Ad

வியாழன், 16 ஜூலை, 2020

கும்பகோணம்:`எம்.ஜி.ஆருக்கு செய்கிற சிறப்பு!' - வலுக்கும் தனிமாவட்ட கோரிக்கை

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 3 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 14,000 கடைகளை அடைத்து இன்று அப்பகுதியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். எம்.ஜி.ஆர் சிறுவயதில் வாழ்ந்த, படித்த பகுதி கும்பகோணம். அவருக்கு சிறப்பு செய்கிற வகையில் முதல்வர் இதை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கடையடைப்பு போராட்டம்

கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை இணைத்து கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள், வணிகர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த பலர் கடந்த 25 வருடங்களாக வலியுறுத்தி வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து புதிய மாவட்டங்களாக சிலவற்றை அறிவித்தார்.

அதில் கும்பகோணம் இடம்பெறாததைக் கண்டு அப்பகுதியினர் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் தனி மாவட்ட கோரிக்கையைத் தீவிரபடுத்தும் விதமாக ஒவ்வொரு போராட்டமாக நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளரான ம.க.ஸ்டாலின் என்பவரிடம் பேசினோம். ``ஒரு மாவட்டத்துக்குரிய அனைத்து அரசு அலுவலகங்களும் கும்பகோணத்தில் செயல்பட்டு வருகிறது. தனி மாவட்டமாக அறிவிப்பதற்கான அனைத்துத் தகுதியும் கும்பகோணத்துக்கு உள்ளது.

கடையடைப்புப் போராட்டம்

இந்நிலையில் சின்னச் சின்ன ஊர்கள் சிலவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனி மாவட்டமாக அறிவித்தார். இதற்கு முன்னதாகவே வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சட்டமன்றத்தில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என உறுதிகொடுத்தார். ஆனால், இன்னும் செயல்படுத்தவில்லை.

தற்போது நாங்கள் இதற்காக வீட்டு வாசல் மற்றும் கோயில்களில் கோலமிட்டோம். அத்துடன் இதவலியுறுத்தி முதல்வருக்கு 2 லட்சம் தபால் அட்டைகளை அனுப்பும் போராட்டத்தை நடத்தினோம். இன்று கும்பகோணம் வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 14,000 கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை இது போன்ற போராட்டங்கள் தொடரும்" என்றார்.

கோலமிடும் போராட்டம்

அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளரான சத்யநாராயணன், ``எம்.ஜி.ஆர் தன்னுடைய சிறு வயதில் கும்பகோணத்தில் வாழ்ந்தார். பள்ளிப்படிப்பை இங்குதான் படித்தார். அவர் படித்த யானையடி அரசு தொடக்கப்பள்ளியில் அவர் நினைவாகச் சிலை நிறுவப்பட்டு இன்றும் செயல்பட்டு வருகிறது.

Also Read: கும்பகோணம்: `100-க்கு வந்த அழைப்பு!’ - எண்ணெய் வியாபாரி கொலை வழக்கில் திடீர் திருப்பம்

இதை உணர்ந்து முதல்வர் கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக அறிவித்தார் என்றால் அது எம்.ஜி.ஆருக்கு செய்கிற சிறப்பாகவும் அமைந்துவிடும். அத்துடன் கோயில் நகரம் எனப் பெயரெடுத்த கும்பகோணம் சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது. மகாமகம் குளத்தில் தென்னகத்து கும்பமேளா எனச் சொல்லப்படுகிற வரலாற்றுச் சிறப்புமிக்க மகாமகம் பெருவிழா கொண்டாடப்படும் சிறப்பையும் பெற்றுள்ளது.

ம.க.ஸ்டாலின்

இதைத் தனி மாவட்டமாக அறிவிக்கும்பட்சத்தில் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் மட்டும் புதிதாக உருவாக்க வேண்டும். மற்றபடி அமைப்பிலேயே தனி மாவட்டத்திற்கென அனைத்து அம்சங்களுடனேயே தற்போது கும்பகோணம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. உரிய தகுதி இருப்பதாலேயே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்" என்றார் ஆதங்கத்துடன்.



source https://www.vikatan.com/news/tamilnadu/people-protest-regarding-kumbakonam-separate-district-demand

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக