Ad

திங்கள், 20 ஜூலை, 2020

சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது என்னென்ன நடவடிக்கைள் எடுக்கமுடியும்? #DoubtOfCommonMan

மனிதன் ஆதி காலம் முதலே ஒரு நபரைப் பற்றி இன்னொருவருடன் புறம் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அது பிற்காலத்தில் திண்ணைப் பேச்சாகவும் வடிவம் பெற்றது. இப்படித்தான் ஒரு நபரைப் பற்றிய செய்திகள் ஊர் முழுவதும் பரவத் தொடங்கின. இது சாதாரணமாக இருக்கும் வரை எந்த பிரச்னையும் இல்லை. இது சில நேரங்களில் அவதூறு பேச்சுகளாகவும் மாறிவிடும். தற்போதுள்ள ஸ்மார்ட்போன் யுகத்தில் பிறரைப் பற்றி தவறாகப் பேசுவதற்கும், அவதூறு பரப்புவதற்கும் சமூக வலைதளங்கள் இன்னும் நல்ல வாய்ப்பை அமைத்துத் தந்திருக்கின்றன. சமூக வலைதளங்கள் ஆரம்பிக்கப்பட்ட தொடக்கத்தில் மக்கள் செய்திகளையும், உணர்வுகளையும் பிறருடன் பரிமாறுவதற்கே பெரும்பாலும் அதைப் பயன்படுத்தினர். ஆனால் சிலர் சமூக வலைதளங்கள் மூலம் போலி தகவல்களையும், அவதூறுகளையும் பரப்பத் தொடங்கினர். உண்மையான செய்திகளை விட, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவும் போலித் தகவல்களை மக்கள் அதிகம் நம்புகின்றனர். அதுவும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்கள் பெருக, போலித் தகவல்களும் அவதூறுகளும் பெருகத் தொடங்கின. தற்போது தமிழ்நாட்டில் சமூக வலைதளம் மூலம் அவதூறு பரப்புவது என்பது வாடிக்கையாகி விட்டது.

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் முத்துராமன் என்ற வாசகர் ``சமூக வலைதளங்களில் ஒருவர் மீது அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது எப்படி?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
Doubt of a common man

அந்தக் கேள்விக்கு விடை தேடும் வகையில் சைபர் சட்டப்பிரிவு வழக்கறிஞரான சத்திய நாராயணனிடம் பேசினோம்.

``ஒருவரது நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்தில் அவர் மீதான அவதூறுகளை சமூக வலைதளங்களில் பரப்புவது என்பது சட்டப்படி குற்றமாகும். இதற்கு எதிரான நடவடிக்கையை இரண்டு விதமாக எடுக்கலாம். முதலாவதாக அவதூறைப் பரப்பியவர் மீதான சட்டப்படி நடவடிக்கை. இவர் மீது இந்தியச் சட்டப் பிரிவு 469-ன் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். இந்த சட்டமானது ஒருவரின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்தில் அவதூறு பரப்பியவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை. இதில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன் கீழ் போலியான மின்னணு பதிவும் (electronic record forged) சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் 19 (1)-ன் படி ஒருவருடைய பேச்சுரிமை மற்றும் உணர்ச்சியை வெளிப்படுத்துதல் என்பது அடிப்படை உரிமையாகும். ஆனால் ஒருவரின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் போலியான கருத்துகளையும், அவதூறுகளையும் பரப்புவது குற்றம்.

இரண்டாவதாக எந்த ஊடகத்தின் (சமூக வலைதளம்) வாயிலாக அல்லது சேவை வழங்குநரின் மூலமாக அவதூறு பரப்பப்பட்டதோ அதிலிருந்து அந்த கருத்துக்களை நீக்க நடவடிக்கை எடுக்கலாம். இதில் வெளியீட்டு ஊடகங்களுக்கு (சமூக வலைதளம்) தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ல் பிரிவு 79-ன் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இவர்கள் மத்திய அரசாங்கம் வெளியிட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும் அரசின் சார்பில் போலியான அவதூறு நிரூபிக்கப்பட்டால் அதை உடனடியாக தங்களது வலைதளங்களிலிருந்து நீக்க வேண்டும்.

சத்திய நாராயணன் | Sathya Narayanan

தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கான தீர்வு :

ஒரு தனிநபரின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அவதூறு பரப்புவது என்பது சிவில் மற்றும் கிரிமினல் குற்றமாகும். அதே சமயம் ஏற்கனவே செய்திகளிலும், பத்திரிகைகளிலும் ஆதாரப்பூர்வமாக வெளிவந்தவற்றைப் பற்றிப் பேசினாலோ விவாதித்தாலோ அது அவதூறு ஆகாது. ஒரு நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்புவதும் குற்றமே. ஆனால் அந்த நிறுவனத்தின் பொருட்களையோ அல்லது சேவையையோ விமர்சிப்பது என்பது அவதூறு என எடுத்துக்கொள்ளப்படாது. அதே நேரத்தில் விமர்சனம் செய்யும் நபர் முதலில் அந்நிறுவனத்தின் சேவையைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் பொருட்களையும் வாங்கியிருக்க வேண்டும். நிறுவனத்தின் சின்னத்தையோ, முத்திரையையோ அல்லது கோஷத்தையோ அவதூறு பரப்பப் பயன்படுத்தினாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு தனிநபர் மற்றும் நிறுவனங்களின் மீது அவதூறு பரப்புவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கீழ்க்கண்ட சட்ட செயல்முறைகளைப் பின்பற்றலாம்:

Social Media

அவதூறு பரப்பிய நபர் மீது சிவில் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நஷ்டஈடு பெறலாம்.

தெரிந்த அல்லது தெரியாத நபர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்யலாம். ஒருவேளை காவல்துறையினர் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய மறுத்தால்,154(3) பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முறையிடலாம். இதோடு 200 Cr.P.C குற்றவியல் நடைமுறை குறியீட்டின்படி தனி புகாரும் அளிக்கலாம்.

இவற்றுடன் ஃபேஸ்புக், இன்ஸடாகிராம், ப்ளாக்ஸ்பாட் என எதில் அவதூறு பரப்பப்பட்டாலும், அதனுடைய சப்போர்ட் பக்கத்தில் அதை நீக்குமாறு புகார் அளிக்கலாம். இந்த மூன்று செயல்முறைகளையும் ஒரே நேரத்தில் கூட பின்பற்றலாம்.

இதோடு தெரிந்த நபர், வேண்டுமென்றே அவதூறு பரப்புவதை மேற்கொண்டிருந்தால், அதை உடனடியாக நிறுத்தவும், செய்வதைத் தவிர்க்கவும் நோட்டீஸ் அனுப்பலாம். இந்த நோட்டீஸிற்கு பிறகும் அவர் அவதூறு பரப்பும் செயல்களில் ஈடுபட்டால் கிரிமனல் குற்றப் பிரிவுகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 கீழ் 66சி, 66டி, 66இ, 67, 67ஏ, 71, 72, ஐபிசி 503, 499, 464, 469, 500, 507, 292, 294 போன்ற குற்றப் பிரிவுகள் நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் பொருந்தும்.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் :

மேலே சொன்ன குற்றப் பிரிவுகளைத் தவிர்த்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களுக்குத் தனிச் சட்டப் பிரிவுகள் உள்ளன. இவர்களுக்கு எதிராக நடக்கும் சைபர் குற்றங்களுக்கான நடவடிக்கைகளை சமூக வலைதளங்கள் விரைவாக எடுக்கின்றன. இதற்கு சமூக வலைதளங்களில் உள்ள சமூக வழிகாட்டுதல்கள் பக்கத்தில் (Community guidelines support) குழந்தைகளுக்கு எதிரான குற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் .

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சட்டப்பிரிவுகள்:

1. குழந்தைகளை பாலியல் ரீதியாகச் சித்தரித்து தகவல்களைப் பரப்புவது மற்றும் பதிவிடுவது தகவல் தொழில்நுட்ப பிரிவு 2000, 67பி-யின்படி குற்றமாகும்.

2. பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள் மற்றும் சைகைகளைப் பயன்படுத்துவது ஐபிசி 509ன் கீழ் குற்றமாகும்.

3. குழந்தைகளை ஆபாச நோக்கில் பயன்படுத்துவது மற்றும் அநாகரிகமாகச் சித்தரிப்பது போக்சோ சட்டப் பிரிவு 13 மற்றும் 14 கீழ் குற்றமாகும். இதற்கு ஐந்து வருடச் சிறைத்தண்டனை உண்டு.

Doubt of a common man

இதேமாதிரி வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க... இங்கே க்ளிக் செய்யவும்

இதோடு குழந்தையின் உண்மையான அல்லது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை பாலியல் ரீதியாகப் பயன்படுத்துவதாக அச்சுறுத்துவது போக்சோ சட்டப் பிரிவு 11(v) ன் கீழ் குற்றமாகும்.

இந்தியத் தண்டனை குறியீடு 499 மற்றும் 500-ன் கீழ் ஒரு நபரை வார்த்தைகள் மற்றும் செய்கைகள் அல்லது குறியீடுகள் மூலமாகத் தவறான பெயர் கொண்டு அழைத்தல், இனவெறியைத் தூண்டும் விதமான தகவல்களைப் பரப்புதல் ஆகியவை தண்டைக்குரிய குற்றமாகும்" என்கிறார் அவர்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

DoubtOfCommonMan


source https://www.vikatan.com/technology/tech-news/how-to-take-legal-action-against-online-defamation-doubtofcommonman

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக