Ad

சனி, 11 ஜூலை, 2020

கரூர்: சிறுவர்கள் சண்டை; தட்டிக் கேட்கப்போன தாய்! - கொலையில் முடிந்த சோகம்

இரண்டு சிறுவர்களுக்குள் ஏற்பட்ட விளையாட்டுச் சண்டையால், இரண்டு பெண்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டதில், ஒரு பெண் இறந்துபோன சம்பவம், கரூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரியமஞ்சவெளி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கும் சிறிய கிராமம், பெரியமஞ்சவெளி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர், பரமசிவம். பெயின்டராக வேலைபார்த்து வருகிறார். இவரின் மனைவி, பராசக்தி. அந்தக் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தற்காலிக தூய்மைப் பணியாளராகப் பராசக்தி பணியாற்றி வந்தார். இந்தத் தம்பதிக்கு மகன் ஒருவர் உள்ளார்.

Also Read: கரூர்: `வெடக்கோழியா பார்த்து பிடி!' - விவசாயிக்கு அதிர்ச்சிக் கொடுத்த திருடர்கள்

அதேபோல், இதே கிராமத்தைச் சேர்ந்தவர், ரெங்கநாயகி. ரெங்கநாயகி மகனும் பராசக்தி மகனும் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு ஒன்றாகச் சேர்ந்து விளையாடியுள்ளனர். அப்போது இரு சிறுவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறிமாறி தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டுள்ளனர். ஒருகட்டத்தில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு, இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு தரையில் உருண்டுள்ளனர்.

மார்ச்சுவரி

சிறிதுநேரத்தில் சண்டை முடிவுக்கு வர, இரு சிறுவர்களும் அவரவர் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். இந்த நிலையில், தன் மகனை ரெங்கநாயகி மகன் தகாத வார்த்தைகளால் திட்டி, சண்டை போட்டுள்ளானே என்று பராசக்தி தன் மகனோடு சென்று, ரெங்கநாயகியிடம் நியாயம் கேட்டிருக்கிறார். அப்போது, பராசக்திக்கும் ரெங்கநாயகிக்கும் இடையில் வாய்வார்த்தை தடித்திருக்கிறது. இருவரும் மாறிமாறி தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டுள்ளனர். அதன்பிறகு, இருவருக்கும் இடையில் அது கைகலப்பாக மாற, ரெங்கநாயகி விளக்குமாற்றை எடுத்து, பராசக்தியை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். அதோடு, பராசக்தியைப் பிடித்து தரையில் தள்ளியிருக்கிறார். கீழே கிடந்த கல்லில் பராசக்தியின் தலைபட்டு, பலமான வலியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதற்குள், அருகில் இருந்தவர்கள் இவர்களின் சண்டையை விலக்கிவிட, ஒருவழியாக அவர்களின் சண்டை முடிவுக்கு வந்தது. தனது தலையில் பலமான அடி ஏற்பட்டதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வீட்டுக்கு பராசக்தி சென்று, வழக்கமான வேலைகளில் மூழ்கியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இரண்டு நாள்கள் கடந்த நிலையில், பராசக்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்த பராசக்தி, சிகிச்சைப் பலனிக்காமல் இறந்தார். அவரது தலையில் ஏற்பட்ட பலமான அடியே பராசக்தி மரணத்துக்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இந்த நிலையில், 'என் மனைவியின் மரணத்துக்கு காரணமான ரெங்கநாயகி மீது, கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என்று அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அரவக்குறிச்சி காவல் நிலையம்

ஆனால், முதலில் அரவக்குறிச்சி காவல் நிலைய போலீஸார், பராசக்தியின் மரணத்தை விபத்தாகப் பதிவு செய்ய முயன்றதாகச் சொல்லப்படுகிறது. இதனால், பராசக்தியின் உறவினர்கள் போராட்டம் நடத்த தயாரானார்கள். அதன்பிறகே, அரவக்குறிச்சி காவல் நிலைய போலீஸார், ரெங்கநாயகி மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து, சிறைக்கு அனுப்பினர். இறந்துபோன பராசக்தியின் உடல் உடற்கூறாய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மார்ச்சுவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு இடையில் ஏற்பட்ட விளையாட்டுச் சண்டையால், இரு பெண்களுக்குள் சண்டை எற்பட்டு, அதில் ஒரு பெண் இறந்த சம்பவம், அரவக்குறிச்சி பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/karur-village-woman-arrested-for-murder-charge

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக