கில்லாடி கில்லின் அதிஅற்புத ஆட்டம், திவேதியாவின் இறுதிநேர இமாலய சிக்ஸர்கள் எல்லாம் சேர்ந்து குஜராத்துக்கு ஹாட்ரிக் வெற்றியைப் பரிசளித்துள்ளதோடு, வீழாத அணியாகவும் மகுடம் சூட்டியுள்ளது. பஞ்சாப்போ தங்களது பலமான பௌலிங்கிலும் கோட்டை விட்டிருக்கிறது.
பேர்ஸ்டோவின் வரவு, ராஜபக்ஷவின் இடத்திற்கு ஆபத்தாக, ஃபினிஷர் மற்றும் பௌலர் என்னும் இருமுகனாக ஓடியன் ஸ்மித்தின் தலை தப்பியது. ஆனால், பஞ்சாப்பின் விதியும் அங்கேயே எழுதப்பட்டு விட்டது. குஜராத், கடந்த டிஎன்பிஎல் சீசனில் வெறித்தனமாக ரன் வேட்டையாடிய சாய் சுதர்சனோடு, தர்ஷனையும் கொண்டு வந்திருந்தது.
பஞ்சாப்புக்கும் பவர்பிளே ஓவர்களுக்குமான பிணைப்பு இத்தொடரில் அமர்க்களமாக இருந்து வந்தது. அதனைத் தகர்ப்பதே அவர்களை வீழ்த்துவதற்கான முதல்படி என்பதை ஹர்தீக் பாண்டியாவும் அறிந்தே வைத்திருந்தார். அதனாலேயே, அதிரடியாக போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே புதுப்பந்தோடு புறப்பட்டு வந்தார்.
கேப்டனுக்கும் கேப்டனுக்குமான அந்த யுத்தம் மூன்று பந்துகள் மட்டுமே நீடிக்க, பாண்டியாவின் ஷார்ட் பால் மயங்க்கின் பேட்டிடம் விடைபெற்று மிட் விக்கெட்டில் கேட்ச் ஆனது. மயங்க்கின் சமீபத்திய ஷார்ட் பால் பலவீனம் மீண்டுமொரு முறை காட்சிப்படுத்தப்பட, தொடர்ந்து மூன்று போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து அணிக்கு அதிர்ச்சியளித்துள்ளார் மயங்க். பவர்பிளேவுக்குள் இன்னொரு விக்கெட் என்னும் நோக்கோடு, ஃபெர்கூசனை பாண்டியா கொண்டு வந்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகள், தவானின் விக்கெட்டை 2021-க்குப் பிறகு பலமுறை காவு வாங்கியிருப்பதால் அதே லைனில் பந்துகள் புறப்பட்டு வர, அவர்தான் ஆட்டமிழப்பார் என எதிர்நோக்கினால் தவான் தப்பிப் பிழைத்தார். ஆனால், பஞ்சாப்புக்கான தனது முதல் ஐபிஎல் போட்டியில், பொறுப்பின்றி ராம்ப் ஷாட் ஆடுகிறேன் என வம்படியாக தனது விக்கெட்டை வாரிக் கொடுத்து வெளியேறினார் பேர்ஸ்டோ. பவர்பிளே ஓவர்களின் முடிவில் 43 ரன்கள் மட்டுமே வந்துசேர்ந்து, ராஜபக்ஷவை வெளியே அமர வைத்தது சரியான முடிவா என்ற கேள்வியோடு, குஜராத்தை ஒரு அடி முன்னிலைப்படுத்தியது.
அந்தப் புள்ளியிலிருந்து அடுத்து பல ஓவர்கள், போட்டி மொத்தமாக லிவிங்ஸ்டனின் தோளில் பயணிக்கத் தொடங்கியது. தவானுடன், ஜிதேஷுடன் என அவரது இரண்டு பார்ட்னர்ஷிப்புகள்தான், ரன்களைத் துரிதகதியில் கொண்டு வந்து சேர்ந்தன. ஸ்பின் மற்றும் வேகப்பந்து என அத்தனையும் சிறப்பாகவே கவனித்தார் லிவிங்ஸ்டன். லிவிங்ஸ்டன் - தவான் கூட்டணி, 32 பந்துகளில் 51 ரன்களைச் சேர்த்திருக்க, அதில் 70 சதவிகிதம் ரன்கள், லிவிங்ஸ்டன் அடித்ததுதான். அடுத்ததாக இணைந்த லிவிங்ஸ்டன் - ஜிதேஷ் கூட்டணியும் ரன்ரேட் 10-ஐ சுற்றியே வட்டமிட வைக்க வேண்டுமென்பதில் கவனமாக இருந்தது. அது ஃபீல்டிங் பக்கத்தில் அழுத்தத்தை உணர வைத்துக் கொண்டே இருந்தது.
லிவிங்ஸ்டன் கட்டுக்கடங்கா காட்டாறாக நல்ல பந்துகளிலும் ரன்களைக் குவித்தார். அறிமுக வீரர், தர்ஷனின் குட் லெந்த் பால், ஓவர் த மிட்விக்கெட்டில் சிக்ஸரானது என்றால், சர்வதேச வீரரான ரஷித் கானின் கூக்ளிக்கும் அதே மரியாதைதான். 21 பந்துகளே போதுமானதாக இருந்தது, இத்தொடரில் அவருடைய இரண்டாவது அரை சதத்தை எட்டுவதற்கு. ஜிதேஷின் மைக்ரோ கேமியோவும், திவேதியாவினை லிவிங்ஸ்டனோடு இணைந்து அவரும் ஒருகை பார்த்ததும் இந்த இன்னிங்ஸின் ஹைலைட்களில் ஒன்று.
திவேதியா விட்டதை அதற்கடுத்த ஓவரை வீசிய தர்ஷன், ஜிதேஷ் மற்றும் ஓடியன் ஸ்மித் என இரு பேக் டு பேக் விக்கெட்டுகளோடு ஈடுகட்டினார். அறிமுகவீரராக தொடக்கத்தில் சற்றே தடுமாறினாலும் அவரது இரண்டு ஸ்லோ பால்கள் இரு விக்கெட்களுக்கு வித்திட்டு, அவரது கம்பேக்கை சரியான நேரத்தில் நடந்தேற வைத்தன. ஆனாலும் அதே ஓவரிலேயே பேக் டு பேக் பவுண்டரிகளோடு லிவிங்ஸ்டனிடம் இருந்து பதிலடியும் வந்தது. ஏற்கெனவே செட்டில் ஆகிவிட்ட லிவிங்ஸ்டனோடு, ஷாருக்கானும் இணைந்து கொள்ள, இலக்கு இன்னமும் எகிற இருப்பதற்கான எச்சரிக்கை மணி, பாண்டியாவின் மூளையில் அடித்திருக்கும் போலும். பவர்பிளே மற்றும் டெத் ஓவர்களில், சமபலம் காட்டி சம்பவம் செய்யும் ஷமியை 15-வது ஓவரிலேயே மீண்டும் கொண்டு வந்தார். ஆனால், அதற்கு பலனாகக் கிடைத்தது லாங் ஆனில் பறந்த இரண்டு சிக்ஸர்கள் மட்டுமே.
ஆபத்தானதாக இந்தக் கூட்டணி மாறுவதற்கான அத்தனை அறிகுறிகளும் தென்படத் தொடங்க, கேம் சேஞ்சர் அவதாரத்தை மறுபடியும் எடுத்தார் ரஷித் கான். இத்தொடரில் முன்னதாக 2 போட்டிகளில் 2 விக்கெட்டுகளை மட்டுமே ரஷித் எடுத்திருந்தார். அப்படியிருக்க இந்த ஒரு போட்டி மறுபடியும் பழைய ரஷித்தை தட்டி எழுப்பி விட்டது. தவானின் விக்கெட்டை அவரது கூக்ளி ஏற்கெனவே காலி செய்திருந்தது. அந்த மேஜிக் திரும்பவும் உயிர்பெற, லிவிங்ஸ்டன் மற்றும் ஷாருக்கான் இருவரையுமே ஒரே ஓவரில் அனுப்பி வைத்தார் ரஷித். அது அவருடைய கடைசி ஓவர்... கொஞ்சம் பொறுமையாக அதை மட்டும் சாய்ஸில் விட்டிருந்தால் இருவரது விக்கெட்டுகளையும் காப்பாற்றி, இறுதிநேரத்தில் ரன்ரேட்டை உயர்த்தி, 200-ஐ எளிதாகத் தாண்டி இருக்கலாம். அதைச் செய்யத் தவறியது பஞ்சாப் தரப்பு.
இந்தத் தவறுக்கான தண்டனையாக கடைசி 4 ஓவர்களில் 34 ரன்களை மட்டுமே பஞ்சாப்பால் சேர்க்க முடிந்தது. 190 என்பது இலக்காக, பேக் டு தி கேம் என வந்து அமர்ந்திருந்தது, குஜராத்.
பழைய போட்டிகளின் முடிவுகள் இது எட்டக்கூடிய ஸ்கோர் என்பதனை உறுதி செய்தாலும், தொடக்கம் முதலே அதிரடி காட்டாவிட்டால், பஞ்சாப்பின் பலமான பௌலிங் படைக்கு இரையாக வேண்டியதுதான் என்பதில் குஜராத் மிகத் தெளிவாக இருந்தது. தொடக்கம் முதலே ரன்ரேட்டை குறைய விடக்கூடாது என்பதில் சர்வ ஜாக்கிரதையாக இருந்தனர். வைபவ் மற்றும் அர்ஷ்தீப்பின் முதல் மூன்று ஓவர்கள், பலத்த சேதாரத்தைக் காண பதறியடித்து ரபாடாவிடம் அபயம் புகுந்தது பஞ்சாப். ஷார்ட் பாலோ, பேக் ஆஃப் லெந்த்தோ, வேர்டுக்கான ஆயுதமாகப் பார்க்கப்பட, வேகம் பவுன்ஸ் எல்லாம் கலந்து கட்டி அவரை வெளியேற்றினார் ரபாடா.
விஜய் ஷங்கருக்குப் பதில் அணியில் இணைந்த சாய் சுதர்சனுக்கும் வேர்ட் சீக்கிரம் வெளியேறியது அவரது மொத்தத் திறனையும் வெளிக்கொணரும் வாய்ப்பாக அமைந்தது. டிஎன்பில்லை கடந்த சீசனில் பார்த்தவர்களுக்கு, எல்லாப் போட்டிகளிலும் நம்பிக்கைக்குரியவராக வலம் வந்த சாய் சுதர்சனைக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். இந்த ஐபிஎல் களமும் அவருக்கான பெரிய பிளாட்ஃபார்மாக முதல் போட்டியிலேயே அமைந்தது.
ரபாடா பந்தில் ஷார்ட் ஃபைன் லெக்கில் கிடைத்த பவுண்டரியும், ஷார்ட் பாலில் அவர் அடித்த புல் ஷாட்டும் அபாரம். டிஎன்பிஎல்லில் செய்ததைப் போல், அதிரடியாக ரன்குவிக்கவில்லை என்றாலும் ஆங்கரிங் ரோலை சரியாகச் செய்தார் சாய். சந்தித்த ராகுல் சஹாரின் முதல் பந்தையே, சிக்ஸருக்குப் பறக்க விட்டிருந்தார் சாய். அதற்கான ஸ்வீட் ரிவென்ஜாக ராகுல் சஹாரே அவரது விக்கெட்டை இறுதியில் எடுத்தார். அவரது கூக்ளி காரியத்தைக் கச்சிதமாக முடிந்திருந்தது.
இன்னொரு முனையில் இருந்த கில்தான் இப்போட்டியில் குஜராத்தின் கதாநாயகன். தொடக்கம் முதலே முழு பலத்தோடும், நம்பிக்கையோடும்தான் அவர் போட்டியை அணுகினார். கில்லியாகக் களத்தில் அதகளம் காட்டக்கூடிய கில், பல காலமாகத் தொலைந்து போயிருந்தார். அந்தப் பழைய கில்லின் தரிசனம், அவரது குஜராத் நாள்களில் காணக் கிடைக்கிறது.
கடந்த போட்டியில், டில்லிக்கு எதிராக, 32 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்திய கில், இந்தப் போட்டியிலும் அதே நிலைப்புத்தன்மையோடு ஆடினார். 'வேகப் பந்து வீச்சாளர் எல்லோரும் ஓரமாகச் செல்லுங்கள்' எனும்படி, எல்லோருடைய பந்துகளும் சூரையாடப்பட்டன. 29 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டிவிட்டாலும், அங்கிருந்தும் தொடர்ந்து அணியை முன்னோக்கி எடுத்துச் சென்றார். பந்துக்கும் தேவைப்படும் ரன்களுக்கான இடைவெளியை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க அவ்வப்போது பெரிய ஷாட்டுகளுக்கு உத்திரவாதமளித்தார். 59 பந்துகளில் 96 ரன்களைக் குவித்தவர், இறுதியில் ரபாடாவின் வொய்ட் ஃபுல் டாஸிற்கு விக்கெட்டை விட்டார். 162.7 ஸ்ட்ரைக் ரேட்டோடு ரன்களைக் குவித்த கில்தான் குஜராத்தின் கண்களில் ஒளியினைக் கொண்டு வந்தார்.
ஆனால், எதிர் முனையில் பஞ்சாப்புக்கான ரட்சகராக அர்ஷ்தீப் இருந்தார். யார்க்கர்கள், ஸ்லோ பால்கள், பவுன்சர்களோடு மிரட்டியதோடு தனது ஸ்பெல்லில் வீசிய கடைசி இரண்டு ஓவர்களில் வெறும் 11 ரன்கள் மட்டுமே கொடுத்து பஞ்சாப்புக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தார். விக்கெட்டுகளின்றி அவர் முடித்திருந்தாலும் கடைசி ஓவர் வரை போட்டி சென்றது அவரால்தான். 6 பந்துகளில், 19 ரன்கள் தேவை என்ற நிலைக்கு போட்டி வந்தது.
களத்தில் இருப்பது, பாண்டியா என்பதுவும் இறுதி ஓவரை வீசப் போவது ஓடியன் ஸ்மித் என்பதுவும் நடுநிலை ரசிகர்களுக்கே பல கணக்கீடுகளை கணப்பொழுதில் தோன்ற வைத்திருக்கும். அதைப் பொய்யாக்காதவாறு, நான்கு ஓவருக்கான கன்டென்டை, அந்த ஒரு ஓவர் கொடுத்தது. முதல் பந்து வொய்டாகி உதிரியுடன் இணைந்து கொள்ள, அதற்கடுத்த பந்தில் பாண்டியா ரன் அவுட். மில்லர் அடித்த ஒரு பவுண்டரியால் இறுதியில் இரண்டு பந்துகளில் 12 ரன்கள் வேண்டுமென்ற நிலை. ஸ்லாட்டில் விழுந்த பந்தை சிக்ஸராக்கி 'கேம் இஸ் ஆன்' என திவேதியா கர்ஜிக்க, இறுதிப் பந்தின் மதிப்பு பன்மடங்கானது. கடைசிப் பந்தும் ஓடியனால் ஸ்டம்புக்கு வெளியே ஸ்லாட்டில் வீசப்பட, கொண்டாடிய திவேதியா அதனையும் சிக்ஸராக்கி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அணியை வெல்ல வைத்தார்.
கில்லின் விக்கெட்டை வீழ்த்த முடியாத இடத்திலேயே பஞ்சாப் சரியத் தொடங்கி விட்டது. கூடுதலாக ஒரு பௌலர் வேண்டும் என ராஜபக்ஷவிற்கு பதில் ஓடியன் ஸ்மித்தோடு பஞ்சாப் இறங்க, அவர்தான் கடைசியில் அவர்களை இக்கட்டிலேயே தள்ளினார்.
பிளேயிங் லெவனைக்கூட வடிவமைக்க முடியாத அணியாக ஏலத்திற்குப் பிறகு வர்ணிக்கப்பட்ட அணிதான் இத்தொடரில் இதுவரை வீழ்த்தப்படாத அணியாக வலம் வருகிறது. கேகேஆருக்கு அடுத்தபடியாக புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்துவிட்டது.
ஐபிஎல் களம் சூடேறத் தொடங்கியுள்ள நிலையில், வார இறுதியில் நடக்க உள்ள நான்கு போட்டிகளும் இதுவரை நிகழ்ந்தவற்றை தலைகீழாகக்கூடப் புரட்டிப் போடலாம்.
source https://sports.vikatan.com/ipl/ipl-2022-tewatia-and-gill-take-home-gujarat-in-a-last-over-thriller-against-punjab
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக