Ad

வியாழன், 16 ஜூலை, 2020

இன்று சர்வதேச நீதி தினம்... ஆனால், இந்தியா இதைக் கொண்டாடுவதில்லை! #InternationalJusticeDay

இன்று சர்வதேச நீதி தினம். ஆங்கிலத்தில் சொல்வதானால் International Justice Day. ஜூலை 17, 1998-ல் ரோம் நகரில் நடந்த உலக நாடுகளின் மாநாட்டில் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை (International criminal court) உருவாக்குவதற்கான ரோம் ஒப்பந்தம் உருவானது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2002-ம் ஆண்டு ஜூலை மாதம் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் நிறுவப்பட்டது. இந்த ரோம் ஒப்பந்தத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம்

2010-ம் ஆண்டு, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உறுப்பு நாடுகள், இந்த ஒப்பந்தத்தின் மதிப்பாய்வுக் கூட்டத்தை நடத்தின. அந்தக் கூட்டத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக அடித்தளமிட்ட, ரோம் ஒப்பந்தம் கையெழுத்தான ஜூலை 17-ம் தேதியைச் சர்வதேச நீதி தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. சர்வதேச நீதிமன்றத்துக்கான தேவையை உணர்த்தவும், சர்வதேச நீதி என்பது என்ன என்ற புரிதலை உருவாக்கவும் இந்த தினம் உலகின் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

1998-ல் இந்தியா, சீனா உள்ளிட்ட சுமார் 40 நாடுகள் இந்த ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அமெரிக்கா, இஸ்ரேல், சூடான், ரஷ்யா ஆகிய நாடுகள் முதலில் கையெழுத்திட்டாலும் பிற்காலங்களில் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டன. இந்த நாடுகள் எல்லாம் தற்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராகவும் இல்லை. உலகளாவிய நியாயாதிக்க அமைப்பாகச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் நிறுவப்பட்ட போதும், உலகின் முதன்மையான சர்வதேச சக்தியுள்ள நாடுகள் உறுப்புரிமை பெறாததாதல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்த நாடுகளில் அதிகாரம் பெறாது. இதன் காரணமாகவே 123 நாடுகள் கொண்டாடும் சர்வதேச நீதி தினம், ரோம் ஒப்பந்தத்தில் உறுப்பு நாடுகளாக இல்லாத இந்தியா உள்ளிட்ட பல முக்கிய நாடுகளில் அங்கீகரிக்கப்படுவதில்லை.

ஐக்கிய நாடுகள் சபை

இன்று உலகில் இரண்டு சர்வதேச நீதி அமைப்புகள் உள்ளன. ஒன்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரத்தின் கீழ் வரும் சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice). இதில் ஐநாவில் உறுப்பினராக இருக்கும் அனைத்து நாடுகளும் உறுப்பினராக இருக்கும். மற்றொன்று ரோம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court). இதில் 1998-ல் ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் மட்டுமே உறுப்பு நாடுகளாக இருக்கும். முதலில், இனப் படுகொலை, மனிதக்குலத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் ஆகிய மூன்று குற்றங்களை விசாரிப்பதற்கு இந்த நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. பின்னர் ஒருவர் தேசிய ராணுவத்தைப் பயன்படுத்தி தேவையற்ற தாக்குதலில் ஈடுபடும் குற்றமும் இதில் சேர்க்கப்பட்டது.

இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைத்தான் இந்தியா ஆரம்பம் முதலே கடுமையாக விமர்சித்து வருகிறது. மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பது மிகவும் பரந்த பொருள் கொண்டதாக இருப்பதும், உறுப்பு நாடுகள் இல்லாத நாடுகளையும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் விசாரணைக்கு உட்படுத்தலாம் என்னும் விதியையும் இந்தியா எதிர்த்தது. அணு ஆயுதப் பயன்பாட்டைக் குற்றமாக வரையறுக்க இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தவறிவிட்டதையும் இந்தியா சுட்டிக் காட்டுகிறது. இந்தியாவின் இறையாண்மையையும், இந்திய சட்டத்தின் சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் குறைப்பதாக இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் செயல்படும் என்ற பயத்தையும் இந்தியா வெளிப்படுத்தியிருக்கிறது. ஒரு தேசத்தின் எல்லைகளுக்குள் நடக்கும் செயல்பாடுகளை போர்க் குற்றங்களில் சேர்த்ததையும் இந்தியா எதிர்த்தது.

Also Read: நேபாள் - இந்திய உறவு சரிந்தது எப்படி... 2015 முதல் 2020 வரை நடந்தது என்ன?

இப்படி பல்வேறு காரணங்களுக்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. மேலும், இந்த நீதிமன்றம், வலுவான ஐரோப்பிய மேலை நாடுகளுக்குச் சாதகமாகச் செயல்பட்டுப் பின்தங்கிய நாடுகளுக்கு எதிராகச் செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆப்பிரிக்க ஒன்றியம் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களைத் திட்டமிட்டுக் குறிவைப்பதாக வெளிப்படையாகவே குற்றம் சாட்டியது. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இதுவரை சுமார் 12 குற்றவியல் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளது. அவற்றில் ஜோர்ஜியா, மியான்மர் தவிர மீதமுள்ள அனைத்தும் ஆப்பிரிக்க நாடுகளே என்பது குறிப்பிடத்தக்கது.

உலகை உலுக்கிய ஹிரோஷிமா குண்டுவெடிப்பு

முதலாம் உலக போரின் முடிவில் பாரிஸ் அமைதி மாநாட்டில் `சர்வதேசத் தீர்ப்பாயத்தின்’ தேவை குறித்து முதலில் பேசப்பட்டது. ஆனால், அது செயல் வடிவம் பெறவில்லை.

இரண்டாம் உலகப் போரின் நிறைவில் அப்போரில் நிகழ்ந்த குற்றங்களை விசாரிக்க நியூரெம்பேர்க், டோக்கியோ தீர்ப்பாயங்கள் நிறுவப்பட்டன. ஆனால், போரில் தோற்ற ஜெர்மனிய, ஜப்பானிய ராணுவ அதிகாரிகளையும் அரசாங்க அலுவலர்களையும் மட்டுமே விசாரித்து தண்டனைகள் வழங்கப்பட்டன. ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டு வீசிய அமெரிக்காவை இந்தத் தீர்ப்பாயங்கள் கண்டுகொள்ளவில்லை. இப்படி, இது போரில் வென்ற நாடுகள் தோற்றவர்களைத் தண்டிக்க உருவான தீர்ப்பாயமாக அமைந்ததேயன்றி சர்வதேச தீர்ப்பாயமாக அமையவில்லை. பின்னர், உருவான சர்வதேச நீதிமன்றமும் இன்றுவரை பல்வேறு எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றன.

புலி, வேட்டையாடி மானைக் கொல்வது இயற்கையின் நியதி. ஒரு விலங்கு தன் பசிக்குக் கொல்லும் இந்த நியதிகளுக்கு எல்லாம் நீதிகள் இல்லை. ஆனால், மனிதன் அப்படியில்லையே... தன் இனமான மனிதனை ஏதேதோ காரணங்கள் சொல்லி தானே கொல்லும் சுயநலவாதி அல்லவா? எனவேதான் சட்டங்களும் வரையறைகளும், கட்டுப்பாடுகளும், சரி, தவறுகளும், நீதியும் கொண்டே ஒரு மனிதனின் செயல்பாடுகளை நாம் அளவிட வேண்டியிருக்கிறது.

வெறும் இடமும் காலமும் மட்டுமே தீர்மானிக்கும் சரிகளும் தவறுகளும்தான் மனித வாழக்கையை நகர்த்திச் செல்கின்றன. அதாவது, ஒரு செயலில் நியாய அநியாயங்களை முதலில் இடம் தீர்மானிக்கும். உதாரணத்துக்கு இந்தியாவில் சரியெனப் பார்க்கப்படும் ஒரு வழக்கம் அமெரிக்காவில் தவறு எனப் பார்க்கப்படலாம். இரண்டாவது அதைக் காலம் தீர்மானிக்கும். உதாரணத்துக்கு 1920-ல் தவறு என நம்பப்பட்ட விஷயம் 2020-ல் சரியானதாக, நடைமுறை வாழ்க்கையில் சகஜமானதாகப் பார்க்கப்படலாம். ஆக, சரி தவறு என்பது காலமும் இடமும் தீர்மானிப்பவை. அந்த சரிகளுக்கும் தவறுகளுக்கும் மாநில வாரியாக, தேசங்கள் வாரியாகப் பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. அதுமட்டுமன்றி, காலத்திற்குத் தகுந்தவாறு இந்தச் சட்டங்கள் திருத்தியெழுதப்பட்டு மேம்படுத்தவும் படுகின்றன.

நீதி (மாதிரி படம்)

ஆனால், குற்றங்கள் என்பது வேறு. குறிப்பாக, மனித உயிர்களை வதைக்கும் பெரும் குற்றங்கள் உலகம் முழுக்க ஒரே அளவுகோல் கொண்டே அளக்கப்படுகின்றன. ஆனால், இவற்றை விசாரிக்க, தண்டனை வழங்க உலகம் முழுக்க ஒரே சட்டமும், அந்தச் சட்டத்தைச் செயல்படுத்தும் அதிகாரமும் அமைப்பும் இல்லாமல் இருந்தது. இப்படியான ஒரு பொதுவான அமைப்பு உருவாவதன் தேவையை உலகுக்கு உணர்த்தின முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள்.

பல நாடுகள் ஒருபுறம் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் தேவையை வலியுறுத்தினாலும் மறுபுறம் இந்நீதிமன்றங்களின் அரசியல் தன்மையும் நடுநிலைமையையும், கட்டமைப்பையும் கேள்விக்குறியாக்குகின்றன. இவ்வாறு இல்லாமல் உலகம் முழுமைக்கும் பொருந்தும் ஓர் உயர்ந்த வரையறைக்குள் இருந்து ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது செயல்பட வேண்டியது அவசியம்.



source https://www.vikatan.com/news/international/why-india-doesnt-observe-international-justice-day-on-july-17th

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக