ராணுவ தளவாடங்களை ஏற்றிக்கொண்டு, நேற்று முன்தினம், லடாக் எல்லைக்குப் புறப்பட்டபோது, ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் சாலை விபத்தில் வாகனம் சிக்கியது. இதில், நிகழ்விடத்திலேயே அழகுராஜா பலியானார்.
அவரது உடல், சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு, மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. துரைசாமிபுரம், குச்சனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள், அழகுராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, ராணுவத்தினர் மரியாதை செய்தனர். முன்னாள் ராணுவத்தினர் பலரும் மரியாதை செய்தனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உத்தமபாளையம் தாசில்தார் அழகுராஜா உடலுக்கு மரியாதை செய்யப்பட்டது.
Also Read: ராணுவ தளவாடங்களை ஏற்றிச் சென்ற வாகனம்! - விபத்தில் உயிரிழந்த தேனி ராணுவ வீரர்
அழகுராஜாவின் அண்ணன் கணேசன் நம்மிடையே பேசும்போது, ``கடந்த ஜனவரி மாதம்தான் விடுமுறைக்கு ஊருக்கு வந்துவிட்டு பிப்ரவரி மாதம் வேலைக்குச் சென்றான். சிறு வயதில் இருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசையில் இருந்து, கஷ்டப்பட்டு ராணுவத்தில் சேர்ந்தான். அவனுக்கு எந்த கெட்டப்பழக்கமும் இல்லை. அமைதியான குணம். இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை" என்றார் தழுதழுத்த குரலில்.
அழகுராஜாவின் உறவினர்களும், ராணுவ வீரருமான ஜெய சிம்மன் நம்மிடையே பேசும்போது, "அவரால்தான் நான் ராணுவத்தில் சேர்ந்தேன். என்னை ஊக்கப்படுத்தியது அவர்தான். நல்ல கூடைப்பந்து வீரர். ராணுவ அணியில் விளையாடிவருகிறார். என்னைப் போல எங்கள் ஊரில் பலரையும் ராணுவ வீரராக மாற்ற ஆசைப்பட்டவர். அதன்படி சிலர் ராணுவத்தில் சேர்ந்துள்ளனர்" என்றார்.
Also Read: தேசம் காக்கப் புறப்பட்டு தன்னுயிர் ஈந்த ராணுவ வீரர் பழனி! #RIPPalani #RIP #RealHero
விபத்து குறித்து அழகுராஜாவின் உறவினர்களிடம் கேட்ட போது, "அது ஒரு பழைய ராணுவ வாகனம். இடது பக்கம் ஸ்டேரிங் இருக்கும். அதைச் சாதாரண நபர்கள் ஓட்ட முடியாது. அனுபவம் மிக்க ஹவில்தார் ரேங்க்கில் இருப்பவர்கள்தான் ஓட்ட முடியும். மேலும் வாகனத்தில் உள்ளே ராணுவ தொலைத்தொடர்பு சாதனங்கள் இருந்தன. விபத்து நடந்த இடம் ஒரு மலைப்பாதை. அங்கு, அழகுராஜா ரொம்பவும் கவனத்தோடு வண்டியை ஓட்டியிருக்கிறார்.
ஒருகட்டத்தில் வண்டியின் ப்ரேக் பிடிக்காமல் போயுள்ளது. அந்த நேரத்திலும், தன்னுடன் பயணித்த இரண்டு ராணுவ வீரர்களை காப்பாற்ற, அவர்களை கீழே குதிக்கச் சொல்லியிருக்கிறார். அதற்குள், எதிரே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் வண்டி மோதிவிட்டது" என்றனர். அழகுராஜாவின் இறப்பு, அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/tamilnadu/funeral-of-theni-soldier-who-died-in-ladakh
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக