உத்தரப்பிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் தூபேவை ஒரு கொலை முயற்சி விவகாரம் தொடர்பாக உ.பி தனிப்படை போலீஸார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யச் சென்றுள்ளனர். இதை முன்னரே அறிந்த தூபே, தன் ஆட்களின் உதவியுடன் போலீஸ் படை மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 8 போலீஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு ரவுடி 8 காவலர்களைக் கொலை செய்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து தப்பிச் சென்ற ரவுடி தூபே, அவரின் கூட்டாளிகளைப் பிடிக்க 25 சிறப்புப் படை நியமிக்கப்பட்டது. அவர்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களில் தூபேவை தேடும் பணியில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டனர். கடந்த ஒரு வாரமாக ரவுடியின் கூட்டாளிகள் கைது செய்யப்படுவதும் என்கவுன்டர் செய்யப்படுவதும் என நிறைய சம்பவம் நடைபெற்றன. அப்போதும் ரவுடி இருக்கும் இடம் தெரியவில்லை.
Also Read: உ.பி : `ரவுடி தூபேயின் நிழல்; ஹிமாச்சலில் தஞ்சம்’ - என்கவுன்டர் செய்யப்பட்ட அமர் தூபே
இறுதியாக மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனில் இருக்கும் காளி கோயிலுக்கு நேற்று காலை விகாஸ் தூபே சென்றுள்ளார். அவரை கவனித்த கடைக்காரர் ஒருவர் ரகசியமாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த மத்தியப் பிரதேச போலீஸார், கோயில் வாசலில் வைத்தே தூபேவை கைது செய்தனர். பின்னர் ம.பி-யில் கைது செய்யப்பட்ட விகாஸ் தூபேவை உத்தரப்பிரதேச போலீஸாரிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்றன. இவை அனைத்தும் முடிந்து நேற்று இரவு தூபே உ.பி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மூன்று போலீஸ் வாகங்களின் பாதுகாப்புடன் விகாஸ் தூபே கான்பூருக்கு அழைத்து வரப்பட்டுள்ளார், வரும் வழியில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடியை, காவலர்கள் என்கவுன்டர் செய்துள்ளனர்.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள கான்பூர் போலீஸார், “தூபேவை கைது செய்து உத்தரப்பிரதேசத்துக்கு அழைத்து வரும் வழியில் அதிக மழை பொழிந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ரவுடி இருந்த வாகனம் சாலையில் வழுக்கி விபத்துக்குள்ளானது. இதனால் காரில் இருந்த குற்றவாளியும் காவலர்களும் காயமடைந்தனர். அந்தச் சமயத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட தூபே உடனடியாக அருகிலிருந்த ஒரு காவலரின் துப்பாக்கியைப் பிடுங்கி போலீஸாரை நோக்கி சுட்டுள்ளார்.
Also Read: உ.பி போலீஸார் கொலை ; `கடைக்காரரின் தகவல்; போலி ஐடி கார்டு!’ - ரவுடி விகாஸ் தூபே கைது
அதற்குள் பிற காவலர்கள் தூபேவை சுற்றிவளைத்து சரண்டர் ஆகுமாறு தெரிவித்துள்ளனர். மீண்டும் ரவுடி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அவரிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக தூபே மீது போலீஸார் என்கவுன்டர் செய்துள்ளனர். படுகாயமடைந்த தூபே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார் அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் சில காவலர்களும் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவுடி தூபே என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரம் உ.பி மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. சம்பவம் நடந்த இடத்துக்கு தடயவியல் அதிகாரிகள் சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/india/gangster-vikas-dubey-killed-in-an-encounter
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக