ஓடைக்குத் தண்ணீர் குடிக்கச் சென்ற யானை, அடி சறுக்கி கீழே விழுந்ததில் உயிரிழந்ததாக ஓசூர் யானை குறித்து வனத்துறையினர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் மூன்று நபர்களை தாக்கிக் கொன்றதாக, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ஆண் காட்டு யானை ஒன்று, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடந்த மாதம் 12-ம் தேதி அதிகாலையில் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி வனத்துறையினர் விடுவித்தனர்.
சத்தியமங்கலம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தினர் இந்த யானையின் நடமாட்டத்தை ரேடியோ காலர் சிக்னல் உதவியுடன் கண்காணித்து வந்தனர்.
கடந்து சில தினங்களுக்கு முன்பு இந்த யானை முதுமலை புலிகள் காப்பக எல்லைக்குள் நுழைந்ததைக் கண்டறிந்து, கண்காணித்து வந்தனர். நல்ல ஆரோக்கியத்துடன் மேய்ச்சலில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்த்தும் உறுதி செய்தனர்.
இந்தநிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த யானையின் ரேடியோ காலர் சிக்னல் நகராமல் ஒரே இடத்தில் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் சிக்னல் வரும் பகுதிக்கு யானையைத் தேடிச்சென்றனர். இவர்கள் சந்தேகப்பட்டதைப் போலவே யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
கால்நடை மருத்துவர்கள் வனத்துறை அதிகாரிகள் இறந்த யானையை சென்று பார்த்தனர். ஓடைக்கு தண்ணீர் குடிக்கச் சென்ற யானை அடி சறுக்கி விழுந்து எழ முடியாமல் போராடி உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து தெரிவித்த முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை இயக்குநர் ஸ்ரீகாந்த், "இந்த யானை அடி சறுக்கி கீழே விழுந்ததே உயிரிப்புக்கு காரணம். யானைகளைப் பொறுத்தவரையில் பக்கவாட்டில் விழாமல் மார்புப் பகுதி தரையில்படும்படி கீழே விழுந்தால் 10 அல்லது 15 நிமிடங்களில் எழுந்திருக்க வேண்டும், இல்லையெனில் உடனடியாக உயிர் பிரியும். இந்தநிலைதான் இந்த யானைக்கும் ஏற்பட்டுள்ளது" என்றார்.
Also Read: நகராமல் நின்ற ரேடியோ காலர்; தேடிய வனத்துறை! - முதுமலையில் உயிரிழந்த ஓசூர் யானை
இதுகுறித்து காட்டுயிர் ஆர்வலர் ஹரிஹரன் நம்மிடம் பேசுகையில், " யானை இறந்து கிடந்த புகைப்படைத்தைப் பார்த்து வேதனையடைந்தேன். அளவு கடந்த அறிவும் எச்சரிக்கை உணர்வும் கொண்ட யானைகள் மிகுந்த கவனத்துடனேயே ஒவ்வோர் அடியையும் எடுத்து வைக்கும். இதுபோன்று கால்கள் விரிந்து அடிவயிற்றுப் பகுதி தரையில் யானைகள் விழுவது மிகவும் அரிதான ஒன்று. இந்த யானையைப் பொறுத்தவரை ஓசூர் தேன்கனிக்கோட்டையில் பிடிக்கப்பட்டு சத்தியமங்கலம் காட்டில் விடுவிக்கப்பட்டு முதுமலையில் உலாவியுள்ளது. அப்படியென்றால் டெரைன் எனப்படும் இந்த நிலத்தை இந்தப் புதிய யானைக்கு பயன்படுத்தி பழக்கமில்லை என்பதன் வெளிப்பாடாகவே பார்க்க முடிகிறது.
வன விலங்குகளைப் பிடித்து மாற்றிடத்தில் விடுவிக்கும் திட்டமே அவற்றுக்கு ஆபத்தானது. கரடி, சிறுத்தை, யானை போன்றவற்றை ரீலொக்கேட் செய்வதை வனத்துறை வழக்கமாகக் கொண்டுள்ளது. இதுநிரந்தர தீர்வாகாது. அதன் வாழிடத்திலேயே பாதுகாப்பை உறுதி செய்ய வழிவகை செய்ய வேண்டும். இனி ஒரு யானையும் அடிசறுக்கி உயிரிழக்கக் கூடாது என்பதே நம் வேண்டுகோள்" என்றார் வேதனையுடன்.
source https://www.vikatan.com/living-things/animals/elephant-died-create-controversy-in-niligiri
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக