Ad

வெள்ளி, 10 ஜூலை, 2020

சென்னை: `நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா?’ - கஞ்சா வியாபாரிகளால் எஸ்.ஐ மகனுக்கு நேர்ந்த கொடூரம்

ஆந்திராவில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் வழியாகக் கொண்டு வரப்படும் கஞ்சா பொட்டலங்கள் அங்கிருந்து 10 கிராம் அளவுக்கு மடிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்படுகிறது. சென்னைக்கு அனுப்பப்படும் கஞ்சா பொட்டலங்களைக் கல்லூரி மாணவர்கள் மற்றும் போதை ஆசாமிகள் மொத்தமாக வாங்கி அவற்றை ஆள் அரவமற்ற இடங்களிலும் கல்லூரி வளாகங்களிலும் சில்லறை விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.

அம்பத்தூர் காவல்நிலையம்

சென்னை அம்பத்தூரை அடுத்த சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ், அம்பத்தூர் பகுதியின் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் மகன் யுவராஜ் அதே பகுதியில் சிமென்ட், மணல், ஜல்லி ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். யுவராஜ் அந்தப் பகுதியில் நடக்கும் சமூக விரோதக் குற்றங்களை எதிர்த்து அவ்வப்போது குரல் எழுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்கிறார்கள் அப்பகுதியினர்.

இந்த நிலையில், யுவராஜ் வசிக்கும் அதே பகுதியில் கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சா போதைக்கு அடிமையாகி சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் போதைக்கு அடிமையானது மட்டுமல்லாமல் உள்ளூர் ஆசாமிகளிடம் இருந்து மொத்தமாகக் கஞ்சா பொட்டலங்களை வாங்கி அதை அந்தப் பகுதியில் வைத்து விற்பனையும் செய்து வந்துள்ளனர். மாலை நேரங்களில் அவர்களிடம் இருந்து கஞ்சா வாங்கிச் செல்வதற்கு அம்பத்தூரில் இருந்து ஏராளமான பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அடிக்கடி அங்கு வந்து செல்வதைக் கண்ட காவலர் மகன் யுவராஜ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலை மிரட்டியதாகத் தெரிகிறது.

Also Read: `மது கிடைக்கவில்லை; அதனால் போதை மாத்திரைகள்' -மெடிக்கல் கடை ஓனரால் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

யுவராஜின் மிரட்டலைக் கண்டு அசராத போதை ஆசாமிகள் தொடர்ந்து அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதனால் கோபமடைந்த யுவராஜ் தன் நண்பர்களுடன் சேர்ந்து வாக்குவாதம் செய்ய, அதுவே கைகலப்பில் முடிந்தது. ஆத்திரமடைந்தவர்கள் யுவராஜை பழி வாங்க திட்டம் தீட்டினர். அதனையடுத்து சண்முகபுரம் மைதானத்தில் நண்பர்களுடன் விளையாடி விட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த யுவராஜை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல், ``’போலீஸ்காரன் பையன்'னா நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா" எனக் கூறிவிட்டு தாங்கள் பதுக்கி வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்திகளைக் கொண்டு சரமாரியாக வெட்டியதும், ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த யுவராஜை உயிரிழந்து விட்டதாக நினைத்துக்கொண்ட கஞ்சா வியாபாரிகள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த யுவராஜை மீட்ட அப்பகுதிவாசிகள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

கஞ்சா

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் யுவராஜை அரிவாளால் வெட்டியது அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (23), கார்த்தி (20), சூர்யா, பென்னி (20) என்பது தெரியவந்தது. காவல்துறையினர் தேடுவதை அறிந்த அவர்கள், அதே சண்முகபுரம் பகுதியில் தலைமறைவாகினர். இந்த நிலையில், நேற்று காலை கஞ்சா வியாபாரிகள் சண்முகபுரம் பகுதியில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த காவல்துறையினர் மறைந்திருந்த நான்கு பேரையும் கைது செய்தனர். கஞ்சா விற்பனையைத் தட்டிக் கேட்ட காவலர் மகனையே போதை ஆசாமிகள் வெட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/ambattur-sub-inspector-son-attacked-by-cannabis-dealers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக