Ad

வியாழன், 16 ஜூலை, 2020

டெல்லியில் 11... சென்னையில் 21... நீதிமன்றத்தில் ஊசலாடும் தி.மு.க - அ.தி.மு.க அரசியல்!

அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் 11 பேரின் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்தில் வேகப்படுத்தி வருகிறது தி.மு.க. இந்த வியூகத்துக்கு அ.தி.மு.க தரப்பிலும் 21 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை வைத்து பதிலடிக்குத் தயாராகிவிட்டனர். அதனால், நீதிமன்றத்தை வைத்து தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

தமிழக சட்டமன்றம்

அ.தி.மு.க-வில் பன்னீர்செல்வம் தனி அணியாகச் செயல்பட்டபோது அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட 11 பேரும் எடப்பாடி அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். இது குறித்து அப்போதே அ.தி.மு.க-வின் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் புகார் அளித்தனர். ஆனால், அந்தப் புகார் மீது உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதன்பிறகு, எடப்பாடி - பன்னீர் அணிகள் இணைந்த பிறகு, தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரான வெற்றிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில், ``அரசுக்கு எதிராக வாக்களித்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள்மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை, அவர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்'' என்று மனுத்தாக்கல் செய்தார். அதே போல் தி.மு.க கொறடா சக்கரபாணியும், ``சபாநாயகர், 11 பேரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" என்று மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை அப்போதைய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து தி.மு.க உச்ச நீதிமன்றம் சென்றது. மூன்றாண்டுகளாகக் கிடப்பில் கிடந்த இந்த வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம், ``மூன்றுமாத காலத்துக்குள் சபாநாயகர் இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று சொல்லி வழக்கை முடித்து வைத்தது. அதற்குப் பிறகும், சபாநாயகர் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடந்த மாதம் தி.மு.க இந்த விவகாரத்தில் புதிய முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. அப்போது அரசுத் தரப்பில் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் புகார் கொடுத்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதாகக் கூறப்பட்டது. இதனிடையே கடந்த வாரம் இந்த வழக்கு மறு விசாரணைக்கு வந்தது. அப்போது, தி.மு.க தரப்பில் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் சபாநாயகர் உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்களும் நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டது. தி.மு,க தரப்பில் ``இந்த ஆட்சி முடிய இன்னும் சில மாதங்களே இருப்பதால் விரைந்து விசாரணையை முடிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டதால், அடுத்த மாதம் மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றம்

இதுதான் இப்போது அரசுக்குச் சிக்கலாகியுள்ளது. குறிப்பாக, சபாநாயகருக்கு கொடுக்கப்பட்ட நோட்டீஸுக்கு பதில் அளிக்க வேண்டிய நெருக்கடி இப்போது எழுந்துள்ளது. இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஒருபுறம் ஆலோசனை நடந்துவருகிறது. சபாநாயகரின் அதிகார விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று அரசுத் தரப்பில் பதில் அளித்தால், மணிப்பூர் வழக்கில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மேற்கோள் காட்ட தி.மு.க தயாராக இருக்கிறது. அதே நேரம் தகுதி நீக்கம் செய்யத் தேவையில்லை என்றால் அரசுக்கு எதிராக வாக்களித்தவர்களைத் தகுதிநீக்கம் செய்வதற்கான சட்டவிதிகளை அட்டவணை 10-பத்தில் சொல்லியுள்ளார்கள். அதை தி.மு.க தரப்பு மேற்கோள்காட்டும். அரசுக்கு இப்போது இந்தச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதைத் தடுக்கவே தி.மு.க-வுக்கு செக் வைக்க அரசு முடிவு செய்தது. 2017-ம் ஆண்டு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை அவைக்குள் கொண்டு வந்திருந்தனர். அதை, அவை உரிமை மீறல் பிரச்னையாக அ.தி.மு,க அரசு கொண்டு சென்றது. உரிமை மீறல் குழு, அதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டு 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்நேரத்தில் தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்யபட்டது. அந்த மனுவில் ``உரிமை மீறல் குழு நோட்டீஸ் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” என்று கோரப்பட்டிருந்தது. அதை உயர் நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கத் தடை விதித்தது. இதற்கு எதிராக சபாநாயகர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்றம் விதித்த தடையாணையை நீக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கிடப்பில் கிடக்கிறது. இந்த மனுவையே இப்போது தி.மு.க-வுக்கு எதிராக அஸ்திரமாகப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது அ.தி.மு.க.

`குட்கா ஆதாரத்தை காட்டும் ஸ்டாலின்

சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கிய பிறகு இதுகுறித்து முதல்வருடன் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆலோசனை நடத்தினார். உச்ச நீதிமன்றத்தில், தி.மு.க நமக்கு நெருக்கடி கொடுப்பதுபோல உயர் நீதிமன்றத்தில் நாமும் நெருக்கடி கொடுக்கலாம் என்று ஐடியா கொடுக்க முதல்வரும் ஒ.கே சொல்லியுள்ளார். இதன்பிறகு கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு மனு ஒன்றைத் தமிழக அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ``தற்போது பேரவை ஆயுட்காலம் முடிவடையும் நேரம் உள்ளதால் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள இந்த உரிமை மீறல் வழக்கை விரைவில் விசாரணை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். அந்த மனுவை நீதிமன்றமும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க தரப்பு வைத்த வாதத்தையே உயர் நீதிமன்றத்தில் தி.மு.க-வுக்கு எதிராக அ.தி.மு.க அரசு வைத்துள்ளது. இதைத் தி.மு.க தரப்பும் உணர்ந்துகொண்டது. இந்த மனு குறித்த விவாதத்தில் தி.மு.க தரப்பு ``அ.தி.மு.க-வின் 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியதால் இந்த வழக்கை அரசு கையில் எடுத்துள்ளதாக” நீதிமன்றத்திலே தெரிவித்தது. ஆனாலும், நீதிபதி ``தி.மு.க-வின் பதில்களை முறையாக வழங்குங்கள்'' என்று சொல்லியிருக்கிறார். மேலும் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி-ஸ்டாலின்

இந்த வழக்கில் உரிமை மீறல் குழுவின் நடவடிக்கைக்குத் தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு வரும் பட்சத்தில் உடனடியாக ஸ்டாலின் உட்பட 21 தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியைப் பறித்து நெருக்கடி கொடுக்க அ.தி.மு.க தயாராக இருக்கிறது. 11 சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிறைவடையும் முன்பே இந்த வழக்கு விசாரணையை வேகப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு நினைக்கிறது. இதனால் உச்ச நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிராக தி.மு.க நெருக்கடி காட்டாது என்று கணக்குப்போடுகிறது.

Also Read: பா.ஜ.க-வின் அதிகாரப் பசி… காங்கிரஸ் சீனியர்களின் பதவி ருசி! #RajasthanPolitics

இதுகுறித்து தி.மு.க சட்டத்துறைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோவிடம் கேட்டபோது, ``சட்டரீதியாகவே அரசுக்கு எதிராகச் செயல்பட்ட 11 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுவருகிறோம். ஆனால், இவர்களை அதிலிருந்து தப்பிக்க இந்த 21 பேரின் வழக்கை வைத்து எங்களுக்குப் பூச்சாண்டி காட்டப் பார்க்கிறார்கள். இந்த வழக்கின் தன்மை வேறு, அந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கின் நிலை வேறு. இதைப் புரிந்துகொள்ளாமல் அரசு தரப்பு காய் நகர்த்துகிறது. இதற்கான பதிலை 10 நாள்களில் நாங்கள் நீதிமன்றத்தில் அளிப்போம்” என்றார்.

தமிழக சட்டசபை

சட்டமன்ற உறுப்பினர்கள் 11 பேரின் பதவிபோனாலும், இன்றைய நிலையில் அ.தி.மு.க அரசு தப்பிவிடும் என்கிறார்கள் அ.தி.மு.க-வினர். அதேநேரம் ``21 சட்டமன்ற உறுப்பினர்கள்மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்தாலும் அடுத்த ஆறுமாதம் கழித்து ஆட்சியை நாங்கள் பிடித்துவிடுவோம்” என்கிறார்கள் தி.மு.க-வினர். 11-க்கும் 21-க்கும் இடையே ஊசல் ஆடுகிறது தமிழக அரசியல் களம். அடுத்த ஆண்டு மே மாதம் வரை இந்த ஆட்டத்துக்கு ஆயுட்காலம் உள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/aiadmk-pushes-21-mlas-privilege-motion-case-to-counter-dmk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக