Ad

வியாழன், 16 ஜூலை, 2020

நீலகிரி: `இனியும் இந்த மலையை அழிக்க அனுமதிக்கக் கூடாது!' - வழக்கு தொடர்ந்த பள்ளி மாணவி

உலகில் பல்லுயிர்ச்சூழல் வளம் மிகுந்த எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாக உள்ளது. இந்த மலைத்தொடர்கள் சுமார் 5,000 வகையான பூக்கும் தாவரங்கள், 139 வகை பாலூட்டிகள், 508 வகைப் பறவைகள், 176 வகையான இரு வாழ்வுகள் எனப் பல்லுயிர்களின் கடைசிப் புகலிடமாக இருப்பதாக  ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Grasslands of Western Ghats

இந்த மலைத்தொடர்களில் உள்ள நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தை உலகப் பாரம்பர்யமிக்க இடங்களுள் ஒன்றாகக் 1986-ம் ஆண்டு, யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.

குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு கேரளா, கோவா, கர்நாடகம் எனப் பரந்துவிரிந்த காணப்படும் சிறப்பு வாய்ந்த இந்த மலைத்தொடரில் வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மனித செயல்களால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மலை சிதைவதாக ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். மேலும், இந்த மலைத்தொடரை அழிவுப் பாதையில் இருந்து மீட்டுப் பாதுகாக்க ஆய்வாளர்களும், காட்டுயிர் ஆர்வலர்களும், தன்னார்வ அமைப்புகளும் இடைவிடாது போராடி வருகின்றனர் .

Nilgiri tahr

இந்தநிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து, தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தார் பேராசிரியர் மாதவ் காட்கில். இவரின் பரிந்துரையை மாநிலங்கள் பின்பற்ற வலியுறுத்தி நீலகிரியைச்  சேர்ந்த பள்ளி மாணவி காவ்யா உள்ளிட்ட 26 பேர் கொண்ட குழு மூலம் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மாணவி காவ்யாவிடம் பேசினோம். "நான் ப்ளஸ் ஒன் போகப் போறேன். நீலகிரி குன்னூர்ல வாழ்ந்துவரும் எனக்கு சின்ன வயசு முதலே காடுகள் மீதும் காட்டுயிர் மீதும் ரொம்ப ஆர்வம். சுற்றுச்சூழல் தொடர்பா நடக்குற எல்லா மீட்டிங்கிலும் கலந்துக்குறேன். அதுல விவாதிக்கிற விஷயங்கள் எல்லாமே ரொம்ப கவலையா இருக்கு. அழகான ஒரு மலையை இவ்வளவு சீக்கிரமா அழிக்கிறோமே என நெனச்சாலே கஷ்டமா இருக்கு.

நீலகிரினு சொன்னாலே எல்லோரும் டூரிஸ்ட் ஸ்பாட்னு மட்டும்னு நினைக்கிறாங்க. அதுக்காகச் சுற்றுலா வேணாடம்னு சொல்லல, சுற்றுச்சூழலை பாதிக்கிற சுற்றுலாவா இல்லாம இருக்கணும். மேற்குத் தொடர்ச்சி மலையில் எந்தப் புதிய திட்டமும் கொண்டுவராமல் இருக்கணும். சுற்றுலா, காட்டேஜ், தொழிற்சாலை என எதனாலும் இனி இந்த மலையைச் சிதைக்க அனுமதிக்கக் கூடாது.

காவ்யா

ஆனால், முறையான வழிகாட்டுதலை யாரும் பின்பற்றலை. இந்த மலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, மத்திய அரசு பேராசிரியர் மாதவ் காட்கில் தலைமையில் ஒரு குழுவை 2010-ல் அமைத்தது. இந்தக் குழு தன்னுடைய அறிக்கையை 2011 ஆகஸ்ட் மாசம் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் உள்ள வழிமுறையை அந்தந்த மாநில அரசுகள் பின்பற்றனும். ஆனா யாரும் பின்பற்றலை.

இதை வலியுறுத்தி தமிழகத்தின் பல மாவட்டம், மாநிலத்தைச் சேர்ந்த 27 பேர் கொண்ட குழு ஓசை அமைப்போட முயற்சியால்  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இது மூலமா நல்ல முடிவை எதிர்பார்த்திருக்கோம்" என்றார்.

Also Read: நீலகிரி: 40 ஆண்டுகளுக்குப் பிறகான அரிய காட்சி! - இருவாச்சிகளால் நெகிழும் ஆய்வாளர்கள்

மகளின் சூழலியல் பங்களிப்பு குறித்து பேசிய காவ்யாவின் தந்தை மோகன், "எனக்கும் சிறு வயது முதல் இயற்கை மீது நாட்டம் அதிகம். நண்பர்களுடன் சேர்ந்து மரம் நடவு செய்து வருகிறோம். இந்த மலையைப் பாதுகாக்க நீதிமன்றத்தை நாடிய குழுவில் என் மகளும் இருப்பது மனநிறைவை அளிக்கிறது.

காவ்யா

மேற்கு தொடர்ச்சி மலையை மீட்கத் தொடர்ந்து போராடுவோம்" என்றார் உறுதியுடன்.



source https://www.vikatan.com/government-and-politics/environment/coonoor-student-kaviya-speaks-about-western-ghats

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக