Ad

வியாழன், 16 ஜூலை, 2020

கரூர்: டிக்டாக், ஃபேஸ்புக்குக்கு மாற்றாகப் புதிய செயலிகள்! - 10 இளைஞர்களின் புதிய முயற்சி

கரூரைச் சேர்ந்த 10 பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து, டிக்டாக்குக்கு மாற்றாக ஜில்ப்ரோ (chilbro) என்ற செயலியையும், ஃபேஸ்புக்குக்கு மாற்றாக தோஸ்துடா (dosthda.com) என்ற பெயரில் சமூகவலைதளப் பக்கங்களை வடிவமைத்துள்ளனர்.

ஜில்ப்ரோ செயலி

திருவிளையாடல் தருமி பாணியில், 'இன்று மனிதனால் பிரிக்க முடியாதது எது?' என்று கேட்டால், 'ஆண்ட்ராய்டு மொபைலும் அதன் சமூகவலைதள பயன்பாடும்' என்று அடித்துச் சொல்லலாம். அந்த அளவுக்கு நமது பகல், இரவு என எல்லா நேரத்தையும் சமூகவலைதளங்களும், டிக்டாக் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த செயலிகளும் ஆக்ரமித்துள்ளன.

Also Read: குளித்தலை: `என் குழந்தைங்க இனி நல்ல சாப்பாடு சாப்பிடப்போறாங்க!' - நெகிழும் அருள்ராஜ்

இந்தநிலையில், சமீபத்தில், சீனா - இந்தியாவுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்னை, அதையொட்டிய பிணக்குகளைத் தொடர்ந்து, சீனாவைச் சேர்ந்த 59 மொபைல் செயலிகளை இந்திய அரசு பயன்படுத்த தடைவிதித்தது. இந்திய நாட்டின் ரகசியங்கள் அந்தச் செயலிகள் மூலம் சீனாவால் கண்காணிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்பதும் அந்தத் தடைக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது.

ஜில்ப்ரோ செயலி பயன்பாடு

இந்தநிலையில், டிக்டாக் உள்ளிட்ட செயலிகளில் மூழ்கிக் கிடந்த இந்தியவாசிகள், அதற்கு தடைவிதித்ததும் கால்களில் வெந்நீர்பட்டது போல் துடித்துப்போனார்கள். 'டிக்டாக்கில் முகம் காட்டலன்னா, எங்கள் இதயம் வெடிச்சுருமே' என்று அல்லாடிப்போனார்கள்.

இந்தநிலையில், மென்பொருள் துறையில் கரைகண்ட இளைஞர்கள் சிலர், அந்தச் செயலிகளுக்கு மாற்றாகப் புதிய செயலிகளை உருவாக்கி வருகிறார்கள். அந்த வகையில், கரூரைச் சேர்ந்த 10 இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து, ஜில்ப்ரோ என்ற செயலியையும், தோஸ்துடா என்ற சமூகவலைதளப் பக்கத்தையும் உருவாக்கியுள்ளனர்.

ஜில்ப்ரோ (chilbro) செயலியை உருவாக்கிய இளைஞர்களில் ஒருவரான, அபிஷேக்கிடம் பேசினோம்.

"நான் உட்பட 10 பேரும் சேர்ந்துதான், இந்தச் செயலியைக் கண்டுப்பிடித்துள்ளோம். நாங்க 10 பேரும் பள்ளிக்காலத்தில் இருந்தே நண்பர்கள். இப்போது ஒன்றாகச் சேர்ந்து, லீட் அப் டெக்னாலஜி என்று கம்பெனி ஆரம்பித்து, தனிப்பட்ட நபர்கள் மற்றும் கம்பெனிகளுக்கு அப்ளிகேஷன்கள், வெப்சைட், செயலிகள்னு வடிவமைச்சு தந்தோம்.

அபிஷேக்

இந்தநிலையில்தான், இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் டிக்டாக், ஃபேஸ்புக் போன்ற செயலி, சமூக வலைதள பக்கங்களை நாமளே வடிவமைச்சா என்னென்னு தோணுச்சு. கடந்த டிசம்பர் மாதமே இதற்கான வேலையை ஆரம்பிச்சு, ஜில்ப்ரோ செயலியை வடிவமைத்து, கடந்த ஏப்ரல் மாதம் லாஞ்ச் பண்ணினோம். அப்போது சரியா ரெஸ்பான்ஸ் இல்லை. இந்தச் செயலி கிட்டத்தட்ட டிக்டாக் மாதிரியேதான் இருக்கும். இதன் சர்வர் அதிகப் பாதுகாப்பு கொண்டது.

Also Read: டிக் டாக் தடையால் ஜாக்பாட்! - ஒரு கோடி டவுன்லோடுகளைக் கடந்த `சிங்காரி’

அதேபோல், பெண்கள் போடும் வீடியோக்களுக்கு யாரேனும் ஆபாசக் கமென்டுகள் போட்டால், அதைச் சம்பந்தப்பட்ட வீடியோ பதிவிடும் பெண்களே, கமென்ட்களை நீக்க முடியும். இப்படிப் பல வசதிகள் இந்தச் செயலியில் உள்ளது. சீன செயலியான டிக்டாக்கை இந்திய அரசு தடை செய்ததும், எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு, எங்கள் ஜில்ப்ரோ செயலி கொஞ்சம் கவனம் பெற்று, இப்போது 8,000-க்கும் அதிகமானவர்களால் இது பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனால், இந்த ஜில்ப்ரோ செயலியில் அப்டேட் செய்துகிட்டே இருக்கிறோம்.

ஜில்ப்ரோ

அதேபோல், ஃபேஸ்புக் பக்கமும் அதிக இந்தியர்களால் பயன்படுத்தப்படுது. ஆனால், இங்கேயும் பெண்கள் போடும் பதிவுகளுக்கு ஆபாசமான கமென்டுகளைப் பதிவிடுகிறார்கள். அதனால், நாங்கள் வடிவமைத்துள்ள தோஸ்துடா வலைதளப் பக்கத்தில், தவறான கமென்ட்களை டெலிட் செய்யக்கூடிய வசதி உள்ளது. அதோடு, குறிப்பிட்ட தவறான வார்த்தைகளை அந்தப் பக்கத்தின் சர்வர் தானாகவே அனுமதிக்காமல் செய்யும் ஆப்ஷனையும் சேர்த்துள்ளோம். அடுத்த மாதம் தோஸ்துடாவை லாஞ்ச் பண்ண இருக்கிறோம். கண்டிப்பாக இது இந்தியர்களை கவரும்" என்றார் உற்சாகத்துடன்.



source https://www.vikatan.com/technology/tech-news/karur-engineers-make-and-launch-new-app-against-tiktok-app

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக