Ad

சனி, 11 ஜூலை, 2020

`சீனாவைத் தவிர்க்கும் ஆப்பிள்!’ - இந்தியாவில் முதலீடு செய்யும் ஃபாக்ஸ்கான்

இந்தியாவில் ஆப்பிள் ஐபேன்களை அஸம்பிள் செய்யும் தைவான் மின்னணு நிறுவனமான ஃபாக்ஸ்கான் (Foxconn) , 1 பில்லியன் டாலர் அளவிற்கு இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளது. இந்த நிறுவனம்தான் ஜியோமி போன்களையும் தயாரிக்கிறது. இதனால் இதற்கான முதலீட்டையும் அதிகரிக்க போவதாக அறிவித்திருந்தது. ஆனால், இதுவரை முதலீட்டின் அளவானது வெளியிடப்படவில்லை. அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நிலைமை சீராக இல்லாத காரணத்தால் ஆப்பிள் நிறுவனம் தங்களது பொருட்களைத் தயாரிக்க சீனாவை சார்ந்திருப்பதைத் தவிர்க்க நினைக்கிறது. இதன் காரணமாகவே தற்போது, தைவான் நிறுவனம் அதிக அளவில் முதலீடு செய்ய உள்ளது.

அமெரிக்கா - சீனா

தைவான் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள ஶ்ரீபெரும்புதூரில் மூன்று ஆண்டு காலத்திற்கு முதலீடு செய்ய உள்ளது. இங்கு தான் ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர், ஃபாக்ஸ்கானால் அஸம்பிள் செய்யப்படுகிறது .இதை தவிர இந்நிறுவனம் பிற ஐபோன்களையும் இந்தியாவிலேயே தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு இரண்டு தொழிற்சாலைகள் உள்ளன.இங்கு தான் முறையே ஆப்பிள் ஐபோன்களும், ஜியோமியும் தயாரிக்கப்படுகின்றன.

Also Read: iOS டு MacOS... புதிய ஆப்பிள் ஓஎஸ் வெர்ஷன்களில் என்ன ஸ்பெஷல்?! #WWDC2020

இந்த முதலீடு குறித்து ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் லியு யெங்க் வே கூறுகையில்,``இந்தியா எப்போதும் தொழில் தொடங்குவதற்கு பிரகாசமான இடமாக இருந்துள்ளது. தற்போது கொரோனாவால்தான் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளோம். இன்னும் சில மாதங்களில் எங்கள் இணையதளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். மேலும் சில முதலீடுகளையும் செய்ய உள்ளோம்" என்றார்.

ஐபோன்

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் மின்னணு தயாரிப்பு திட்டத்திற்காக ₹50,000 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது போன்களை தயாரிக்க இந்த ஏற்பாடானது செய்யப்பட்டது. இந்தியாவில் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு தயாரான சூழல் உள்ளது என்பதை உலகிற்கு உணர்த்தவே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதாக அரசால் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் இந்த முதலீடு திட்டமானது அதன் அடிப்படையிலேயே ஃபாக்ஸ்கான் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கொரோனா காலத்திற்கு பிறகு இந்தியாவில் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வது அதிகரிக்கும் என்றே துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.சீனாவிலிருந்து தயாரித்த பொருட்களை ,இனி வரும் காலங்களில் வேறு இடத்திலிருந்து தயாரிக்கவே நிறுவனங்கள் விரும்புவதால் இது நிச்சயம் அதிகரிக்க கூடும்.இதனால் கொரோனாவிற்கு பிறகு இந்தியா மின்னணு உற்பத்தி துறையின் மையமாக கூட உருவெடுக்கலாம்.



source https://www.vikatan.com/business/tech-news/foxconn-to-invest-1-billion-in-india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக