Ad

வெள்ளி, 17 ஜூலை, 2020

மதுரை: `தள்ளுவண்டி கிடைச்சதே பெரிய சந்தோஷம்!' - ஏழைப் பெண்ணை நெகிழ வைத்த தி.மு.க எம்.எல்.ஏ

கொரோனா ஊரடங்கு பல இடங்களில் தளர்த்தப்பட்டாலும் முழுமையாக நிறைவடையாத காரணத்தால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியவில்லை. இந்நிலையில் வீட்டு வேலை செய்து தன் 6 வயது மகனைக் காப்பாற்றி வந்த உமா சல்மா என்ற பெண் வீட்டு உரிமையாளர்களின் கொரோனா பயத்தால் வேலையை இழந்தார்.

கண்ணீருடன் நன்றி தெரிவித்த உமா சல்மா

இந்நிலையில், தன் வறுமையைப் போக்க தன் தந்தையின் தொழிலான டீ வியாபாரத்தைக் கையில் எடுத்து டூவீலரில் விற்பனை செய்து பிழைத்து வந்தார். இதுகுறித்து விகடன் இணையதளத்தில், `எப்படியாவது என் மகனை வளர்த்துடணும்!’ - பைக்கில் டீ வியாபாரம்; மதுரை நம்பிக்கைப் பெண் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம். இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்தும் உதவி செய்வதாகப் பலரும் நம்பிக்கை தெரித்துள்ளனர்.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ-வும் மருத்துவருமான டாக்டர் சரவணன் உமா சல்மாவுக்கு டீ வியாபாரம் செய்வதற்கு வசதியாகத் தள்ளுவண்டி ஒன்று வாங்கிக்கொடுத்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவர். சரவணன் நம்மிடம் பேசுகையில், " உமா சல்மா என்ற பெண்ணைப் பற்றி விகடனில் படித்த இணையக் கட்டுரை என்னை நெகிழ்ச்சியடையச் செய்தது. பலருக்கும் நம்பிக்கை அளிக்கும்விதமாக அந்தப் பெண் இயல்பாகப் பேட்டி அளித்திருந்தார். அந்தப் பெண்ணுக்கு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என முடிவெடுத்து, விகடன் மூலம் அந்தப் பெண்ணை தொடர்புகொண்டு பேசினேன். அவருக்கு என்னுடைய மருத்துவமனையில் பணி வழங்கலாம் என முடிவு செய்திருந்தேன்.

கண்ணீருடன் நன்றி தெரிவித்த உமாசல்மா

அவரின் குழந்தையைக் கவனிப்பதில் நேரம் சரியாக இருக்காது எனவும் அவருக்கு டீ வியாபாரம் செய்ய தள்ளுவண்டி வேண்டும் எனவும் கேட்டார். அதனால் அவருக்கு டீ, ஸ்நாக்ஸ் உள்ளிட்டவற்றை வைத்து வியாபாரம் செய்துகொள்ள வசதியாக அவர் கேட்ட வண்டியை வாங்கிக் கொடுத்துள்ளேன். அவருக்கு அந்தத் தொழிலைத் தொடர்வதில் சிரமம் இருந்தால் தாராளமாக என் மருத்துவமனையில் எப்போது வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளேன். அவரின் தள்ளுவண்டி டீக்கடை அடுத்தகட்டத்தை நோக்கி முன்னேறும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார் உற்சாகத்துடன்.

Also Read: `எப்படியாவது என் மகனை வளர்த்துடணும்!’ - பைக்கில் டீ வியாபாரம்; மதுரை நம்பிக்கைப் பெண்

மருத்துவர் சரவணனின் உதவி குறித்துப் பேசிய உமா சல்மா, "என்னுடைய நிலையை உலகுக்கு எடுத்துச் சொன்ன விகடனுக்கு மிக்க நன்றி. என்னை சரவணன் சார், அவரின் ஆஸ்பத்திரியில் வேலைக்குச் சேர்ந்துகொள்ள உதவினார். ஆனால், தற்போது என் மகனையும் கவனிச்சுக்கணும்னு சொல்லி டீக்கடை போட வண்டி கேட்டேன்.

பெண்ணை வாழ்த்திய டாக்டர்

நாளைக்கே புது வண்டி செஞ்சு தர்றேன்னு சொல்லி ஏற்பாடு செஞ்சுட்டார். அந்த வண்டியில் நான் டீ கேன், பிஸ்கட், பண்ணு, வர்க்கி, முறுக்குனு நிறைய வச்சுக்க முடியும். இது எனக்கு மிகப்பெரும் உதவி. வண்டி கிடைச்ச சந்தோஷத்தில் அழுகையே வந்திருச்சு" என்று நெகிழ்ந்தார்.

ஊரடங்கு காலத்தில் வேலையை இழந்த உமாசல்மா என்ற 26 வயது பெண் வறுமையை போக்க பைக்கில் டீ வியாபாரம் செய்தார். மதுரையை...

Posted by Vikatan EMagazine on Thursday, July 16, 2020


source https://www.vikatan.com/news/tamilnadu/thiruparankundram-dmk-mla-helped-poor-woman

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக