"அ.தி.மு.க-வில் 11 பேர் கொண்ட நிர்வாகக்குழு விவகாரம் மீண்டும் கிளம்பியுள்ளதே?'' என்று கழுகாரிடம் கேட்டோம்.
''2017-ம் ஆண்டு முதல் பேசப்பட்டுவந்த இந்த விவகாரத்துக்கு, சிலர் மீண்டும் உயிர் கொடுத்துள்ளனர். தேர்தல் நேரத்தில் எடப்பாடி கை ஓங்கிவிடக் கூடாது என்று அவர்கள் இப்போதே காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டார்கள்.
அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி-யான கே.சி.பழனிசாமி அ.தி.மு.க தலைமைக்கு எதிராகத் தொடுத்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. அது தங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் சிக்கலாகி, தேர்தல் நேரத்தில் 'பி பார்ம்'-ல் கையெழுத்திடும் அதிகாரம் பறிபோய்விடும் என்று பன்னீரும் பழனிசாமியும் நினைக்கிறார்களாம்.
கடந்த வாரம் மூத்த அமைச்சருக்கு நெருக்கமான ஒருவர் கே.சி.பழனிசாமியைச் சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். '11 பேர் கொண்ட கமிட்டியில் உங்களை இணைத்துக் கொள்கிறோம். வழக்கை வாபஸ் வாங்குங்கள்' என்று சொல்ல, உடனடியாக பதில் ஏதும் சொல்லாமல் அந்த நபரைத் திருப்பி அனுப்பிவிட்டாராம் கே.சி.பி.''
"ஓ... இப்படியொரு சிக்கல் இருக்கிறதா?''
''ஏற்கெனவே பல விவகாரங்களால் அ.தி.மு.க தரப்பு பி.ஜே.பி-க்கு அடங்கி கிடக்கிறது. இந்த விவகாரமும் பி.ஜே.பி-க்கு கூடுதல் ப்ளஸ் ஆக மாறி, எதிர்காலத்தில் நமக்குச் சிக்கல் எழலாம் என்று எடப்பாடி காதில் யாரோ ஓதியுள்ளார்கள். அதற்குப் பிறகுதான் இந்தச் சமாதானத் தூது விடப்பட்டுள்ளது.
அதேபோல, ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏ-க்கள் மீதான தகுதிநீக்க வழக்கில், சபாநாயகருக்கும் 11 எம்.எல்.ஏ-க்களுக்கும் நோட்டீஸ் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று தி.மு.க தரப்பு கேட்டுக்கொண்டதால், நான்கு வாரத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது'' என்றவர் மேலும் ஒரு தகவல் சொன்னார்.
''கடந்த ஒரு மாதமாக தஞ்சாவூர் ஸ்டார் ஹோட்டல்களில் தங்கியிருந்தபடி தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஒரு குழு ரகசிய சர்வே எடுத்துள்ளனர். எடப்பாடி அனுப்பி இந்தக் குழு வந்ததாகக் கூறப்படுகிறது.
யாருக்கு செல்வாக்கு? - ரகசிய சர்வே ரிப்போர்ட்... அமைச்சர்களுக்கு எடப்பாடி அறிவுரை
சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், சாதி அமைப்புகள் எனப் பலரிடமும் ஆட்சியின் செயல்பாடு, தி.மு.க-வுக்குச் சாதகமான தொகுதிகள், லோக்கலில் யாருக்கு செல்வாக்கு என சர்வே எடுத்துள்ளனர். இவர்கள் வந்து சென்றதே அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்துக்குத் தெரியாதாம். வைத்திலிங்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் சர்வே ரிசல்ட் அமைந்துள்ளதாகத் தகவல்கள் கசிவது டெல்டா அ.தி.மு.க-வில் அனலைக் கிளப்பியுள்ளது.
அதேபோல தென்மாவட்டங்களிலும் ஒரு குழு சர்வேயை முடித்துள்ளனர். 55 தொகுதிகள் படு வீக் என எடப்பாடியிடம் அவர்கள் ரிப்போர்ட் கொடுத்துள்ளார்களாம். 'டி.டி.வி.தினகரனால் முக்குலத்தோரும், சாத்தான்குளம் விவகாரத்தால் நாடார்களும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமியால் தேவேந்திர குல வேளாளர்களும் அ.தி.மு.க-வுக்கு எதிராகத் திரண்டு நிற்பதால் அங்கு தேறுவது கஷ்டம்' என்று முடிகிறதாம் அந்த ரிப்போர்ட்.
இதனால், கொங்கு மண்டலத்திலும் வட மாவட்டங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தும்படி அந்தப் பகுதி அமைச்சர்களிடம் கூறியிருக்கிறாராம் எடப்பாடி.''
- கழுகார் பகுதியை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... > மிஸ்டர் கழுகு: அநாகரிகத்தின் உச்சத்தைத் தொட்ட அறிக்கைப் போர்! - பின்னணி என்ன? https://bit.ly/38O6V8m
* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.
Also Read: மிஸ்டர் கழுகு: அநாகரிகத்தின் உச்சத்தைத் தொட்ட அறிக்கைப் போர்!
சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV
source https://www.vikatan.com/news/politics/edappadi-palanisamy-unhappy-over-secret-survey-reports-of-55-constituencies
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக