Ad

வெள்ளி, 10 ஜூலை, 2020

விகாஸ் துபே வியாபித்த உத்தரப் பிரதேசம்… யோகி ராஜ்ஜியமா, கேங்ஸ்டர் ராஜ்ஜியமா?

காவியுடை தரித்த யோகி ஆட்சி புரியும் மாநிலமென்பதால், அந்த மாநிலம் ஒட்டுமொத்தமாக ஆன்மிகக் கடலில் மூழ்கியிருக்கும், மக்கள் எல்லோரும் பயபக்தியுடன் நடமாடிக்கொண்டிருப்பார்கள் என்ற எதிர்பார்ப்புக்கு முற்றிலும் நேர்மாறான சூழல்தான் உத்தரப்பிரதேசத்தில் நிலவிக்கொண்டிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தை பல ராஜ்ஜியங்களாகப் பங்குபோட்டுக்கொண்டு `கேங்ஸ்டர்’, `டாண்’, `தாதா’, `ரவுடிக் கும்பல்’ எனப் பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படும் சமூகவிரோத கும்பல்கள் ஆண்டுகொண்டிருக்கின்றன. அப்படியாக, கான்பூர் மாநிலத்தில் நீண்டகாலமாக ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருந்த விகாஸ் துபே `எபிசோடு’தான் தற்போது உ.பி-யில் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது. தன்னைப் பிடிக்க வந்த ஒரு டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர்கள் உட்பட எட்டு போலீஸாரை சுட்டுக்கொன்றுவிட்டு தலைமறைவாகிவிட்ட விகாஸ் துபே நேற்று (ஜூலை 9) மத்தியப் பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டார்.

கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் என ஏராளமான குற்றச்செயல்களில் நீண்டகாலமாக ஈடுபட்டுவந்ததுடன், சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருந்த ரவுடிக்கும்பலின் தலைவரான இந்த நபர், டி.எஸ்.பி உட்பட எட்டு போலீஸார் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகுதான் கைதுசெய்யப்பட்டார். இப்போது அவர் போலீஸாரால் தீர்த்துக்கட்டப்பட்டிருக்கிறார்.

அமேசான் பிரைம் வீடியோவில் `மிர்ஸாபூர்’ என்ற வெப்சீரிஸ் மிகவும் பிரபலம். இந்த வெப்சீரிஸின் கதைக்களமும் காட்சிகளும் உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் ரவுடிகள் ராஜ்ஜியத்தை அப்பட்டமாகப் பிரதிபலித்துள்ளன. கள்ளத்துப்பாக்கிகளைத் தயாரித்து விற்பனை செய்வது, போதைப்பொருள்களைப் புழங்கவிடுவது என மிர்ஸாபூரைக் கட்டியாள்கிறார் காலின் பையா என்ற தாதா. அவருக்கு ஆளும்கட்சியினருடன் கூட்டு. சட்டவிரோதமாகச் சம்பாதித்து குவிக்கும் காலின் பையாதான் அப்பகுதியில் ஆளும்கட்சியின் கஜானா. காவல்துறை, காலின் பையாவின் காலில் விழுந்துகிடக்கிறது.

Policemen inspect the scene of an ambush in Kanpur, India, Friday, July 3, 2020.

ஒருபோதும் ஊர் அமைதியாக இருந்துவிடக் கூடாது. ஊர் மக்கள் மத்தியில் பகையும் சண்டையும் சச்சரவும் பதத்துப்போகாமல் பார்த்துக்கொண்டால், துப்பாக்கி வியாபாரம் ஓஹோவென்று நடைபெறும். அதைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார் காலின் பையா. இதனால் எப்போதும் துப்பாக்கிச்சத்தம் கேட்கிறது, ரத்தம் தெறிக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் கதை என்பதால், இதில் எந்த மிகைப்படுத்தலும் இருப்பதாகத் தோன்றவில்லை. அந்தக் காலின் பையாவைப் போன்ற நிஜ உருவம்தான், தற்போது போலீஸாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட விகாஸ் துபே.

கான்பூர் மாவட்டத்தில் பிகரு என்ற கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் துபே, இளம் வயதிலேயே கொலை, நிலஅபகரிப்பு, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். 1990-ம் ஆண்டு இவர் மீது முதல் கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டது. பிறகு, தனது ரவுடி ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திக்கொண்ட விகாஸ் துபே மீது தற்போது 60-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஆனாலும், அவர் ஒரு சுதந்திரப் பறவை. `மோஸ்ட் வான்டட்’ குற்றவாளியாகக் கருதப்பட்ட இந்த நபருக்கு ஆளும்கட்சிப் புள்ளிகளுடன் நெருக்கம் இருந்ததால், காவல்துறையினர் இவரை நெருங்கவில்லை.

விகாஸ் துபே

20 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு பயங்கர சம்பவம், விகாஸ் துபே எவ்வளவு பெரிய ரவுடி என்பதற்கு சாட்சி. 2001-ம் ஆண்டு உத்தரப் பிரதேச முதல்வராக இருந்தார், தற்போது இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங். அப்போது பா.ஜ.க-வைச் சேர்ந்த சந்தோஷ் சுக்லா மாநில அமைச்சராக இருந்தார். அவருக்கும் விகாஸ் துபேவுக்கும் கடும் பகை. அந்த அமைச்சரைத் தீர்த்துக்கட்ட முடிவுசெய்தார் விகாஸ் துபே. ஒரு காவல்நிலையத்தில் சந்தோஷ் சுக்லா இருந்தபோது, திடீரென்று ஏ.கே 47 துப்பாக்கிகளுடன் காவல்நிலையத்துக்குள் புகுந்த விகாஸ் துபேவும் அவரின் ஆட்களும் அமைச்சர் சந்தோஷ் சுக்லாவை சரமாரியாகச் சுட்டுக்கொன்றனர். அமைச்சரைப் பாதுகாக்க முயன்ற காவல்துறையினரையும் அவர்கள் சுட்டனர். அதில், இரண்டு போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே, இவ்வளவு பயங்கரமான செயலில் ஈடுபட்டவரான இந்த நபர், அதன் பிறகு கடந்த 20 ஆண்டுகளில் ஆட்சியாளர்களுடைய ஆசிர்வாதத்துடன் அசுர வளர்ச்சி பெற்றார்.

யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகளாகின்றன. யோகி ஆட்சிக்கு வந்த பிறகு, சிறிய குற்றங்களில் ஈடுபட்டுவந்த பலரை என்கவுன்டரில் போலீஸார் போட்டுத்தள்ளியிருக்கிறார்கள். அதனால் யோகி ஆட்சியில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுவதாக விமர்சனங்கள்கூட எழுந்தன. அத்தனை என்கவுன்டர்களை நிகழ்த்திய உ.பி போலீஸாரின் என்கவுன்டர் பட்டியலில், விகாஸ் துபே போன்ற பெரும் கேங்ஸ்டர்களின் பெயர்கள் இல்லை என்று அப்போது செய்திகள் வெளிவந்தன. விகாஸ் துபே மீது அப்போதே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், எட்டு போலீஸாரை இழந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. போலீஸாரை கொலை செய்த பிறகு, விகாஸ் துபேயைப் பிடிப்பதற்கு 25 தனிப்படைகளை அமைத்த யோகி அரசு, ஏன் இத்தனை காலம் அவரை சுதந்திரமாக குற்றச்செயலில் ஈடுபட அனுமதித்தது என்று எதிர்க்கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் கேள்விகளால் துளைத்தெடுத்து வந்தனர்.

அகிலேஷ்

போலீஸார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு யோகி அரசுக்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அதிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்கு ஆளும் தரப்பு ஒரு உத்தியைக் கையாண்டது. விகாஸ் துபேயின் மனைவி ரிச்சா துபே 2015-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவராக வெற்றிபெற்றிருக்கிறார். அந்தத் தேர்தலின்போது, ரிச்சா துபே சார்பில் ஒட்டப்பட்ட பிரசார சுவரொட்டிகளில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர்கள் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த சுவரொட்டியின் புகைப்படங்களை இப்போது இணையதளத்தில் வெளியிட்டு, `பார்த்தீர்களா… விகாஸ் துபேவுக்கு சமாஜ்வாதி கட்சியின் ஆதரவை…’ என்று பா.ஜ.க தரப்பு பிரசாரம் செய்தது. இதன் மூலம் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது, பா.ஜ.க-வோ, பி.எஸ்.பி-யோ, சமாஜ்வாதியோ, உத்தரப் பிரதேசத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் விகாஸ் துபே போன்ற ரவுடிக் கும்பல்கள் மீது கைவைப்பதில்லை என்பது தெரிகிறது. அதுதான் இன்றைக்கு உ.பி-யை ஒரு கேங்ஸ்டர் ராஜ்ஜியமாக மாற்றியிருக்கிறது.

எட்டு போலீஸாரைச் சுட்டுக்கொன்றுவிட்டு விகாஸ் துபே தலைமறைவாகிவிட்டார். அவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.2.5 லட்சம் பரிசு என்று யோகி அரசு அறிவித்தது. அதன் பிறகு அதை ரூ.5 லட்சம் என உயர்த்தி அறிவித்தது உ.பி அரசு.

Policemen inspect the scene of an ambush in Kanpur, India, Friday, July 3, 2020.

ஜூலை 2-ம் தேதி எட்டு போலீஸார் இந்த ரவுடி கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு, கடந்த ஒரு வார காலத்தில் 88 கிரிமினல்கள் மீது உ.பி போலீஸார் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதிவுசெய்துள்ளனர். விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளியான அமர் துபேவை போலீஸார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். போலீஸாரை சுட்டுக்கொன்றுவிட்டு தலைமறைவான விகாஸ் துபே, ஒரு வாரத்துக்குப் பிறகு மத்தியப் பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டார். பிக்ரு கிராமத்தில் 10,000 சதுர அடியில் கட்டப்பட்டிருந்த விகாஸ் துபேயின் பிரமாண்டமான வீட்டை புல்டோஸரால் போலீஸார் இடித்துத்தள்ளியிருக்கிறார்கள்.

Also Read: `இவர்களுக்கெல்லாம் துப்பாக்கி எங்கிருந்துதான் கிடைக்கிறது?' - 7 கோடி துப்பாக்கிகள்

கைது செய்யப்பட்ட விகாஸ் துபே சிறையில் அடைக்கப்பட்டார். சிறையைவிட அவருக்கு பாதுகாப்பான இடம் வேறு எதுவும் இல்லை. விகாஸ் துபே போன்ற கேங்ஸ்டர்களுக்கு எதிர் கோஷ்டிகள் மற்றும் பிற எதிரிகளிடமிருந்து உயிரைக் காத்துக்கொள்ள பாதுகாப்பான இடம் சிறைதான். வழக்கமாகவே, உ.பி-யில் ரவுடி கும்பல்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து என்றால், சிறையில் அடைக்கலமாகிவிடுவார்கள் என்றும், தங்களுக்கு சாதகமானவர்கள் ஆட்சிக்கு வரும்வரை சிறையில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. கைதுக்குப் பிறகு, விகாஸ் துபேயும் பாதுகாப்பான இடத்துக்குப் போய்விடலாம் என்றுதான் கனவு கண்டார். ஆனால், அவரை போட்டுத்தள்ள வேண்டிய நெருக்கடி யோகி அரசுக்கு ஏற்பட்டுவிட்டது. மத்திய பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட விகாஸ் துபே உ.பி-க்கு கொண்டுசெல்லப்பட்டபோது வாகனத்திலிருந்து தப்ப முயன்றார் என்று கதையை முடித்துவிட்டார்கள்.

Policemen stand guard after a gang of criminals ambushed and fired on police who had come to arrest them in Kanpur, India, Friday, July 3, 2020.

விகாஸ் துபேயை ஒழித்துக்கட்டியதால், உ.பி-யில் இனிமேல் அமைதி தவழும் என்று சொல்ல முடியாது. ஏனெனில், அங்கு இன்னும் ஏராளமான விகாஸ் துபேக்கள் தங்களின் ரவுடி ராஜ்ஜியங்களை இன்னமும் நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/story-of-vikas-dubey-and-uttar-pradeshs-gangster-raj

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக