Ad

வெள்ளி, 10 ஜூலை, 2020

கரூர்: கேலிகிராஃபி; 7 நாள்; 7 வீடியோக்கள்! - அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்

"அழகான கையெழுத்து மற்றும் ஆங்கிலத்தை நன்றாகப் பேசவைப்பார்கள் என்று நினைத்துதான், பெற்றோர்கள் லட்சங்களைக்கூட கொட்டிக்கொடுத்து, தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அதனால், அரசுப் பள்ளிகளிலும் அதைத்தாண்டி போதிப்போம் என்று எங்கள் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் அழகாக எழுத, 7 நாள் பயிற்சியில் பயிற்சி தருகிறேன்" என்கிறார், அரசுப் பள்ளி ஆசிரியரான பூபதி அன்பழகன்.

அழகான கையெழுத்து

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் உள்ள பொய்யாமணியில் இயங்கி வருகிறது, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில், பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர்தான் பூபதி அன்பழகன்.

Also Read: கரூர்: `300 மரக்கன்றுகள்; 3,000 வாட் சூரிய மின்சாரம்' -அசத்தும் அரசுப் பள்ளி

இந்தப் பள்ளியில் 180 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மிகவும் பின்தங்கிய கிராமமான இந்தக் கிராமத்தில் உள்ள இந்த அரசுப் பள்ளியைத் தனது தளராத முயற்சியால், தனியார் பள்ளிகளைத் தாண்டி அதிக வசதிகள் கொண்ட பள்ளியாக மாற்றிக் காட்டியிருக்கிறார்.

கையெழுத்து பயிற்சியில் மாணவி

இதுவரை, ரூ. 25 லட்சம் நன்கொடையாகப் பெற்று, பள்ளியின் கட்டமைப்பு, சூழல், டெக்னாலஜி என்று பல்வேறு வகையில் செம்மையாக்கியிருக்கிறார். இதற்காக, இந்தப் பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழும் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், தனது பள்ளியில் 6, 7 மற்றும் 8 -ம் வகுப்புகள் படிக்கும் 120 மாணவர்களுக்கு ஆங்கிலம் எழுதும் முறையை, 7 நாள் பயிற்சி மூலம் அழகாக்கியிருக்கிறார். அதோடு மற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இந்த எழுத்துப் பயிற்சியை இலவசமாக வழங்கிவருகிறார்.

பூபதி அன்பழகனிடம் பேசினோம்.

"எங்கள் பள்ளி மாணவர்களுக்குத் தனியார் பள்ளிகளைத் தாண்டி பல்வேறு பயிற்சிகள் கொடுத்து, கற்றல்திறனை மேம்படுத்தியிருக்கிறோம். ஆங்கிலத்தை சிறப்பாகச் கற்பித்து, மாணவர்கள் அழகாக ஆங்கிலம் பேசும்படி செய்திருக்கிறோம். அடுத்த முயற்சியாகத்தான், மாணவர்களின் ஆங்கில எழுத்துப் பயிற்சியை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கினேன். கேலிகிராஃபி என்கிற வெளிநாட்டு எழுத்துப் பயிற்சி முறைதான் அது.

கோயமுத்தூரில் உள்ள ஒரு தனியார் அகடாமியில் 8,500 ரூபாய் கொடுத்து, அந்தப் பயிற்சியைக் எடுத்துக்கிட்டேன். அதன்மூலம், எங்கள் பள்ளியில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு இந்த எழுத்துப் பயிற்சியைக் கொடுத்தேன். இதனால் மாணவர்களின் ஆங்கில எழுத்துகளை எழுதும் முறை அழகாகியிருக்கிறது. இந்த எழுத்துமுறை பற்றிய ஆர்வத்தை தூண்ட ஒரு யூடியூப் சேனலும் ஆரம்பித்தேன். அதைப் பார்த்துட்டு, மற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் இந்த முறையைக் கற்றுக்கொள்ள ஆர்வம்காட்டினாங்க.

பூபதி அன்பழகன்

இப்போது லாக்டௌன் காலம் என்பதால், வாட்ஸஅப் வீடியோ, ஆன்லைன் கிளாஸ் மூலமா பலருக்கும் இந்த முறையை சொல்லிக்கொடுத்தேன். பாண்டிச்சேரியில் உள்ள 2 அரசுப் பள்ளிகள், தஞ்சையில் ஒன்று, மதுரையில் ஒன்று, சென்னையில் ஒன்று என்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இந்தமுறையை கத்துக்கிட்டாங்க.

இதுவரை 60 ஆசிரியர்களுக்கும் 100 மாணவர்களுக்கும் சொல்லிக்கொடுத்திருக்கிறேன். தவிர, சில தனியார் பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் இதைக் கத்துக்கிறாங்க. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு மட்டும் இந்த எழுத்துப் பயிற்சியை இலவசமாக கற்றுத்தருகிறேன். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கட்டணம் வாங்கிகொண்டுதான் கற்றுத்தருகிறேன்.

Also Read: ஜெயில்... மதில்... திகில்! - 36 - ஒரு தலைவன்... ஒரு கோடி கையெழுத்து!

இந்தப் பயிற்சிக்காக, ஏழு வீடியோக்களை தினம் ஒரு வீடியோ என்ற அடிப்படையில் அனுப்புவேன். முதல் வீடியோவில் எழுத்துகளின் பேசிக் ஸ்ட்ரோக்ஸ் பற்றி இருக்கும். அடுத்த நாள், ஸ்மால் லெட்டர்களை, ஏ முதல் எம் வரை எழுத சொல்லுவேன். மூன்றாம் நாள் வீடியோவில் ஸ்மால் லெட்டர்களை, என் முதல் இசட் வரை எழுத கற்றுக்கொடுக்கும் பயிற்சிகள் இருக்கும். அதேபோல், நான்காம் நாள் வீடியோவில், கேபிடல் எழுத்துகளான ஏ முதல் எம் வரையிலான எழுத்துகளை எழுதும் பயிற்சியும், ஐந்தாம் நாள் வீடியோவில் என் முதல் இசட் வரையிலான எழுத்துகளை எழுதக் கற்றுக்கொடுக்கும் அம்சங்களும் அடங்கியிருக்கும். 6 - ம் நாள் வீடியோ மூலமாக, ஒரு கட்டுரையைக் கொடுத்து எழுதச் சொல்லுவேன். நிறைவாக, ஏழாம் நாள், எழுத்துகளை கொடுத்து எழுதுதச் சொல்லுவேன்.

அழகான கையெழுத்து

அதன்பிறகு, எவ்வளவு மோசமான, கோழி கிறுக்கிற மாதிரி எழுதுற மாணவனின் கையெழுத்தும் குண்டுகுண்டாக அழகாகும். பொதுவாக மாணவர்களின் அழகிய கையெழுத்துக்கும் கவனம் சிதறாமைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டுனு சொல்வாங்க. அதனால், மாணவர்களின் கையெழுத்து அழகானால், அவர்களின் தலையெழுத்தும் நன்றாக அமையும்னு இந்த முறையைக் கற்றுத்தருகிறேன்.

இந்த கேலிகிராஃ.பி ஆங்கில கையெழுத்து எழுத்துப் பயிற்சி முறையைத் தமிழகம் முழுக்க உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்க்கணும்ங்கிற முயற்சியில் இருக்கிறேன்" என்றார்.



source https://www.vikatan.com/news/education/karur-government-school-teacher-introduce-calligraphy-writing-style-to-his-students

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக