(பிரபலமானவர்களைப் பற்றிப் பரவலாகவும் பலவிதமாகவும் அபிப்பிராயங்கள் ஏற்படுவது சகஜம். அவற்றைப் பற்றி சம்பந்தப்பட்ட நபரிடமே நேருக்கு நேர் கேட்டு, பதில் பெறும்போது சுவையும் தெளிவும் ஏற்படாதோ?
இதோ, எம்.ஜி.ஆரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகள்:
`இயற்கையான நடிப்புக்கு எதிர்காலத்தில் வரவேற்பு இருக்கும்; மிகையான நடிப்புக்கு வரவேற்பு இருக்காது' என்று தென் இந்திய சினிமாப் பத்திரிகையாளர்கள் சார்பில் தங்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் நீங்கள் பேசினீர்கள் அல்லவா? திரு. சிவாஜி கணேசனைத் தாக்கித்தான் நீங்கள் அப்படிப் பேசினீர்கள் என்று பேசிக்கொள்கிறார்களே, அது உண்மையா?
எம். ஜி. ஆரின் பதில்: இயற்கை நடிப்புக்குத்தான் எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று நான் குறிப்பிடும் போது, உடனடியாக அவர்கள் திரு.சிவாஜி கணேசனைப் பற்றி ஏன் ஞாபகப்படுத்திக் கொள்கிறார்கள்? அப்படியானால், இவர்கள் திரு. கணேசன் இயற்கையை மீறி நடிக்கிறார் என்று கருதுகிறார்களா? இப்படியே பேசுவதன் மூலம் சிறந்த நடிகரான சிவாஜி கணேசனின் பெருமையை இவர்கள் களங்கப்படுத்த முயலுகிறார்கள்.
உங்கள் படங்களில் சண்டைக் காட்சிகளில் ஒரே ஆள், பத்து பேர் பதினைந்து பேரை அடித்து வீழ்த்துவதாக வருகிறதே, இது இயற்கைக்கு மீறிய மிகையான நடிப்பு இல்லையா?
பதில்: அபிமன்யூ, பத்மவியூகத்துக்குள் நுழைந்து ஒரே நேரத்தில் பல பேர்களைச் சாய்த்ததாகப் புராணத்தில் இருக்கிறதே, அதை ஏற்றுக் கொள்ளும்போது, வீரன் ஒருவன் 15 பேர்களை அடித்து வீழ்த்துவதை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது? நல்ல வீரன் 10, 15 பேர்களைச் சமாளிக்க முடியும்.
உங்களுக்கும் திரு. சிவாஜி கணேசனுக்கும் கருத்து வேற்றுமை எதுவும் இல்லை என்பதை நிரூபிப்பதற்காகவாவது நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஒரே படத்தில் நடித்தால் என்ன?
எம்.ஜி.ஆர். (சிரித்துக் கொண்டே): எங்கள் இருவரையும் போட்டுப் படம் எடுத்தால் அந்தப் படம் ஒழுங்காக வெளிவரும் என்று நீங்கள் உண்மையில் நம்புகிறீர்களா? நானும் படப்பிடிப்பின் நுணுக்கம் தெரிந்தவன். சிவாஜியும் படப்பிடிப்பின் நுணுக்கம் தெரிந்தவர். காமிராவை எந்தப் பக்கமாக வைத்தால் யாருக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்று இரண்டு பேருக்குமே தெரியும். அவருக்கு முக்கியத்துவம் வரும் மாதிரி காமிரா வைக்கப்பட்டால் நான்தான் ஒத்துழைப்பேனா? அல்லது எனக்கு முக்கியத்துவம் வரும்போது அவர்தான் ஒத்துழைப்பாரா? படம்தான் ஒழுங்காக வெளிவருமா? அப்படியே படம் முடிந்து வெளிவந்தாலும், ஒரு காட்சியில் என்னைப் பார்த்துவிட்டு என் ரசிகர்கள் கை தட்டுவார்கள். அடுத்த காட்சியில் அவர் ரசிகர்கள் அவரைப் பார்த்துக் கை தட்டுவார்கள். கை தட்டல், கைகலப்பாக மாறித் தியேட்டரே ரத்த வெள்ளமாகிவிடுமே!
நீங்கள் ஒரு நடிகையை 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டு, அவர் மற்ற நடிகர்களோடு நடிப்பதற்கு அனுமதி தர மறுத்ததாகவும், அவர் இப்பொழுது மீறிவிட்டார் என்றும் பேசிக் கொள்கிறார்களே?
எம். ஜி. ஆர்.: ஏன் சுற்றி வளைக்கிறீர்கள்? மஞ்சுளா என்றுதான் சொல்லுங்களேன். அவர் மற்ற நடிகர்களோடு நடிப்பதற்கு நானேதான் ஊக்குவித்தேன். என்னிடம் பயிற்சி பெற்ற நடிகை, பல நடிகர்களுடன் நடித்துப் பெயர் பெற்றால் எனக்குப் பெருமை இல்லையா?
நீங்கள் நடிக்கும் படங்கள் தயாராவதற்குத் தாமதமாகிறது என்றும், அதற்கு நீங்கள்தான் பொறுப்பாளி என்றும் சொல்லுகிறார்களே?
எம். ஜி. ஆர்.: நான்தான் படம் தாமதமாவதற்கோ, அல்லது வேகமாக வளருவதற்கோ பொறுப்பாளி என்றால், என்னுடைய சொந்தப்படமான ‘உலகம் சுற்றும் வாலிபனை’ வெளியிட்டிருப்பேனே!... உண்மையில் நான் பல மாதங்களாகத் தயாரிக்கும் உலகம் சுற்றும் வாலிபன்’, செப்டம்பரில்தான் வெளிவருகிறது. ஆனால் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட உதயம் புரொடக்ஷன்ஸாரின் ‘இதய வீணை’ தீபாவளி அன்று வெளிவருகிறது. எனவே, தாமதம் என்பது என்னால் ஏற்படுவதல்ல, அது பல சூழ்நிலைகளைப் பொறுத்த விஷயம்.
(நேருக்கு நேர் - எம்.ஜி.ஆர் என்ற தலைப்பில் 06.08.1972 தேதியில் ஆனந்த விகடன் இதழிலிருந்து..)
source https://cinema.vikatan.com/tamil-cinema/mgr-s-classic-interview-from-1972-vikatan-archives
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக