கிருஷ்னகிரி மாவட்டம் ஓசூர் தேன்கனிக்கோட்டை பகுதியில் காட்டு யானை ஒன்று கடந்த மாதம் 11-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி இரவோடு இரவாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அந்தப் பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி விடுவிக்கப்பட்டது.
காட்டு யானையின் உடலில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் உதவியுடன் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் முதுமலை புலிகள் காப்பக வன ஊழியர்கள் கடந்த ஒரு மாதமாக அதைக் கண்காணித்து வந்தனர்.
அவ்வப்போது மேய்ச்சலில் ஈடுபட்டிருந்ததையும் பார்த்துள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு சத்தியமங்கலத்தில் இருந்து தெங்குமரஹாடா வழியாக முதுமலை சீகூர் வனத்திற்குள் நுழைந்த இந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் ரேடியோ சிக்னல் ஒரே இடத்தில் காட்டியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் சிக்னல் வரும் இடத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்ட யானை இறந்து கிடந்துள்ளது. இந்தத் தகவலை உடனே உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை ஊழியர் ஒருவர், "கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிகோட்டை பகுதி கிராமங்களில் ஆண் காட்டுயானை ஒன்று சுற்றித்திரிந்தது. யானை தாக்கி அடுத்தடுத்து 3 விவசாயிகள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இந்த யானையைப் பிடிக்க மக்கள் அழுத்தம் கொடுத்தனர். கடந்த மாதம் 11-ம் தேதியன்று மயக்க ஊசி செலுத்தி பிடித்து 12-ம் தேதி அதிகாலை சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது" என்றார்.
Also Read: இரண்டே நாள்களில் மூன்றாவது யானை பலி..! - என்ன நடக்கிறது கோவையில்?
யானையின் இறப்பு குறித்து நம்மிடம் பேசிய முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுஷல், "முதுமலை எல்லைக்குள் நுழைந்த இந்த யானையைக் கண்காணித்து வந்தோம். நேற்று முன்தினம் முதல் ரேடியோ சிக்னல் ஒரே இடத்தில் நகராமல் இருந்தது. சந்தேகத்தில் சென்று பார்த்தபோதுதான் யானை இறந்திருப்பது தெரிந்தது.
சீகூர் வனசரகத்திற்குட்பட்ட ஆனைக்கட்டி, தட்லட்டி நீர்வீழ்ச்சி அடிவாரப் பகுதியில் யானை இறந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதி என்பதால் இன்று பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும்" என்றார்.
source https://www.vikatan.com/news/animals/hosur-elephant-found-dead-in-mudumalai-forest-area
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக