Ad

திங்கள், 20 ஜூலை, 2020

`என்னைவிட தேசபக்தி மிக்கவர் யாரும் இல்லை!’ - ட்விட்டரில் ட்ரம்ப் கிண்டல்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் தற்போதுவரை 1.48 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மிக அதிகமாக அமெரிக்காவில் மட்டும் சுமார் 39 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கான மருந்து இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது, கைகள் கழுவுதல் ஆகியவையே வைரஸின் முக்கிய தடுப்பு நடவடிக்கைகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ட்ரம்ப்

ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மாஸ்க் அணிவதை முற்றிலும் தவிர்த்து வந்தார். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம், அனைத்து மக்களும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என வலியுறுத்தியபோதும் முகமூடி எதுவும் இல்லாமலே செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார் ட்ரம்ப். இதற்கு அவர் தெரிவித்த காரணம், ``நான் முகக்கவசம் அணிய வேண்டும் என நினைக்கவில்லை. மாஸ்க் அணிந்து பல நாட்டு ஜனாதிபதிகளையும் பிரதமர்களையும் மன்னர்களையும் ராணிகளையும் நான் எவ்வாறு சந்தித்து பேசுவது? அது சரியானதாக இருக்காது” எனக் கூறியிருந்தார்.

Also Read: ட்ரம்ப்: உலகின் மிகவும் ஆபத்தான மனிதன் உருவானது எப்படி? - சர்ச்சையைக் கிளப்பும் புத்தகம்

குடியரசுத் தலைவர் மாளிகையில் இருப்பவர்களுக்கும் ட்ரம்ப்புடன் நேரடித் தொடர்பிலிருந்த சில அதிகாரிகளுக்கும் கொரொனா உறுதி செய்யப்பட்டபோதும்கூட அவர் மாஸ்க் அணிய மறுத்து வந்தார். இதற்கிடையில் கடந்த வாரம் வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்துக்கு ட்ரம்ப் சென்றிருந்தார். அப்போதுதான் முதல் முறையாகப் பொதுவெளியில் அவர் மாஸ்க் அணிந்துகொண்டு வந்தார். கொரோனா பரவல் தொடங்கி பல மாதங்களுக்குப் பிறகு மாஸ்குடன் ட்ரம்ப் இருக்கும் புகைப்படம் உலகளவில் வைரலானது.

இந்நிலையில் தான் மாஸ்குடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள அதிபர் ட்ரம்ப். அதனுடன், ``கண்ணுக்குத் தெரியாத சீன வைரஸைத் தோற்கடிப்பதற்கான நம் முயற்சியில் அனைவரும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மேலும், ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாதபோது முகமூடி அணிவதுதான் தேசபக்தி என்று பலர் கூறுகிறார்கள். என்னை விட தேசபக்தி மிகுந்தவர் யாரும் இல்லை. உங்கள் விருப்பமான அதிபர்” என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். இவரின் கருத்துக்கு பலரும் எதிர் கருத்தும் நகைச்சுவையாகப் பதில் கருத்தும் பதிவிட்டு வருகின்றனர்.

Also Read: கொரோனா:`முதன்முறையாக முகக்கவசம் அணிந்த ட்ரம்ப்!’ - அரசியலும் விமர்சனங்களும்...



source https://www.vikatan.com/news/international/there-is-nobody-more-patriotic-than-metrump-has-said

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக