Ad

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

`அந்தப் பக்குவம்தான் ஶ்ரீதேவியை பாலிவுட் ராணியாக்கியது!' - லட்சுமி #AppExclusive

சினிமா நடிகைகள் என்றாலே ஆப்பிள் ஜூஸ் குடித்துக் கொண்டு, ஏசி ரூமில் இருப்பார்கள் என்றுதான் நாம் நினைக்கிறோம். ஆனால் நிதர்சனமோ வேறு. ஒவ்வொரு நடிகைக்கு பின்பும் இருண்ட கசப்பான காலங்கள் இருக்கிறது. அழகு பதுமைகளாக மட்டுமே பார்க்கப்படும் அவர்களும் நம்மை போல் ரத்தமும் சதையுமான மனிதர்கள் என்பதை நாம் புரிந்துக் கொள்ள மறுக்கிறோம். இந்த தொடரை நடிகை லட்சுமி எழுத காரணமும் அதுதான். 80, 90-களில் தமிழ் ரசிகர்களின் கனவுகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த பிரபல ஹீரோயின்களின் ரகசிய பக்கங்களை, அதிக சத்தமில்லாமல் படித்துக் காட்டுகிறார் லட்சுமி..!

Actress Lakshmi writes about Sridevi

 ப்போது ஶ்ரீதேவிக்கு ஆறு வயசு! குழந்தை நட்சத்திரம். ஒரு படத்தில் ஜெய்சங்கருக்கும் எனக்கும் மகளாக ஶ்ரீதேவி. கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் மட்டும்தான் பாக்கி. தயாரிப்பாளருக்கு ஏதோ பிரச்னை. படம் நின்றுபோனது! நான்கு வருடங்கள் ஓடிவிட்டன. அந்தப் படத்தை மறந்தே போனோம். திடீரென ஒரு நாள் அதன் தயாரிப்பாளர், இப்போ அந்தப் படத்தை முடிச்சுடலாம். நான் ரெடி நீங்க எல்லாரும் ஒத்துழைக்கனும் என்று எங்களிடம் கேட்டார்.

அன்று ஷூட்டிங். இப்போது ஶ்ரீதேவிக்குப் பத்து வயசு! அந்தச் சிறுமி, ஒரு பெண்ணாக மலரத் துவங்கியிருந்தாள். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி. ஶ்ரீதேவியை மேலாடை எதுவுமில்லாமல் ஒரு டவுசர் மட்டும் மாட்டி ஒரு மரத்தில் தலைகீழாகத் தொங்கவிட வேண்டும். 'அக்கா, அக்கா... எனக்குச் சட்டை இல்லாம நிக்க ஒருமாதிரியா இருக்குக்கா. நீங்க சொல்லுங்கக்கா...' என்று அழுகை முட்டி நிற்க, என்னிடம் கெஞ்சினாள் ஶ்ரீதேவி. 

'ஏன் சார், இந்த ஸீனை மாற்ற முடியாதா? வேற ஏதாவது பண்ணலாமே...' என்று நான், சம்பந்தப்பட்ட ஆட்களிடம் கேட்டேன். 'அதெல்லாம் முடியாது. இது கன்ட்டினியூட்டி ஸீன். முடியாதுங்க...' என்று சொல்லிவிட்டார்கள். என்னாலும் மேற்கொண்டு பேசமுடியாத சூழ்நிலை. அவமானம் பிடுங்கித் தின்ன, உதடுகள் துடிக்க நின்றிருந்த ஸ்ரீதேவியின் வேதனை, இன்றும் என் கண் முன்னால் நிற்கிறது. நல்லவேளை. அந்த நேரம் ஶ்ரீதேவியின் அம்மா ராஜேஸ்வரி அங்கே வந்தார். அம்மாவைப் பார்த்ததும் ஶ்ரீதேவி ஒடிப்போய், அவரைக் கட்டிக்கொண்டு விஷயத்தைச் சொல்ல... நேரே தயாரிப்பு நிர்வாகியிடம் போனார் ராஜேஸ்வரி.

Actress Lakshmi writes about Sridevi

'மன்னிச்சுக்குங்க சார்... இந்த ஸீன்ல என் பொண்ணு நடிக்கமாட்டா. இப்படி நடிக்க வெச்சுப் பொழைக்கணும்னு அவசியமில்லை...' பதிலையே எதிர்பாராமல் ஶ்ரீதேவியை அழைத்துக்கொண்டு விடுவிடுவெனக் கிளம்பி போனார் அந்தம்மா. தன்னைக் காப்பாற்றிய தாயின் கரத்தை, ஶ்ரீதேவியின் கைகள் இறுகப் பற்றியிருந்தன. ஹீரோயின் அம்மாக்களைப் பற்றி இங்கே ஏராளமான ஜோக்ஸ் உண்டு. ஒரு நடிகையின் தாயை, ஏதோ விபசார புரோக்கர் மாதிரி நினைக்கத் தூண்டுகிற பல கதைகள் உண்டு. அம்மாக்களின் பிடியில் சிக்கிச் சீரழிந்துபோனதாகப் பல நடிகைகளைப் பற்றிச் சொல்வதுண்டு. 

எது உண்மை...? எது பொய்...?அம்மாக்களின் அரவணைப்பிலேயே கிடந்து அரசாண்ட நடிகைகள்தான் நிறைய. தன் மகளுக்கு எது சந்தோஷம் தரும், எது துக்கத்தைக் கொடுக்கும் என்று தெளிவாகத் தெரியும் ராஜேஸ்வரிக்கு. அம்மா என்ன சொன்னாலும் தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையாட்டுவாள் ஶ்ரீதேவி! 'ஜூலி' படத்தில் நான் ஹீரோயின்.

எனக்குத் தங்கையாக ஶ்ரீதேவி. பூத்துக் குலுங்குகிற அதிகாலை ரோஜா மாதிரி அழகாக இருப்பாள். நான் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தேன். பக்கத்தில் என்னைக் கண்கள் விரியப் பார்த்தபடி ஶ்ரீதேவியும் அவளது அம்மாவும். 'என்னம்மா...?' என்று கேட்டேன். 'உன்னை மாதிரியே என் பொண் ணும் ஒரு நாள் பெரிய ஸ்டாரா வருவா...' என்று ஆசையாகச் சொன்னார் ராஜேஸ்வரி. அதைப் பெருமிதமாகக் கேட்டபடி நின்றிருந்தாள் ஶ்ரீதேவி. எல்லோருக்குள்ளும் ஒரு தேவதைக் கனவு உண்டுதானே!

Actress Lakshmi writes about Sridevi

பிறகு அவள் காணாமல் போனாள். திடீரெனத் தமிழ் சினிமாவில் ஒரு நட்சத்திரம்... பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா என்று பிரபல டைரக்டர்கள் அத்தனை பேரும் அந்த இளவரசியை விதவிதமாக அலங்கரித்தார்கள்.  எத்தனை அழகு அந்தப் பெண்!

சேலையை இழுத்துப் போர்த்தியபடி ஒரு மழை இரவு மேடையில் மைக்கைப் பிடித்துக்கொண்டு பாடுவாளே. அந்த 'ஜானி' ஜானகி... ஒரு சின்ன நாய்க் குட்டிக்குக் கண்மை போட்டு, ரிப்பன் கட்டி ஆசை ஆசையாக அள்ளிக் கொண்டு திரிவாளே அந்த 'மூன்றாம் பிறை' விஜி.. பாவாடை, தாவணி போட்ட பட்டாம்பூச்சியாகப் பறப்பாளே. அந்தப் 'பதினாறு வயதினிலே' மயிலு... எத்தனையெத்தனை வேடங்கள்!

பார்த்தவுடனே யாருக்கும் பிடித்துப் போகிற வசீகரம் அவளுக்கு உண்டு. அத்தனை அன்பாகப் பழகுவாள். அவள் சிரித்தால், யாரோ நம் காதுக்குள் கோயில் மணி அடித்ததுபோல் இருக்கும். ஒரு தேர்ந்த நடிகையாக... கமல், ரஜினி மாதிரி சூப்பர் ஹீரோக்களுக்கு இணையான புகழுடன் இருந்தாலும்... அவள் அம்மா பிள்ளை!

எத்தனை பெரிய வதந்திகள் வந்தாலும் கிசுகிசுக்கள் அடிபட்டாலும் அதை மிகக் கம்பீரமாக எதிர்கொள்வாள். ஒரு சமயம் 'மிதுன் சக்ரவர்த்தி, ஶ்ரீதேவியை இன்ன தேதியில், இன்ன இடத்தில் திருமணம் செய்கிறார் என எழுதாத பத்திரிகைகள் கிடையாது. எங்கே போனாலும் நிருபர்கள் துரத்துவார்கள். 'அப்படியா! அப்படி நடந்தால், நீங்க அவசியம் வாங்க...' என்று பதில் சொல்லிவிட்டுப் போவாள் ஶ்ரீதேவி.

Actress Lakshmi writes about Sridevi

 'ஐயோ.. என்னை இப்படி எழுதுகிறார்களே. என்று அழுது புலம்புவது கிடையாது. 'எவன் அவன்.. விட்டேனா பார்' என்று கொதிப்பது கிடையாது. கூல் பேபி!'ஏன் பதில் சொல்ல வேண்டும்.? யாரோ திட்டமிட்டுப் பரப்புகிற தவறான செய்தியை, நான் ஏன் அங்கீகரிக்க வேண்டும்...? என்கிற பக்குவம் இருந்ததால்தான், ஶ்ரீதேவி ஒரு ராணி மாதிரி பாலிவுட்டில் இருந்தாள்.  இப்போது ஶ்ரீதேவி இரண்டு குழந்தைகளுக்குத் தாய். இந்தியாவிலேயே அழகான அம்மா!  சில்க் ஸ்மிதா ஒரு காட்டாறு மாதிரி... ஶ்ரீதேவி ஒரு தெளிவான நீரோடை.

அது சலசலக்கிற அழகு நம் கண்ணுக்குள்ளேயே காலாகாலத்துக்கும் நிற்கும். சினிமா என்கிற கனவுத் தொழிற்சாலைக்குள் இந்த இரண்டு வகைப் பூக்களும் உண்டு. நக்மா, சிம்ரன் மாதிரி நட்சத்திரங்கள் எத்தனை தடுமாற்றங்களைச் சந்திக்கிறார்கள் என்று பாருங்கள். அது ஏன் என்று பிறகு சொல்கிறேன்.

- லட்சுமி, திரைப்பட நடிகை 

(ஶ்ரீதேவி - ஹீரோயின் என்ற தலைப்பில் 26.05.2002 தேதியில் ஆனந்த விகடன் இதழிலிருந்து...)


source https://cinema.vikatan.com/tamil-cinema/a-painful-incident-in-sridevis-life-actress-lakshmi-writes-about-sridevi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக