Ad

வியாழன், 16 ஜூலை, 2020

கோவை: விஷவாயு ஆய்வு; சென்சார் தொழில்நுட்பம்! - கழிவை அகற்ற மேலும் 5 பாண்டிகூட் ரோபோக்கள்

தொழில்நுட்பம் முன்னேறிக்கொண்டிருந்தாலும், நம் நாட்டில் மலக்குழி மரணங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. மனிதக் கழிவுகளை, மனிதர்களே அகற்றுவதற்கு 2013-ம் ஆண்டு தடை சட்டம் கொண்டு வரப்பட்டும், மரணங்களைத் தடுக்க முடியவில்லை. முக்கியமாக, தமிழகத்தில் 2013-ம் ஆண்டு முதல் 2019 வரை 174 பேர் இப்படி உயிரிழந்துள்ளனர். கோவையில், மட்டும் 19 பேர் உயிரிழந்திக்கிறார்கள்.

ரோபோ

Also Read: பாண்டிகூட் 2.0 - மலக்குழிகளைச் சுத்தம் செய்யும் ரோபோ

இதைத் தடுக்கும்விதமாக, திருவனந்தபுரம், கும்பகோணம் போன்ற பகுதிகளில் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் கடந்த ஆண்டு, பாண்டிகூட் 2.0 என்ற நவீன ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கோவை மாநகராட்சிக்கு மேலும் 5 பாண்டிகூட் 2.0 ரோபோக்கள் வழங்கப்பட்டுள்ளன. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், அதன் சி.எஸ்.ஆர் நிதியில் இருந்து ஒதுக்கி, இந்த ரோபோக்கள் வாங்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.2.12 கோடி. இதில், கோவை மாநகராட்சி ரூ.20 லட்சம் (10 சதவிகிதம்) பங்களிப்பு செய்துள்ளது. கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கும் தலா ஒரு ரோபோ வழங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் தமிழகத்தில் உள்ள 34 நகரங்களில் இந்த 2.0 நவீன ரோபோக்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

ரோபோ

இதன் மூலம், மனிதக் கழிவுகளை, மனிதர்களே அகற்றும் நிலை ஒழிக்கப்பட்டு, உயிர்ப்பலி முற்றிலும் தடுக்கப்பட்டு, மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன் உதாரணமாக இருக்கும் என்றும் வேலுமணி கூறியுள்ளார்.

இந்த ரோபோவை உருவாக்கிய Gen Robotics நிறுவனத்தினர் கூறுகையில், ``சமீபத்திய ஆய்வின்படி, தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்கள் சுத்தம் செய்யும் கழிவுகள் மூலம் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. தூய்மைப் பணியாளர்கள் மிகவும் எளிய முறையில் இந்த ரோபோவை கையாளும் வகையில்தான், அதை நாங்கள் உருவாக்கியுள்ளோம். மனிதர்களைவிட இன்னும் அதிக திறமையுடன் கழிவுகளை அகற்றும் ஆற்றலைக் கொண்டது.

ரோபோ

தற்போது, உத்தரப்பிரதேசம், குஜராத், அஸ்ஸாம், ஹரியானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்களில் இந்த ரோபோவை அறிமுகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. கழிவுகளை அகற்றுவதுடன், பாதாள சாக்கடையில் ஆய்வு செய்யும் திறனையும் கொண்டுள்ளது. இதன் சென்ஸார் தொழில்நுட்பம், விஷவாயு இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டுபிடித்துவிடும்” என்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/5-robots-introduce-to-end-manual-scavengers-in-coimbatore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக