Ad

வெள்ளி, 10 ஜூலை, 2020

பத்மாவதி தாயார் அருளும் திருச்சானூரில் சுந்தரராஜ சுவாமிக்கு நிகழும் அவதார உற்சவ மகிமைகள்!

பாரத தேசம் உலகுக்கு ஆன்மிக ஒளியை வழங்கும் தேசம். அந்த ஒளியைப் பரப்பும் தீபங்களாக விளங்கியவை நம் ஆலயங்கள். கலைகளின் பிறப்பிடமாகவும் கலாசாரத்தின் வாழ்விடமாகவும் செல்வத்தின் உறைவிடமாகவும் விளங்குபவை. அதனால்தான் மன்னர்கள் புதிய கோயில்களைக் கட்டியும் பழைய கோயில்களைப் பராமரித்தும் போற்றினர். ஆனால், அந்நியரின் படையெடுப்பின் காரணமாக இந்த வளங்கள் எல்லாம் திருடப்பட்டன. பல கோயில்கள் சூறையாடப்பட்டன. பல கட்டுமானங்கள் தகர்க்கப்பட்டன. இந்த இக்கட்டைச் சந்திக்காத கோயில்களே இல்லை எனலாம். திருவரங்கத்து செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அப்போது நம்பெருமாள் விக்ரகத்துக்கு எந்த ஆபத்தும் நேர்ந்துவிடக் கூடாது என்று அதைப் பல ஊர்களுக்கும் கொண்டு சென்று காப்பாற்றினர் என்று சொல்லப்படுவதுண்டு. அப்படி நம்பெருமாளை சில காலம் திருப்பதியில் ஒரு குகையில் வைத்துப் பாதுகாத்து ஆராதனையும் செய்துவந்தனர் என்றும் சொல்வார்கள்.

சுந்தரராஜ சுவாமி

பின்பு திருவரங்கம் கொண்டுவரப்பட்டு மீண்டும் திருவாராதனங்களை ஏற்றார் நம்பெருமாள். இதுபோல தமிழகத்தின் மற்றுமொரு பெருமாளும் திருச்சானூர் சென்று சிலகாலம் இருந்து திருவாராதனம் பெற்று மீண்டும் தன் சொந்த ஊர் திரும்பினார். அதைத் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருச்சானூரில் ஓர் உற்சவமாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள். அவரே திருச்சானூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசுந்தரராஜ சுவாமி.

நம் மரபில் திருப்பதி யாத்திரை என்றால் திருமலை சென்று வேங்கடவனை மட்டும் தரிசிப்பதைக் குறிப்பது அல்ல. அதற்கென்று சில விதிகளை நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். பயணத்துக்குப் புறப்படுவதிலிருந்து யாத்திரை முடிந்த பின்பு செய்ய வேண்டியவை வரை பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் உண்டு. அவற்றில் முக்கியமானது திருப்பதி தரிசனத்தோடு சேர்த்து தரிசனம் செய்ய வேண்டிய கோயில்களின் பட்டியல்.

திருப்பதி மலையடிவாரத்தை அடைந்ததும் முதலில் கீழ்த் திருப்பதியில் கோயில்கொண்டிருக்கும் கோவிந்தராஜப் பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். இவரை பெருமாளின் அண்ணன் என்னும் பொருளோடு ‘பெத்தண்ணா’ என்றும் ‘பெத்த பெருமாள்’ என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள். இவரை தரிசித்தபின் நாம் அவசியம் தரிசிக்க வேண்டியது திருச்சுகனூர் என்று அழைக்கப்படும் திருச்சானூரில் எழுந்தருளியிருக்கும் பத்மாவதி தாயார் திருக்கோயில்.

சுந்தரராஜ சுவாமி

இந்தக் கோயிலில் தாயார்தான் மூலவர். பத்மாவதி தாயார்தான் பெருமாளை வணங்கும் பக்தர்களுக்குச் செல்வச் செழிப்பை அருள்பவர் என்பது ஐதிகம். அன்னை அலர்மேல் மங்கை வழங்கும் செல்வச் செழிப்பில் ஒரு பகுதியை நாம் மலைமேல் இருக்கும் மலையப்ப சுவாமிக்குக் காணிக்கை ஆக்க வேண்டும். அன்னையிடம் ஆசிபெற்று செல்வ வளமும் பெற்றுப் பின் மலையப்ப சுவாமிக்குக் காணிக்கை செலுத்த மறந்துபோனாலோ ஏமாற்றினாலோ அந்தச் செல்வம் நிலைக்காதுபோகும் என்பது நம்பிக்கை.

திருப்பதி கோயிலையும் திருச்சானூரில் பத்மாவதி தாயார் கோயிலையும் கட்டியது தொண்டைமான். பெருமாளின் மீது மிகுந்த பக்திகொண்ட தொண்டைமான் போர்க்களத்தில் தோல்வியைத் தழுவ இருந்தபோது தன் சங்கு சக்கரத்தை வழங்கி அவனை வெற்றிபெறச் செய்தார். அந்த அளவுக்குத் திருப்பதி பெருமாள் மீது பக்தியும் ஈடுபாடும் கொண்டவன் தொண்டைமான். திருச்சானூரில் தற்போது இருக்கும் கோயிலின் மூலவர் உட்பட சில சந்நிதிகளோடு, சுற்று மண்டபங்கள், யாக சாலை, கோபுரங்கள், தானியக் களஞ்சியம், கொடியேற்று மண்டபம் ஆகியன தொண்டைமான் கட்டியவையே. இத்தகைய பழைமையும் பெருமையும் கொண்ட இந்தக் கோயிலில்தான் சுந்தரராஜப் பெருமாளுக்குத் தனியாகக் கோயிலும் உள்ளது.

சுந்தரராஜ சுவாமி

மதுரையில் இருக்கும் பெருமாள் கோயில்களில் மிகவும் முக்கியமானது கூடல் அழகிய பெருமாள் கோயில். இங்கு மூலவர் அழகிய பெருமாள். உற்சவர் சுந்தரராஜ பெருமாள். அந்நியர்களின் படையெடுப்பால் கோயிலில் உள்ள செல்வம் கொள்ளை போனாலும் சுவாமியின் விக்ரகங்கள் போகக் கூடாது என்று விரும்பிய பக்தர்கள் அவற்றைப் பல்வேறு இடங்களுக்கு அனுப்பிப் பாதுகாத்தது பெரும்பாலும் அனைத்துக் கோயில் வரலாறுகளிலும் காணப்படும் செய்தி. காஞ்சி வரதராஜப் பெருமாள் சிலகாலம் உடையாளூரில் பாதுகாக்கப்பட்டார் என்பது வரலாறு. அதேபோன்று அழகிய பெருமாள் கோயிலையும் அந்நியர்கள் சிறைபிடிப்பர் என்னும் அச்சம் நிலவியபோது கோயிலில் இருந்த முக்கியமான செல்வமான சுந்தரராஜப் பெருமாள் விக்ரகத்தைப் பாதுகாக்கும் நோக்கோடு அதைத் திருச்சானூர் அனுப்பி வைத்தானர்.

திருச்சானூரில் சிலகாலம் இருந்து பிறகு, நிலைமை சீரானதும் சுவாமி மதுரைக்குக் கொண்டுவரப்பட்டார் என்கின்றனர் பக்தர்கள். சுவாமி வந்து தங்கியிருந்த அந்தக் காலத்தை ஆந்திர மக்கள் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடினர். சுவாமி திருச்சானூர் சென்றது ஓர் ஆனி மாதம் உத்திராட நட்சத்திர தினம். எனவே, அந்தக் காலத்தைக் கணக்கில் கொண்டு அங்கு சுவாமிக்கு உற்சவம் நடைபெற்றது. 1902-ம் ஆண்டு `மகந்த்’ எனப்படும் ஆசார்யர்கள் சுந்தரராஜப் பெருமாளுக்கு திருச்சானூரில் ஒரு கோயில் எழுப்ப விரும்பினர். பத்மாவதி தாயார் கோயிலின் உபகோயிலாக அந்தக் கோயில் அமைக்கப்பட்டது. அதுவும் இதே ஆனி மாதம் உத்திராட நட்சத்திர தினத்தில் அமைந்தது.

சுந்தரராஜ சுவாமி

இந்த நாளை அடிப்படையாகக் கொண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வோர் ஆண்டும் சுந்தரராஜ சுவாமியின் அவதார உற்சவத்தை மிகவும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறது. இந்த ஆண்டு கடந்த 9-ம் தேதி முதல் நடைபெறும் இந்த உற்சவம் இன்று நிறைவு பெறுகிறது.

உற்சவம் நடைபெறும் இந்த மூன்று நாள்களும் பெருமாளுக்கு வாசனை திரவியங்கள் நிறைந்த தீர்த்தத்தால் செய்யப்படும் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெறும். மாலை வேளையில் ஊஞ்சல் சேவையும் நிகழ்த்தப்படும். கிருஷ்ணசுவாமி முக மண்டபத்தில் நடைபெறும் இந்த சேவைகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். தற்போது கொரோனா தொற்று காரணமாகப் பக்தர்கள் யாரும் இந்த உற்சவத்தைக் காண அனுமதிக்கப்பட வில்லை. ஆனாலும், ஆகம விதிப்படி மிகவும் சிறப்பாக இந்த உற்சவம் நடந்துவருகிறது.

இன்று பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை. இந்த நாளில் திருச்சானூரில் எழுந்தருளியிருக்கும் நம் சுந்தரராஜப் பெருமாளை மனதில் நினைத்து வழிபட்டு இப்போதிருக்கும் சூழல் விரைவில் மாறி அனைத்து மக்களும் இறை தரிசனம் பெறும்வழி வாய்க்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.


source https://www.vikatan.com/spiritual/temples/why-sundararaja-swamy-avathara-utsav-celebrated

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக