சமீபத்தில், 241 விஞ்ஞானிகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அதில், இந்தத் தொற்று நோய் காற்றில் பரவும் என்பதற்கான ஆதாரம் அவர்களிடம் இருப்பதாகக் கூறியிருந்தனர். உலக சுகாதார நிறுவனம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், அவர்கள் அனுப்பிய கடிதத்தை ஏற்றுக்கொண்டதாகவும், அதுகுறித்த அடிப்படை ஆதாரங்களை வைத்து ஆய்வு செய்துகொண்டிருப்பதாகவும் அந்த அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
``இதுகுறித்த ஆதாரங்கள் கள ஆய்வில் கிடைத்துக் கொண்டிருப்பதாகக் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அந்த ஆதாரங்களை திறந்த மனப்பான்மையோடு நாங்கள் ஆய்வு செய்கின்றோம். அவற்றை முழுமையாக ஆய்வு செய்த பிறகே நாங்கள் அதை உறுதிப்படுத்த முடியும்" என்று கூறினார், உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய் துறையைச் சேர்ந்த பெனெடெட்டா அல்லெக்ரான்சி. இந்த விஷயத்தில் இதற்கு முன்னர், இதுபோன்று முன்வைக்கப்பட்ட ஆதாரங்களை வெறுமனே ஒதுக்கித் தள்ளிய உலக சுகாதார நிறுவனம், ஆதாரங்களைப் பரிசீலிக்கிறோம் என்று சொல்வது இதுவே முதல்முறை. கூட்டம் நிறைந்த பகுதிகளில் இது காற்றில் பரவும் என்பதை அல்லெக்ரான்சி மறுக்கவில்லை. இந்தத் தொற்றுநோய், கூட்டமாக உள்ள, நெருக்கடி நிறைந்த, காற்றோட்டம் இல்லாத பகுதிகளில் காற்றின் மூலமாக எளிதில் பரவும் என்பதை அவர்கள் மறுக்கவில்லை. ஆனால் அதேநேரம், காற்று வழியாகவும் பரவும் என்ற கூற்றை, அதுகுறித்துக் கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து பரிசீலித்த பிறகே சொல்ல முடியும் என்று அதிகாரிகள் கூறினர்.
அப்போது, உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள், காற்றில், பல்வேறு அளவுகளில் நிறைந்திருக்கும் திரவத் துளிகளை ஆய்வு செய்துகொண்டிருந்தார்கள். காற்று வழியாக, வைரஸ் கிருமிகள் காற்றில் எப்படிப் பரவக்கூடும் என்பதே அந்த ஆய்வின் அடிப்படை நோக்கம். அந்த ஆய்விலிருந்து கிடைத்த முடிவுகளை அடிப்படையாக வைத்து ஜூலை 9-ம் தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பின் உடல்நலத்திற்கான பகுதி வெளியிட்ட ஆய்விதழில், மிகக் குறைந்த தூரத்திற்குள் இந்த வைரஸ் தொற்று காற்றில் பரவக்கூடும் என்பதை உறுதிப்படுத்தினர்.
ஆராய்ச்சியாளர்களுடைய கடிதத்திற்கு முன்பு, அவர்கள் முன்வைத்த கூற்றுக்கு முன்பு வரை, இந்தத் தொற்று காற்றில் பரவாது என்றே சுகாதார நிறுவனம் சொல்லி வந்தது. மார்ச் 29-ம் தேதி வெளியிட்ட தகவல்களில், கொரோனா வைரஸ் காற்றில் பரவாது, காற்றில் ஒரு மீட்டர் தூரத்திற்குப் பயணிக்கக்கூடிய சுவாசத் துளிகளிலிருந்தே பரவும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், இப்போது மறுபரிசீலனைக்குப் பிறகு, அடைப்பிடத்திற்குள் இந்தத் தொற்று காற்றில் பரவும் என்று உறுதி செய்துள்ளது. காற்றில் இயல்பாக 5 மைக்ரோ மீட்டருக்கும் குறைவாக உள்ள துளிகளே நீண்ட தூரத்திற்குப் பயணிக்கும். அந்த அளவைவிட அதிகமாக இருக்கும் துளிகள் காற்றில் நீண்ட தூரம் பயணிக்க முடியாமல் கீழே விழுந்துவிடும். அந்த 5 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான விட்டமுள்ள துளிகளில் கிருமிகள் ஒட்டிக்கொண்டு பயணிப்பதையே காற்று வழிப் பரவலாகக் கூறுகின்றார்கள் ஆய்வாளர்கள். இதற்குரிய ஆதாரங்களை 241 ஆராய்ச்சியாளர்கள் முன்வைத்து அனுப்பிய கடிதத்தை ஜூலை 8-ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பில் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டது.
ஆகவே, கொரோனா காற்றில் குறிப்பிட்ட தூரத்திற்கு, அடைப்பிடப் பகுதிகளில் பரவும் என்று உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்தது. ஆனால், அது எப்படிப் பரவுகின்றது?
அதுகுறித்து விரிவாகப் புரிந்துகொள்வதற்காக அந்த ஆய்வுக்கட்டுரை நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 1930-களில்லும் 1940-களிலும் நடத்தப்பட்ட ஆய்வுகளின் வழியே, ``காற்றிலுள்ள நுண்ணிய துளிகளைவிட, நாம் பேசும்போதோ இறுமும்போது வெளியாகும் சுவாசத் துளிகள், 5 மைக்ரோ மீட்டர் விட்டத்தைவிட அதிகமாக இருக்கும். ஆகவே, அவை அதிகநேரம் காற்றில் இருக்கமுடியாமல் கீழே விழுந்துவிடும்" என்று நமக்குத் தெரியவந்தது.
ஆனால், மேற்கொண்டு நடத்தப்பட்ட விரிவான, ஆழமான ஆய்வுகள், ஒரு கடத்தியாகச் செயல்படுவதில் காற்றிலுள்ள நுண்துளிகளின் முக்கியத்துவத்தைப் புரியவைத்தன. கடந்த மே மாதம் வெளியான ஓர் ஆய்வில், லேசர் ஒளியைப் பயன்படுத்தி ஒருவர் பேசும்போது வெளியாகின்ற நுண்துளிகளை கண்டறிந்தனர். அதே முறையில், கொரோனா நோயாளியிடம் செய்த பரிசோதனையில், ஒரு நிமிடத்திற்குச் சத்தமாகப் பேசினால், 4 மைக்ரோ மீட்டர் விட்டமுடைய, வைரஸ் கிருமியைச் சுமந்திருக்கும் 1,000 நுண்துளிகள் வெளியேறுவதையும் அந்த நுண்துளிகள் 8 நிமிடத்திற்குக் காற்றில் இருப்பதையும் கண்டறிந்தனர். இந்த ஆய்வை அடிப்படையாக வைத்து, ``சாதாரணமாகப் பேசும்போதே, வாயிலிருந்து வெளியாகும் நுண்துளிகளின் வழியே கொரோனா வைரஸ் காற்றில் கலந்து அருகிலிருப்பவர்களைப் பாதிக்கும்" என்ற முடிவுக்கு வந்தனர்.
பரிசோதனைக் கூடங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளைத் தாண்டி, வெளியே எங்கும் இதுபோல் நுண்துளிகளைக் கண்டறிவது எளிமையாக இருந்ததில்லை. ``வுகானிலுள்ள ஒரு மருத்துவமனையில் நுண்துளி மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்தபோது, அதில் SARS-CoV-2 வைரஸினுடைய ஆர்.என்.ஏ இருந்துள்ளது கண்டறியப்பட்டது. ஆனால், ஆர்.என்.ஏ தான் கண்டறியப்பட்டுள்ளது, தொற்று ஏற்படுத்தக்கூடிய கிருமி நேரடியாகக் கண்டறியப்படவில்லை. அது கண்டறியப்படும்போதுதான் இந்தக் கூற்று முழுமையாக உறுதிப்படும்’’ என்கின்றார் அல்லெக்ரான்சி.
ஒருவழியாக, சில ஆய்வுகளில் காற்றில் வைரஸ் கிருமிகளைச் சுமந்திருக்கும் நுண்துளிகளைக் கண்டறிந்தனர். சூரிய ஒளி இருக்கின்ற இடத்தில், மனிதர்களுடைய எச்சிலிலிருந்து தெறிக்கின்ற நுண்துளியில் இந்தத் தொற்றுகளைச் சுமந்திருப்பனவற்றில் 90 சதவிகிதம், 6 நிமிடங்களுக்குக் கீழே விழாமல் மிதந்துகொண்டிருப்பதை, வாஷிங்டனிலுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குநரகத்தில் கண்டுபிடித்தனர். அதுவே, இருட்டில் அவை 125 நிமிடங்களுக்குத் தங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வுமுடிவுகளின் அடிப்படையில், அடைப்பிடப் பகுதிகளான உணவகங்கள், குளிரூட்டப்பட்ட அறைகள் போன்றவற்றில் தொற்று எளிதில் பரவும் ஆபத்து உள்ளவையாகக் கூறப்படுகின்றன.
Also Read: காற்று மாசுபாட்டுக்கும் கொரோனாவுக்கும் தொடர்புண்டா? - ஓர் அலசல்!
இதுவரை, ஆய்வாளர்களுக்குப் புரியாத புதிராகவே ஒரு கேள்வி இருந்துவருகின்றது. ``ஒருவருக்குத் தொற்று நோய் பாதிக்க வேண்டுமெனில் எந்த விகிதத்தில், இந்தக் கிருமிகள் அவருடைய உடலுக்குள் செல்லவேண்டும்?" என்ற அந்தக் கேள்விக்கு விடை காண போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான ஆய்வுகளை உலக சுகாதார நிறுவனம் முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கின்றது. அது தெரிந்தால், காற்று வழியாகப் பயணிக்கும் கிருமிகளைக் கையாள நமக்கு அது உதவியாக இருக்கும் என அல்லெக்ரான்சி நம்புகிறார்.
கொரோனா தொற்றுக்குப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் பலியாவோரின் எண்ணிக்கையும் காற்று மாசுபாடு அதிகமுள்ள பகுதிகளில் கணிசமான எண்ணிக்கையில் உயர்ந்த வண்ணம் இருப்பதும்கூட சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் தெரியவந்தது. அதைவைத்து அலசிப் பார்த்தபோது, காற்று மாசுபட்டுள்ள சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் கொரோனா பலி எண்ணிக்கை உயர்ந்திருப்பதும் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்குத் தீர்வு கிடைக்கும் வரை, யாருடனும் நெருங்கி நின்று பேசாதீர்கள். அடைப்பிடங்களில் அதிக நேரம் செலவழிக்காதீர்கள். முகக்கவசம், கையுறை போன்றவற்றைத் தவறாமல் பயன்படுத்துங்கள். நாம் அனைத்துவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ளவேண்டும். உலக சுகாதார நிறுவனம், இனியேனும் சர்வதேச ஆய்வாளர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து முன்கூட்டியே ஆய்வுகளை முடுக்கிவிட வேண்டும். அப்போதுதான் இதற்கான தீர்வையும் நம்மால் விரைவில் எட்டமுடியும்.
source https://www.vikatan.com/government-and-politics/environment/who-acknowledged-that-there-is-evidence-of-airborne-spread-of-coronavirus
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக