Ad

திங்கள், 20 ஜூலை, 2020

அமைச்சரின் மனைவிக்காகத் திறக்கப்பட்ட கோயில்! -அ.தி.மு.க நிர்வாகியின் அதிர்ச்சிப் புகார்

கொரோனா பரவுதலை தடுப்பதற்காக தமிழகத்தில் கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் கும்பகோணத்தில் அமைச்சர் துரைக்கண்ணுவின் மனைவி கோயிலுக்கு உள்ளே சென்று சிறப்பு பூஜைகள் செய்த சம்பவம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அ.தி.மு.க நிர்வாகி ஒருவரே அறநிலையத்துறைக்கு புகார் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயில்

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தில் துர்க்கை அம்மன் என அழைக்கப்படுகிற பிரசித்தி பெற்ற தேனுபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மனைவி பானுமதி கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.

கோயில் நிர்வாகத்தினரும், பானுமதியை கோயிலுக்குள் செல்ல அனுமதித்ததுடன், அவர் வழிபடுவதற்காக சிறப்பு பூஜைகளையும் செய்தனர். சாமி தரிசனம் செய்ய வந்த பானுமதியுடன் அ.தி.மு.க-வை சேர்ந்த சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட பெண்கள் வந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

கொரோனா பரவுவதை தடுப்பதற்காக கோயில்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் அமைச்சர் மனைவி உள்ளிட்டவர்களை சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதித்த நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளார்.

அமைச்சர் துரைக்கண்ணு

இதுகுறித்து அந்த நிர்வாகியிடம் பேசினோம். `` ஆடி மாதத்தின் முதல் வெள்ளியான கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை துரைகண்ணுவின் மனைவி பானுமதி, கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். பொதுமக்கள் சிலர் கோயிலுக்கு வெளியே சாமி கும்பிட்டு கொண்டிருந்த நிலையில் பானுமதி உள்ள்ளிட்டவர்களை நிர்வாக அலுவலர் முத்துராமன் கதவைத் திறந்து உள்ளே அழைத்துச் சென்றார்.

Also Read: பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை... உச்சநீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள் என்னென்ன?

அத்துடன் அமைச்சர் மனைவிக்காக சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் வரை பூஜைகள் செய்துவிட்டு பானுமதி வெளியே வந்தார். கொரோனா பரவுதலை தடுப்பதற்காக மூன்று மாதத்திற்கு மேலாக தமிழகத்தில் கோயில்கள் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் அரசின் உத்தரவை தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சரின் மனைவியே மீறியுள்ளார்.

Also Read: `தேவையான வசதியை இறைவன் கொடுப்பார்!' - அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் துரைக்கண்ணு #corona

இதற்கு கோயில் நிர்வாகத்தின் சார்பிலும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் கோயில் வளாகம் மற்றும் வணிகர் சங்கத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. அவற்றை ஆய்வு செய்து அரசின் உத்தரவை மீறி செயல்பட்ட நிர்வாக அலுவலர் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் பொறுப்பில் உள்ள அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியிருக்கிறேன்" என்றார்.

இதையடுத்து, கோயிலின் நிர்வாக அலுவலர் முத்துராமனிடம் பேசினோம். ``அமைச்சர் துரைக்கண்ணுவின் மனைவி பானுமதி அடிக்கடி சாமி கும்பிட கோயிலுக்கு வருவார். தற்போது கோயில் மூடப்பட்டுள்ள இந்த நேரத்திலும் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது வாசலில் நின்றே சாமி கும்பிட்டுவிட்டுச் சென்று விடுவார். அவருக்காக அரசின் விதிகளை மீறவில்லை அவர் கோயிலுக்கு உள்ளே வந்தார் எனக் கூறுவது தவறான தகவல்" என்றார்.

கொரோனா தடுப்பிற்காக மூடப்பட்டுள்ள கோயில்

அமைச்சர் துரைக்கண்ணு தரப்பில் பேசியவர்களோ, ``பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயிலுக்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் தவறாமல் கோயிலுக்கு செல்வார், பானுமதி. சில சமயம் ராஜகிரியிலிருந்து நடந்தே செல்வதும் உண்டு. அதேபோல்தான் கடந்த வெள்ளிக்கிழமை சென்றதுடன் கோயிலுக்கு வெளியே நின்று சாமி கும்பிட்டுவிட்டு திரும்பிவிட்டார். கோயிலுக்குள் சென்றதாகவும் அரசின் உத்தரவை மீறியதாகாவும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சிலர் புகார் கூறுகின்றனர்" என்றனர்.

Also Read: மேட்டூர் அணை என்ன என் வீட்டுக் குடிநீர்க் குழாயா?- அமைச்சர் துரைக்கண்ணு சர்ச்சைப் பேச்சு



source https://www.vikatan.com/government-and-politics/controversy/minister-duraikannu-wife-violate-government-rules-in-lock-down-alleges-admk-cadre

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக