"ஐயா, சொன்னா கேளுங்க... நீங்க உடனே தனிமைப்படுத்திக்கோங்க..." - முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உடல்நிலையைப் பராமரிக்கும் மருத்துவர் குழுவினர், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உட்பட முதல்வருக்கு நெருக்கமானவர்கள் கடந்த சில நாள்களாக முதல்வருக்குச் சொல்லிவரும் அறிவுரை இது. அவர்களின் கவலைக்குக் காரணம் இல்லாமல் இல்லை. சமீப நாள்களில் முதல்வர் கொரோனா தொற்றுள்ளவர்களுடன் நடத்திய சந்திப்புகளே இவர்களின் எச்சரிக்கைக்குக் காரணம்!
"முதல்வரைச் சந்திக்க வரும் அமைச்சர்கள், அதிகாரிகள், பார்வையாளர்கள் அனைவருக்கும் கொரோனா சார்ந்த சில பரிசோதனைகளைச் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள்" என்ற அலுவலக வட்டாரத்தில் முக்கிய நபர்கள், முதல்வரின் ரியாக்ஷன் பற்றியும் விவரித்தார்கள்.
"ஆனால், முதல்வர் இதைப் பெரிய அளவில் பொருட்படுத்துவதில்லை. அதிகாரிகள் அவரிடம், 'ஐயா, நீங்க உங்க வீட்டைவிட்டு வெளியே வராமலேயே ரெகுலர் வேலைகளை கவனிங்க. தமிழக மக்களுக்கு நீங்க செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கு' என்று அறிவுறுத்தினார்கள்.
அதற்கு அவரோ, 'எனக்கு சுகர், பி.பி எதுவும் இல்லை. அதனால கவலைப்படத் தேவையில்லை. பொது வாழ்க்கைக்கு வந்தாச்சு. யாரையும் பார்க்காம இருக்க முடியுமா? முடிஞ்சவரைக்கும் பரிசோதனை செஞ்ச பிறகுதான் மத்தவங்களை உள்ளே வர அனுமதிக்கிறோம். அதையும் தாண்டி அவங்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் நாம என்ன செய்ய முடியும்? அதனாலதான் ஏற்கெனவே, 'இனிமே கடவுள்தான் பார்த்துக்கணும்'னு சொன்னேன். ஆனா, எதிர்க்கட்சிக்காரங்க அதையும் அரசியலாக்கிட்டாங்க..." என்று சிரித்தபடியே சொல்லி அதிகாரிகளைச் சமாதானப்படுத்திவிட்டார்.
சமீபத்தில் முதல்வர் திருச்சிக்கு 'விசிட்' சென்றிருந்தார். அப்போது விவசாயச் சங்க பிரதிநிதியும், த.மா.க பிரமுகருமான புலியூர் நாகராஜன் முதல்வரை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். அதற்கு அடுத்த சில நாள்களில் நாகராஜன் கொரோனா காரணமாக இறந்துபோனார்.
இதற்கிடையே, 'முதல்வரைச் சந்திக்க நாகராஜன் உள்ளிட்ட விவசாயிகள் சென்றபோது அவர்களுக்குச் சரிவர பரிசோதனை செய்யப்படவில்லை' என்ற சர்ச்சையும் எழுந்தது. இந்தத் தகவலும் கோட்டை வட்டாரத்தைப் பதற்றமடையச் செய்தது.
இவை எல்லாவற்றையும்விட அதிர்ச்சியடையவைக்கும் விஷயம் இதுதான். ஜூலை 8-ம் தேதி அன்று மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ராஜ்குமார் சிங், தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்துப் பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்குச் செல்வதற்கு முன்பாக, 'அமைச்சர் தங்கமணி வந்திருக்கிறாரா?' என்று அதிகாரிகளிடம் கேட்டார் முதல்வர். அதிகாரிகளோ தயங்கி நிற்க... 'என்னங்க... என்ன பிரச்னை?' என்று முதல்வரின் குரல் உயர்ந்தது. அதற்கு அவர்கள் மெதுவாக, 'ஐயா... அவருக்கு கொரோனா பாசிட்டிவ். இன்னைக்கு காலை 9 மணிக்குத்தான் அவரைத் தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்காங்க' என்று சொல்ல... அதிர்ச்சியின் உச்சத்துக்கே போனார் முதல்வர்.
ஏனெனில், அதற்கு முந்தைய நாளான ஜூலை 7-ம் தேதிதான் தலைமைச் செயலகத்தில் முதல்வரை நேரில் சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காகத் தனது துறை சார்பில் 5 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கியிருந்தார் தங்கமணி. தவிர, முதல்வருடன் அவர் சுமார் 20 நிமிடங்கள்வரை கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.
முதல்வரின் மருத்துவக்குழுவுடன் தொடர்புடைய சிலர் மேலும் சில முக்கியத் தகவல்களை நம்மிடம் பகிர்ந்தனர்... - அந்தத் தகவல்களுடன் முழுமையான ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியை வாசிக்க க்ளிக் செய்க... > கொரோனா வலையில் எடப்பாடி? - டாக்டர்கள் அட்வைஸ்... பதறும் கோட்டை.. https://bit.ly/3gOO4gd
* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.
Also Read: கொரோனா வலையில் எடப்பாடி?
சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV
source https://www.vikatan.com/health/news/edappadi-palanisamys-reaction-to-officials-who-are-warning-about-corona-infection
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக