மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகில் இருக்கிறது ராமு தாத்தாவின் உணவகம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அரசு ராஜாஜி மருத்துவமனை, அரவிந்த் கண் மருத்துவமனை என்று ஏழை, எளிய மக்கள் அதிகம் குழுமும் அப்பகுதியில் உணவகம் நடத்தியதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் அவருக்கு உண்டு. 10 ரூபாய்க்கு ஃபுல் மீல்ஸ் தருவார். விலை குறைவு என்பதால், ஏனோதானோவென்றெல்லாம் இருக்காது சாப்பாடு. அவ்வளவு சுவையாக இருக்கும்.
2 ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்து குருவி சேர்ப்பது போல கொஞ்சம், கொஞ்சமாய் பணத்தைச் சேகரித்து, குருவிக்காரன் சாலையில் தள்ளுவண்டி கடை ஆரம்பித்தார் ராமு தாத்தா. மனைவி பூரணத்தாள் கொடுத்த ஊக்கத்தாலும் உதவியாலும் வியாபரம் பெருகியது. பிறகு, அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகே உணவகம் ஆரம்பித்தார்.
தொடக்கத்தில் 1.25 ரூபாய்தான் சாப்பாடு. 3 ரூபாய், 4 ரூபாய் என்று சிறிது சிறிதாக உயர்ந்து 10 ரூபாயில் நிலைபெற்றுவிட்டது. மூன்று கூட்டுகளுடன், ஃபுல் மீல்ஸ் வழங்கினார். மனைவி பூரணத்தாள் இறந்தது ராமு தாத்தாவை பெரிதும் பாதித்தது. ஆயினும், பூரணத்தாள் இறக்கும்முன் `உங்க காலம் வரைக்கும் கடைய நல்லா பார்த்துக்கோங்க’ என்று வாக்கு வாங்கியதாக ராமு தாத்தா கூறியிருக்கிறார்
மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி கொண்டுவந்தபோது, பல்வேறு பொருள்களும் விலை அதிகரித்தது. ஆனாலும், அதே விலையில், அதே சுவையில் உணவு வழங்கினார். ராமு தாத்தா, சில நாள்களாக உடல் நலம் சரியில்லாமல் ஓய்வில் இருந்தார். திடீரென காலமாகிவிட்டார். அவரின் இறப்பு மதுரை மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
``காசு இல்லைன்னு சொன்னாலும் உக்கார வச்சு சோறு போட்டு அனுப்புவாரு. சாப்பிடும்போது எங்க அம்மா எப்படி உபசரிக்குமோ அப்படி பாத்துப் பாத்து பரிமாறுவாரு.
அய்யா இறந்துட்டார்ன்னு கேள்விப்பட்டவுடனே ரத்த சொந்தம் இறந்ததுமாதிரி இருக்கு" என்று தழுதழுக்கிறார் ஆட்டோ ஓட்டுநர் பிச்சை.
ராமு தாத்தா நிறைய பணம் சம்பாதிக்காமல் போயிருக்கலாம். ஆனால், பல நூறு உறவுகளைச் சம்பாதித்திருக்கிறார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/madurai-ramu-thatha-died-of-illness
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக