Ad

ஞாயிறு, 12 ஜூலை, 2020

சாத்தான்குளம்: `ஒவ்வொரு மரணமும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்!’ - ஐ.நா கருத்து

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி தந்தை ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாக இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று காவலர்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்காமல் சிறையில் அடைத்ததால் அடுத்தடுத்து உயிரிழந்தனர். சந்தேகத்துக்கு உரிய வகையில் இருவரும் மரணம் அடைந்ததால் இந்தச் சம்பவம் அதிக பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இந்தச் சம்பவத்துக்கு எதிராகக் குரல் கொடுத்ததால் இந்த பிரச்னை தீவிரமடைந்தது.

சாத்தான்குளம்

இந்தச் சம்பவத்தை அறிந்த மதுரை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்தது. பின்னர், தமிழக அரசானது மதுரை உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இவ்வழக்கை, சி.பி.ஐ விசாரணைக்காக எடுத்துக்கொள்ளும் வரையில், விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி உத்தரவிட்டது நீதிமன்றம். சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பான விசாரணையைத் தொடங்கிய நாளின் இரவே, எஸ்.ஐ ரகு கணேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பின்னர், தலைமறைவாக இருந்த தலைமைக் காவலர் முத்துராஜையும் கைது செய்து அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சுமார் 10 காவலர்களை இதுவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Also Read: சாத்தான்குளம்: முதல் தகவல் அறிக்கை; முக்கிய தடயங்கள்! - வேகமெடுத்த சிபிஐ விசாரணை

இதனையடுத்து தற்போது சி.பி.ஐ அதிகாரிகள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர், மருத்துவர்கள் உட்பட பலரிடமும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். தீவிரமாக இந்த விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், அறிக்கை கேட்டுள்ளார். மத்திய அரசும் இந்த விவகாரத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்தியாவைக் கடந்து சர்வதேச அளவிலும் இந்தச் சம்பவம் கவனத்தைப் பெற்றது. அமெரிக்காவில் காவலர்களால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துடன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் மரணம் இணைத்து பேசப்பட்டது. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்டீபன் துஜாரிக்

ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக்கிடம் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டீபன், ``ஒவ்வொரு மரணம் தொடர்பான வழக்குகளும் கொள்கைகளின் அடிப்படையில் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். உலகளவில் இந்த சம்பவம் கவனிக்கப்பட்ட வருவதால் முறையான தீர்ப்புகள் கிடைக்கும் எனப் பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: சாத்தான்குளம்: `7 மணி நேரம்; உணவுக்குக்கூட வெளியே செல்லவில்லை' -சிபிஐ விசாரணையின் முதல் நாள்



source https://www.vikatan.com/news/tamilnadu/united-nation-speaks-about-sathankulam-police-brutality

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக