Ad

செவ்வாய், 21 ஜூலை, 2020

சென்னை: `உயிரிழந்த காதல் மனைவியின் முகத்தை பார்க்க விடல!' - மனமுடைந்த கணவரும் தற்கொலை

சென்னை திருநின்றவூர் நடுகுத்தகை, திலிபன் நகர், அறிஞர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் மனோகரன் (51). இவர் நடுகுத்தகை ஊராட்சியில் மின் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரின் ஒரே மகன் அரவிந்தராஜன் (25). பி.ஏ படித்து விட்டு கூலி வேலை செய்து வந்தார். பட்டாபிராம், சத்திரம், பாரதியார் தெருவைச் சேர்ந்த பவித்ராவை (23), காதலித்தார்.

அரவிந்தராஜன்

பின்னர், இருவரும் 2016-ல் திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் காதல் தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்துவந்தனர். திடீரென அரவிந்தராஜனுக்கும் பவித்ராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால், கணவரைப் பிரிந்த பவித்ரா, அம்மா வீட்டுக்கு சென்றார். அம்மா வீட்டில் தங்கியிருந்த பவித்ரா, பிரபலமான ஜூவல்லரியில் வேலைபார்த்து வந்தார்.

இந்தநிலையில் பவித்ரா, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதனால், விவாகரத்து வழக்கை வாபஸ் பெறும்படி பவித்ராவிடம் அரவிந்தராஜன் செல்போனில் கூறிவந்ததாகத் தெரிகிறது. இந்தச் சூழலில் 15.7.2020-ல் வீட்டில் தனியாக இருந்த பவித்ரா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, பவித்ராவின் தந்தை ரவி, பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் 174 (4) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறார்.

அரவிந்தராஜன்

மனைவி பவித்ரா தற்கொலை செய்த தகவலையறிந்த அரவிந்தராஜன் மனமுடைந்தார். மனைவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்காக பட்டாபிராமுக்கு சென்றார். அதன்பிறகு வீட்டுக்கு வந்த அரவிந்தராஜன், 15-ம் தேதி முதல் சோகமாகவே இருந்துவந்துள்ளார். இந்தச் சமயத்தில் 20-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த அரவிந்தராஜன், புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசந்தர் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறார்.

அரவிந்தராஜனின் தந்தை மனோகரன் கொடுத்த புகார் மனுவில், ``என்னுடைய மகன் அரவிந்தராஜனும் அவரின் மனைவி பவித்ராவும் கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்தனர். கடந்த 15-ம் தேதி பவித்ரா, அவரின் தாய் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் சடலத்தை அரவிந்தராஜனைப் பார்க்க விடாமல் பவித்ராவின் உறவினர்கள் தடுத்துள்ளனர். அதனால் அரவிந்தராஜன் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்தார். என் மகன் இறப்பிற்கு வேறு எந்த காரணமும் இல்லை. எனவே விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்குப்பிறகு என் மகனின் சடலத்தை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அரவிந்தராஜன்

பவித்ராவின் அப்பா ரவி, பட்டாபிராம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், ``நான் மாதவரத்தில் காய்கறி வியாபாரம் செய்துவருகிறேன். எனக்கு 2 மகள்கள். மூத்த மகள் பவித்ரா, திருநின்றவூரைச் சேர்ந்த அரவிந்தராஜனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். குடும்ப வாழ்க்கை சரியாக அமையாததால், கடந்த 3 ஆண்டுகளாக எங்களுடன் வசித்துவந்தார். குடும்ப வாழ்க்கை சரியில்லாததால் விவாகரத்து தாக்கல் செய்துள்ளார். அதனால், அவரின் கணவர் அரவிந்த் அடிக்கடி போன் செய்து விவாகரத்தைத் திரும்ப பெறுமாறு தொந்தரவு செய்துவந்தார். கடந்த 15-ம் தே நானும் என் மனைவியும் கடைக்குச் சென்றுவிட்டோம். வீட்டில் பவித்ரா மட்டும் இருந்தார்.

Also Read: சென்னை: மனைவியை சித்ரவதை செய்து கொன்ற கணவர்! - குற்ற உணர்ச்சியில் சிறையில் தற்கொலை

மாலை 3.15 மணிக்கு பவித்ரா போன் செய்து எங்களை சாப்பிட்டு விட்டீர்களா என்று போனில் விசாரித்தார். மாலை 4.30 மணியளவில் பவித்ராவைச் சந்திக்க பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கீர்த்தனா என்பவர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் கதவை தட்டியும் பவித்ரா திறக்கவில்லை. போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. அதனால் எங்களுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். உடனே நான் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. கதவைஉடைத்து உள்ளே சென்று பார்த்த போது பவித்ரா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். என் மகளின் இறப்பு குறித்துவிசாரித்து சடலத்தை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முகநூல் பதிவு

Also Read: சென்னை: மனைவியை சித்ரவதை செய்து கொன்ற கணவர்! - குற்ற உணர்ச்சியில் சிறையில் தற்கொலை

அரவிந்தராஜன் தற்கொலை செய்வதற்கு முன் தன்னுடைய முகநூலில் ஒரு தகவலை பதிவு செய்துள்ளார். அதில், ``நானும் பவியும் ரொம்ப லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கொண்டோம். 15-ம் தேதி என்னை பவியின் முகத்தைப் பார்க்க விடல. என்னால அவள் இல்லாம இருக்க முடியல. அதனால் நானும் அவள்கூட போகிறேன். எங்கள் சாவுக்கு காரணம் பவியின் குடும்பத்தினர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

காதல் திருமணம் செய்த பவித்ராவும் அரவிந்தராஜனும் அடுத்தடுத்த தற்கொலை செய்த சம்பவம் பட்டாபிராம், திருநின்றவூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/police-investigation-over-chennai-mans-suicide

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக