பொதுவாக யாரைப் பற்றியாவது எழுத நேர்ந்தால் பீடிகையாக, இன்னாரைப் பற்றி எழுதும் பேறு பெற்றது கிடைத்தற்கரிய அபூர்வ வாய்ப்பு' என்று குறிப்பிடுவது சம்பிரதாயம். ஆனால், திரு.சாவி அவர்கள் விஷயத்திலோ, அது நூற்றுக்கு நூறு உண்மை.
அவரைப் பற்றி எழுதுவது அபூர்வ வாய்ப்புதான். ஏனென்றால், தன்னைத் தவிர, உலகத்திலுள்ள மற்ற எல்லா விஷயங்களைப் பற்றியும் அவரே எழுதிவிட்டார். அவர் மற்றவர்களுக்காக விட்டு வைத்திருக்கும் விஷயம் ‘அவர்’தான்.
அவருடைய கண்ணில்பட்ட எந்த விஷயமும், எந்த மனிதரும் அவருடைய சுவையான எழுத்துக்குத் தப்பியதில்லை. ஏன், அவர் கண்ணில் படாத வாஷிங்டன் நகரமே அவருடைய எழுத்துக்கும் அவர் மூலம் லட்சோப லட்சம் விகடன் வாசகர்களுக்கும் விருந்தாகி விட்டதே! நான் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த போது, என்னை வியப்படையச் செய்த ஓர் அபூர்வ விஷயம், சாவியின் துல்லியமான கற்பனைத்திறன்.
‘வாஷிங்டனில் திருமணம்’ நகைச்சுவைக் கட்டுரைத் தொடரில் அவர் விவரித்திருந்த இடங்கள் எல்லாம் அப்படி அப்படியே அங்கிருந்தன. அங்கு போகாமலேயே அவர் எப்படி அவ்வளவு சுத்தமாக அந்தப் பகுதிகளே வருணித்தார்? அதுதான் சாவியின் பேனாத்திறன்.
போகாத இடத்தைப் பற்றி எவ்வளவு சாமர்த்தியமாக எழுதினாரோ, அதே போல் இவர் சென்ற இடங்களைப் பற்றி எழுதும்போது மற்றவர்கள் பார்க்காத விஷயங்களைப் பற்றி எழுதியிருப்பார். இவர் பெங்களுரைப் பார்த்துவிட்டு ‘இங்கே போயிருக்கிறீர்களா?’ என்று கட்டுரை எழுதினால், அதில் பெங்களூர்க்காரர்கள் கண்ணில் படாத பல விஷயங்களே இவர் கண்டு எழுதியிருப்பார்.
அவரைச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் என்று கூறுவது அரைகுறையான வர்ணனைதான். சாவி என்ற தனி மனிதர் ஒரு நகைச்சுவை ஊற்று. அவர் தன் உள்ளத்தில் ஊறிய நகைச்சுவையில் ஒரு சிறு பகுதியைத்தான் எழுத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். முழுமையும் வெளிவராதது ஒரு குறை என்றே நான் நினைக்கிறேன். அவருடைய நகைச்சுவைத் திறனில் முழு பரிமாணத்தை அவருடைய உரையாடலில்தான் காணலாம். சமீபத்தில் நடந்த அவருடைய அறுபது ஆண்டு நிறைவு மணி விழாவை ஒட்டி, கலைஞர் கருணாநிதி அவர்கள், ‘என்னுடைய சுற்றுப் பயணங்களில் சில நேரம், அவர் என்னோடு வெளியூர்களுக்கு வந்ததுண்டு. பயணக் களைப்பு தெரியாமல் இருவரும் பல்வேறு விஷயங்களைப் பற்றி உரையாடுவோம்' என்று அவரைப் பற்றிய தன் பாராட்டுரையில் கூறியிருந்தார்.
விகடன் நிறுவனத்திலுள்ள நாங்கள் அனைவரும் அதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்கள். எங்கள் அதிபர் எஸ். எஸ். பாலன், சாவி, ஸ்ரீதர், நான் மற்றும் நண்பர்கள் எல்லாரும் வெளியூருக்குச் சேர்ந்து பயணம் செய்யும் போதெல்லாம் பயணக்களைப்பு என்ன என்றே எங்களுக்குத் தெரியாமல் செய்து விடுவார் அவர். அப்படி நகைச்சுவைத் துணுக்குகள், கதைகள், விமரிசனங்கள் எல்லாம் பொங்கிப் பொங்கி வரும். எங்கள் உரையாடல்களுக்கு அவர்தான் ஹீரோவாக இருப்பார். பத்திரிகைத்துறைப் பணி என்றால், அவருக்கு ‘ஒரே பைத்தியம்’ என்றுகூட நான் சொல்லுவேன். ‘மாசா மாசம் சம்பளம் வருகிறது. எழுதினால் என்ன?’என்ற போக்குக்கு அவர் எதிரி. விகடனில் துணை ஆசிரியராக அவர் இருந்த ஒவ்வொரு வாரமும் ‘அடுத்த வாரம் என்ன எழுதலாம்? புதிதாக என்ன செய்யலாம்?’ என்று என்னிடம் கேட்டுக்கொண்டே இருப்பார். எத்தனை அனுபவப்பட்டு வளர்ந்திருந்த நிலையிலும், ஓர் ஆரம்பகாலப் பத்திரிகைத்துறை மாணவனைப் போன்ற வேகம் அவருடைய உணர்வில் கலந்திருந்த விஷயம்.
எழுதுவதென்றால், எதையாவது எழுதித் தள்ளுவது அல்ல. ‘கல்கி’ பத்திரிகை அதிபர் சதாசிவம் அவர்கள் நகைச்சுவையாக ஒருவரிடம, ‘நீ ஏதாவது செய்து கான்ட்ரிப்யூட் (விஷயதானம்) செய்வதைவிட கான்ட்ரிப்யூட் செய்யாமலிருப்பதே பத்திரிகைக்குப் பெரிய கான்ட்ரிப்யூஷன்" என்பாராம். சாவி அதை அடிக்கடி குறிப்பிட்டு, “நாம் எழுதி ‘கான்ட்ரிப்யூட்’ செய்வதைவிட எழுதாமலிருப்பதே பெரிய கான்ட்ரிப்யூஷன் என்று வாசகர்கள் நினைக்கும்படி செய்துவிடக்கூடாது” என்பார்.
இதை எப்போதும் மனதில் வைத்திருந்ததால்தான், அவருடைய ஒவ்வொரு 'கான்ட்ரிப்யூஷ'னும், சுவையானதாகவும், விஷயம் உள்ளதாகவுமே அமைந்திருந்தது. கல்கியில் அவர் எழுதிய ‘நவகாளி யாத்திரை’ விகடனில் எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ கதிரில் எழுதிய ‘நான் கண்ட நான்கு நாடுகள்’ எல்லாம் வாசகர்களுக்கு அபூர்வ விருந்துகள். ‘திறமை எங்கிருந்தாலும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்’ என்பது அவர் துடிப்பு. எழுத்தாளர்களை உற்சாகப்படுத்த எத்தனையோ பத்திரிகை ஆசிரியர்கள் எவ்வளவோ வாய்ப்பளித்திருக்கிறார்கள். ஆனால் எழுத்தாளர்களுக்காக தான் ஆரம்பித்த ஒரு தொழிலையே தியாகம் செய்தவர் அவர்தான். எந்தத் தொழிலிலும் தான் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை கொண்ட சாவி அவர்கள் ஒரு முறை, ஒரு காபி ஓட்டல் ஆரம்பித்தார்.
ரசனை மிக்க அந்த மனிதர், தரமான எழுத்தைப் போல் தரமான காபியும் கொடுத்தார். வியாபாரம் ஆரம்பித்தாலும், வியாபாரியாக இல்லை, எழுத்தாளராகத்தான் இருந்தார். தன் ஓட்டலில் எழுத்தாளர்களுக்குத் தனி மரியாதைகள், கடன் வசதிகள் எல்லாம் செய்து கொடுத்தார். முடிவு? எழுத்தாளர்கள் அக்கவுண்டில் பக்கம் பக்கமாக எழுதிய பாக்கிக் கணக்கு, ஓட்டலை இழுத்து மூட வைத்தது. இப்படி.. தன் எழுத்தாளர் அபிமானத்துக்கு விருந்தாக ஓர் ஓட்டலையே கொடுத்த எழுத்தாளர் அவர்! ‘இதயம் பேசுகிறது’ என்ற என்னுடைய பயணக்கதைகளின் வெற்றிக்கு அவரும் ஓர் ஆதர்சபுருஷராக இருந்தார் என்பதை அவரைப் பெருமைப்படுத்துவதற்காக அல்ல: எனக்கு நானே பெருமிதப்பட்டுக் கொள்வதற்காக இங்கே கூறுகிறேன். பயணக் கட்டுரைகள் எப்படி எழுதக்கூடாது என்பதை நான் புரிந்து கொள்ள எத்தனையோ பேர் முன்மாதிரியாக இருந்தனர். எப்படி எழுதவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இருந்த பெருமை சாவியின் எழுத்துக்கு உண்டு.
எழுத்துத் திறன் என்ற ஆணிவேரால் உரம் பெற்று, பல எழுத்தாளர்களுக்கு நிழல் தரும் ஆலமரமாகத் திகழ்பவர் திரு.சாவி. இந்த உயர்ந்த நிலையை அடைவதற்கு அவர் மேற்கண்ட இலக்கியத்துவம், உழைத்த உழைப்பு, எதிர் நீச்சல் போட்ட சோதனைகள் எல்லாம் ஏராளம். அத்தனையையும் மீறி வெற்றி கண்ட சாதனையாளர் அவர்.
அவருடைய மணி விழாவின்போது பேசிய பலர், ‘சாவி’ என்ற அவருடைய பெயருக்கு எத்தனையோ விளக்கங்கள் கூறினர். என் மனத்தில் தோன்றி ஓரே விளக்கம் இதுதான்: ‘சா’ என்றால் சாதனை; ‘வி’ என்றால் விடாமுயற்சி. தன் விடாமுயற்சியால் பல சாதனைகளைக் கண்ட என் ஆத்மார்த்த நண்பரும் அரிய வழிகாட்டியுமான சாவி அவர்கள் பல்லாண்டு வாழ கலவையில் மோனத்தவம் புரியும் ஞானசீலரை வணங்கி வேண்டுகிறேன்.
(08.02.1976 சாதனைக்கு ஒரு சாவி தலைப்பில் ஆனந்த விகடன் இதழிலிருந்து...)
source https://www.vikatan.com/arts/literature/manian-shares-his-memories-about-journalist-saavi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக