Ad

புதன், 10 ஆகஸ்ட், 2022

Aug 15: `மூவர்ணக்கொடியை புறக்கணியுங்கள்' - எம்.பி-யின் சர்ச்சை பேச்சு - வலுக்கும் கண்டனம்

பஞ்சாப் சிரோமணி அகாலி தளம் தலைவரும், எம்.பி-யுமான சிம்ரஞ்சித் சிங் மான், மத்திய அரசின் 'ஹர் கர் திரங்கா' பிரசாரத்தை புறக்கணியுங்கள் எனப் பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது. இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம், ``ஆகஸ்ட் 14-15 தேதிகளில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நிஷான் சாஹிப்(சீக்கியர்களின் முக்கோணக் கொடி) ஏற்றி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். காலிஸ்தான் கேட்டுப் போராடிய ஜர்னைல் சிங் பிந்திரன்வாலே இந்தியப் படைகளான நமது எதிரிகளின் படைகளுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார்" எனத் தெரிவித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, சிரோமணி அகாலி தளம் தலைவரின் கருத்துக்கு, ஆம் ஆத்மியின் செய்தித் தொடர்பாளர் மல்விந்தர் சிங் காங், அகாலி தளத் தலைவர்களைக் கடுமையாகச் சாடியதோடு, ``பிரசாரத்தை புறக்கணித்தது அவர்களின் உண்மையான முகத்தைக் காட்டுகிறது. ஆயிரக்கணக்கான பஞ்சாபியர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்திருக்கிறார்கள்.

தேசியக் கொடியின் மீது எங்களுக்கு எப்போதும் ஆழ்ந்த மரியாதை உண்டு. எனவே மக்கள் சிம்ரஞ்சித் சிங் மான் கூறியதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்று தெரிவித்திருக்கிறார்.

சிரோமணி அகாலி தளம் தலைவரும், எம்.பி-யுமான சிம்ரஞ்சித் சிங் மான்

பா.ஜ.க தலைவர் வினீத் ஜோஷி, ``அவர் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். இருப்பினும், அவர் கொடுத்த பெரும்பாலான அழைப்புகளுக்கு மக்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைக்கவில்லை. அவரை நாடு கடத்த அரசு முயற்சி எடுக்க வேண்டும். சிரோமணி அகாலி தள எம்.பி க்கு எனது கடும் கண்டனம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக SFJ (Sikhs for Justice) கட்சியின் பயங்கரவாதி எனக் கருதப்படும் குர்பத்வந்த் சிங் பன்னுன் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில், "சுதந்திர தினத்தன்று பஞ்சாப் மக்கள் மூவர்ணக் கொடியை எரித்துவிட்டு காலிஸ்தானி கொடியை ஏற்றுங்கள்" என மக்களைத் தூண்டியது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/politics/hoist-sikh-flag-not-tricolour-on-august-15-akali-dal-mp-simranjit-singh-mann-triggers-row

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக