட்டுமல்லாது, முதன்மைத் தேர்விற்கும் சேர்த்தே தீவிரமாகப் படித்து வெற்றி பெற்றேன்” என்றார்.
சிவராஜவேல் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனரும் இயக்குநருமான S.சிவராஜவேல், யூபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயார் செய்வதற்கான சுலபமான வழிமுறைகள் பற்றி விரிவாகப் பேசினார். போட்டி தேர்வுகளுக்கான சிலபஸின் முக்கியத்துவம் குறித்தும், அதனை எவ்வாறு கவனமாகப் படிக்க வேண்டும் என்றும், முந்தைய வருடக் கேள்வித்தாள்களைப் படிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் கூறினார். தேர்வுகளின் பேட்டர்ன், நடப்பு நிகழ்வுகளின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களிடம் பேசினார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ரமணி மற்றும் சத்யனந்தி ஆகியோரும் தங்களுடைய பயிற்சி அனுபவங்களையும், தொடர்ந்து போட்டித் தேர்வர்களுக்கான ஊக்க உரைகளையும் வழங்கினர். தொடர்ந்து மாணவர்கள் கேள்விகள் கேட்க அதற்கு மாவட்ட ஆட்சியர், மற்றும் சிவராஜவேல் ஐஏஎஸ் அகாடமியில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் பதிலளித்தனர்.
இறுதியாக, ஸ்காலர்ஷிப் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 1400-க்கும் அதிகமான மாணவர்கள் இந்த ஆலோசனை முகாமில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/oddities/education/ananda-vikatan-and-sivarajavel-ias-academy-event-in-trichy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக