Ad

சனி, 11 ஜூலை, 2020

கொரோனா:`முதன்முறையாக முகக்கவசம் அணிந்த ட்ரம்ப்!’ - அரசியலும் விமர்சனங்களும்...

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். சுமார் 1.34 லட்சம் மக்கள் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தளர்த்தப்பட்டு வரும் ஊரடங்கு, முகக்கவசங்கள் அணியாமல் இருப்பது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் இருப்பது போன்றவை பாதிப்புகளை இன்னும் அதிகமாக்கும் எனச் சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரித்து வந்தனர். ஆனால், அதிபர் ட்ரம்ப் இதுதொடர்பான கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ட்ரம்ப்பும் பொதுவெளிக்கு வரும்போதும் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருந்து வந்தார். இதனால், கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளானார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ட்ரம்ப்பின் மீதான விமர்சனங்களுக்கு வெள்ளைமாளிகைச் செய்தித் தொடர்பாளர் கெய்லீ பதிலளிக்கையில், ``முகக்கவசம் அணிவது என்பது அதிபர் ட்ரம்ப்பின் தனிப்பட்ட விருப்பம். அதேபோலதான், முகக்கவசம் அணிதல் என்பது மக்களின் தனிப்பட்ட விருப்பம். தங்களின் பாதுகாப்பு தேவைகளைக் கருதி மக்கள் முகக்கவசங்களை அணிந்து கொள்ளலாம். மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை” என்று கூறினார். அந்நாட்டின் சுகாதார நிபுணர்கள், சில ஆட்சியாளர்கள் எனப் பலரும் ட்ரம்ப் உள்ளிட்ட வெள்ளைமாளிகை அதிகாரிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எனினும், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தல் மற்றும் தேர்தல் பேரணிகள் உட்பட பல பொது நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளும்போதுகூட ட்ரம்ப் முகக்கவசங்களை அணியாமல் இருந்தார்.

முகக்கவசம் தன்னை பலவீனமாகக் காட்டுவதாக ட்ரம்ப் அஞ்சியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முகக்கவசம் தொடர்பான கலவையான கருத்துகளையே ட்ரம்ப் அவ்வப்போது தெரிவித்தும் வந்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் எதிர் போட்டியாளாரனா ஜோ பிடனை முகக்கவசம் அணிந்தது தொடர்பாகக் கேலி செய்யும் விதமாகவும் ட்ரம்ப் பேசினார். இதையடுத்து, முகக்கவசம் அரசியல் ரீதியிலான பிரச்னையாக மாறியது. ட்ரம்பின் ஆதரவாளர்கள் முகக்கவசம் அணிவதை முற்றிலுமாக எதிர்த்து வந்தனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்பதால் அந்நாட்டின் முற்போக்குவாதிகள் முகக்கவசம் அணிவதை ஆதரித்து வருகின்றனர். அமெரிக்காவின் நோய்த்தடுப்பு மையங்களும் தொடர்ந்து முகக்கவசம் அணிய வற்புறுத்தி வருகிறது.

Also Read: `கொரோனா பற்றி சீனாவுக்கு முன்பே தெரியும்!’ - அமெரிக்கா தப்பிச் சென்ற பெண் விஞ்ஞானி பகீர்

இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய நாள் முதன்முதலாக பொதுவெளியில் முகக்கவசம் அணிந்து வந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வாஷிங்டனுக்கு வெளியே உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் காயமடைந்த ராணுவ வீரர்களைக் காண அதிபர் ட்ரம்ப் சென்றிருந்தார். அப்போது அதிபர் முத்திரை உள்ள முகக்கவசம் ஒன்றை அணிந்து சென்றுள்ளார். ``நான் ஒருபோதும் முகக்கவசம் அணிவதற்கு எதிரானவன் அல்ல. ஆனால், அதை அணிவதற்கு தகுந்த நேரமும் இடமும் இருப்பதாகக் கருதுகிறேன்” என ட்ரம்ப் குறிப்பிட்டார். வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் நவம்பர் தேர்தலில் ஜோ பிடனைவிட ட்ரம்ப்புக்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதாலும் அவரது உதவியாளர்கள் மிகவும் வேதனையுடன் அதிபர் ட்ரம்ப்பிடம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் முகக்கவசத்துடன் உங்களைப் புகைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ராணுவ மையத்துக்கு கடந்த சனிக்கிழமை ட்ரம்ப் வரும்போதுகூட மருத்துவமனை என்பதால் மட்டுமே முகக்கவசம் அணிவதாக ட்ரம்ப் கூறியுள்ளார். இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ``நீங்கள் மருத்துவமனைக்குச் செல்லும்போது நிச்சயமாக முகக்கவசம் அணிய வேண்டும். இங்கு நிறைய வீரர்கள் மற்றும் மக்களுடன் உரையாட வேண்டிய தேவை உள்ளதால் முகக்கவசம் அணிவது அவசியம் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பின் முகக்கவச விமர்சனங்கள் தொடர்பாக எதிர்கட்சிகள், ``மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை புறக்கணித்து முகக்கவசம் அணிவதை ட்ரம்ப் அரசியலாக்கி வருகிறார். பொறுப்புகளை ஏற்று மக்களை வழிநடத்துவதற்குப் பதிலாக பிளவுகளை ஏற்படுத்துகிறார்” என்று கூறியுள்ளனர். முகக்கவசம் அணிவது தொடர்பான அரசியல் ஒருபக்கம் நடந்து வந்தாலும், ட்ரம்ப் முகக்கவசம் அணிந்தது பலரையும் ஆச்சர்யத்துக்கு ஆளாக்கியுள்ளது என்றே கூறலாம்.

Also Read: Trump:`குங் ஃப்ளூ.. குறைக்கப்படும் பரிசோதனைகள்?!’ - ட்ரம்ப் பிரசாரக் கூட்ட சர்ச்சை



source https://www.vikatan.com/government-and-politics/international/trump-wears-mask-for-first-time-during-pandemic

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக