Ad

ஞாயிறு, 12 ஜூலை, 2020

கொரோனா: `எம்.பி-க்களுக்கு அழைப்பு; சமூக இடைவெளி!’ - மழைக்காலக் கூட்டத் தொடர் எப்போது?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி மார்ச் 23-ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து அன்றைய தினமே நாடாளுமன்ற இரு அவைகளுமே தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன. கொரோனா பரவலால் ஏப்ரல் 3-ம் தேதி முடிய இருந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இரண்டாவது அமர்வு தொடங்கவே இல்லை. இந்தநிலையில், மழைக்காலக் கூட்டத் தொடருக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் தயாராகி வருகின்றன.

வெங்கையா நாயுடு

இதுதொடர்பாக மாநிலங்களவைத் தலைவரும் துணைக் குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா இடையே விரிவான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பல மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில் மழைக்காலக் கூட்டத்தொடரை நடத்துவது குறித்தும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, மழைக்காலக் கூட்டத்தொடரை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு இரு அவைகளின் செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் எம்.பி-க்கள் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிகிறது. இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது. அதேநேரம், சில ஊடகங்களில் வெளியானது போல், ஒருநாள்விட்டு ஒருநாள் என்ற அடிப்படையில் இரு அவைகளும் இயங்குவது குறித்து பேசப்படவில்லை என்றும் நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தியா - கொரோனா

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உரிய சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு எம்.பி-க்களுக்கான இருக்கைகள் ஒதுக்கப்பட இருப்பதாகக் கூறுகிறார்கள். இதன்படி, இரு அவைகளின் பார்வையாளர்கள் மாடம், சென்ட்ரல் ஹால், நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் நூலகக் கட்டடம், பால்யோகி ஆடிட்டோரியம் உள்ளிட்ட இடங்களில் எம்.பி-க்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அதேபோல், இரு அவைகளின் செயலாளர்களும், தங்களது அலுவலகத்தில் இருந்தே பணிபுரியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

Also Read: எம்.பி-கள் நாடாளுமன்றம் வராவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா? | The Imperfect Show 08/03/2020

நாடாளுமன்றத்தில் இரண்டு கூட்டத் தொடர்களுக்கான இடைவெளி 6 மாதங்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்ற விதி இருக்கிறது. அதனால், செப்டம்பர் மாதத்தில் மழைக்காலக் கூட்டத் தொடர் கூடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். கூட்டத் தொடருக்கான தேதி இதுவரை இறுதி செய்யப்படாத நிலையில், செப்டம்பர் 22-ம் தேதி வாக்கில் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நாடாளுமன்றம்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ``மழைக்காலக் கூட்டத்தொடர் நிச்சயம் நடக்கும். அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது’’ என்றார்.



source https://www.vikatan.com/news/india/monsoon-session-will-certainly-be-held-says-minister-pralhad-joshi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக