Ad

செவ்வாய், 21 ஜூலை, 2020

தனிமனித இடைவெளி உருவாக்கும் சருமத் தேடல்! என்னனு தெரியுமா? #SkinHunger

கொரோனா... கடந்த ஆறு மாதங்களாக நம் இயல்பு வாழ்க்கையையும், நிம்மதியான உறக்கத்தையும் கெடுத்துக்கொண்டிருக்கும் நுண்ணுயிரி! கொரோனாவால் நாம் எத்தனையோ பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறோம். அதில் ஒன்றுதான் ஸ்கின் ஹங்கர் (Skin hunger).

தொடுதல்

கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு `தொடுதல்' மூலம் எளிதில் பரவும் என்பதால் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து வருகிறோம். மற்றவர்களின் ஸ்பரிசம் இல்லாத காரணத்தால் ஏற்படும் உணர்வே ஸ்கின் ஹங்கர். இதனைத் தமிழில் `சருமத் தேடல்' அல்லது `தொடுதலுக்கான ஏக்கம்' என்று குறிப்பிடுகிறார்கள். குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சியும், நண்பர்களிடம் ஆறுதலாகத் தொட்டுப் பேசியும் பழக்கப்பட்டு வந்த நமக்குத் தனிமனித இடைவெளி பெரும் சவால்தான்.

இந்த ஸ்கின் ஹங்கர் பிரச்னையை சமாளிக்க இஸ்ரேலின் இயற்கை மற்றும் பூங்கா ஆணையம் மரத்தைக் கட்டியணைக்கும் விஷயத்தை வலியுறுத்தி வருகிறது. ``இந்தக் கொரோனா காலகட்டத்தில், உலகம் முழுவதும் உள்ள மக்கள் இயற்கை அதிகம் உள்ள பகுதிகளுக்குச் செல்லுங்கள். நன்றாக மூச்சு விடுங்கள். ஒரு மரத்தைக் கட்டியணையுங்கள். உங்களது அன்பை வெளிப்படுத்துங்கள். அன்பை நீங்களும் பெறுங்கள்" என்று அபோல்லோனியா தேசிய பூங்காவின் இயக்குநர், ஓரிட் ஸ்டெயின்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.

`ஸ்கின் ஹங்கர்' பிரச்னை குறித்தும், அதற்கான தீர்வுகள் பற்றியும் உளவியல் ஆலோசகர் ஸ்ரீதேவியிடம் பேசினோம்.

உளவியல் ஆலோசகர் ஸ்ரீதேவி

தொடுதலில் முக்கியத்துவம்:

``நம் உடலில் மிகப்பெரிய பாகம் எது தெரியுமா? `தோல்'தான். அது இரண்டு சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ளது. சருமத்தில் ஆங்காங்கே வலி உணரும், குளிர் உணரும் மையங்கள் மற்றும் தொடுதலை உணரும் மையங்கள் உள்ளன. ஒருவர் நம்மை அன்பாகவும், ஆதரவாகவும் தொடும்போது நம் உடலில் ஆக்ஸிடோசின் , செரடோனின், வாஸோபிரசின் உள்ளிட்ட முக்கியமான ஹார்மோன்கள் அதிகம் சுரக்கின்றன. இவை நம் மன உளைச்சல், கோபத்தைக் குறைத்து அமைதியான, மகிழ்ச்சியான மனநிலைக்கு நம்மைக் கொண்டுசெல்கின்றன.

பெற்றோர்கள், குழந்தைகள், சகோதரர்கள், நண்பர்கள் என யார் மீதும் நமக்கு உள்ள அதீத அன்பை வெளிப்படுத்த வார்த்தைகளைவிடச் சின்ன சின்ன ஸ்பரிசங்களே அதிகம் உதவுகின்றன. பிறந்ததிலிருந்தே பெண்கள் அதிக தொடு உணர்ச்சி உள்ளவர்கள். இதன் காரணமாகவே அவர்கள் தங்கள் காதலரையும், குழந்தைகளையும், நண்பர்களையும் அணைப்பதற்கு அவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள்.

Also Read: `கொரோனா பயம்... இப்போது விரக்தி கலந்த கோபமாக மாறி வருகிறது!'- ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

குழந்தைகளும் தொடு உணர்ச்சியும்!

தொடுதலின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹார்லோ மற்றும் சிமர்மேன் எனும் அறிஞர்கள் நடத்திய ஆய்வில், பிறந்த குரங்கு குட்டிகளைத் தொடாததால் மனச்சோர்வு, நோய் ஏற்பட்டுச் சிறு வயதிலேயே அவை மரணம் அடைந்துவிடுவதைக் கண்டறிந்தனர். கைவிடப்பட்ட குழந்தைகளிடமும் இதேபோன்ற விளைவுகள் ஏற்பட்டன.

baby

10 வாரங்களிலிருந்து ஆறு மாதம் வரையுள்ள குழந்தைகள் மீது நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், குழந்தைகளை வருடிக்கொடுக்குமாறு கூறப்பட்டபோது குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுவது குறைந்தது. ஆனால், வருடிக்கொடுக்காத குழந்தைகளுக்கு அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. அன்பாகத் தொட்டு, தூக்கி வளர்க்கப்பட்ட குழந்தைகள் மேலான, ஆரோக்கியமான, சந்தோஷமான பெரியவர்களாக வளர்ந்தனர். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா சூழலில் குழந்தைகளைத் தூக்கி, கொஞ்சுவது மட்டுமல்ல, தொடுவதேகூட கேள்விக்குறியாகியுள்ளது.

ஸ்கின் ஹங்கர் பிரச்னை:

stress

நமக்கு சந்தோஷத்தையும், ஆறுதலையும் தரக்கூடிய சின்ன சின்ன ஸ்பரிசங்கள் தற்போது ஏற்பட்டுள்ள தனிமனித இடைவெளியால் தடைப்பட்டுள்ளன. இதனால் தொடுதல் காரணமாக நம் உடலில் சுரக்கும் மகிழ்ச்சி ஹார்மோன்கள் குறைந்து தேவையில்லாத எரிச்சலையும், மனஅழுத்தத்தையும் ஏற்படுத்தும். `நமக்கு யாருமே ஆறுதலுக்காக இல்லை' என்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்தும். தனிமையை அதிகம் உணர நேரிடலாம். ஒருவித தாழ்வுமனப்பான்மை கூட ஸ்கின் ஹங்கர் பிரச்னையால் ஏற்படலாம். அதிகமான தொடுதலும், அரவணைப்பும் இல்லாமல் வளரும் குழந்தைகள் பிடிவாத குணத்துடன் வளர வாய்ப்புள்ளது.

மொத்தத்தில் கொரோனாவா பரவல் காரணமாக நமக்கு ஏற்கெனவே ஏற்பட்டிருக்கும் மன உளைச்சல் இந்த `ஸ்கின் ஹங்கர்' பிரச்னையால் மேலும் அதிகரிக்கும்.

தீர்வுதான் என்ன?

`தோட்டமிடுதல்' இதற்குச் சிறந்த தீர்வாக அமையும். செடி, கொடிகளைத் தொடுவதால் கொரோனா பரவுமோ என்ற அச்சம் ஏற்படப் போவதில்லை. அதனால் தினமும் சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் வீட்டில் உள்ள பூச்செடி, கொடிகள், மரங்களுக்குத் தண்ணீர் விடலாம். செடிகளிலிருந்துவரும் இலைகள், பூக்கள், மொட்டுகளைச் சிறிது நேரம் தொட்டுப் பார்க்கலாம். மனிதர்களைத் தொடும்போது உடலில் உற்பத்தியாகும் மகிழ்ச்சி ஹார்மோன்கள் இலை, பூக்களைத் தொடும்போதும் நம் உடலில் சுரக்கின்றன.

தோட்டமிடுதல்

அடுத்ததாக, நீங்கள் செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களாக இருந்தால் அவற்றுடன் கொஞ்ச நேரம் விளையாடலாம். அவற்றைத் தொடும்போதும் மகிழ்ச்சி மற்றும் மன அமைதிக்கான ஹார்மோன்கள் நம் உடலில் உற்பத்தியாகின்றன. செல்லப்பிராணிகளுடன் விளையாடிய பிறகு கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவிவிட வேண்டும்.

குழந்தைகளைத் தொடுவதற்கு முன்பு கைகளை நன்றாகச் சுத்தம் செய்திருக்க வேண்டும். கிளவுஸ் அணிந்திருக்கும் பட்சத்தில் மற்றவர்களையும் தொடலாம். ஆனால் உங்கள் கிளவுஸ் தூய்மையாக இருக்க வேண்டும். தவிர, தொட்டு ஆறுதலாகப் பேசுவதற்கு இணையாக அன்பான, பரிவான வார்த்தைகளை மற்றவர்களிடம் பயன்படுத்துங்கள். இது உங்களுக்கு ஒரு நிறைவையும், மற்றவர்களுக்கு ஓர் ஆறுதலையும் தரும்" என்றார்.

உங்கள் கைகளால் உங்களுக்குப் பிடித்தவர்களின் கைகளைத்தானே தொட முடியவில்லை? உங்கள் கரிசனமான வார்த்தைகளால் அவர்களின் இதயங்களைத் தொடுங்கள்... கொரோனா கவலை உட்பட எல்லா பிரச்னைகளும் பறந்தோடிவிடும்.



source https://www.vikatan.com/health/healthy/how-to-overcome-skin-hunger-issue-occurs-due-to-social-distancing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக