கொரோனா தொற்று அதிகமாகி வரும் மதுரையில், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், அவர்களுக்காகப் பணியாற்றுபவர்களுக்கும் மூன்று வேளை அறுசுவை உணவு வழங்கும் பணியில் நேரடியாக ஈடுபட்டு வருகிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
கொரோனா நோயாளிகளுக்கு மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தல் முகாம்களிலும் வசதிகள் மிகக் குறைவாக உள்ளன. சரியான உணவு நேரத்துக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை அங்குள்ளவர்களும் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வைத்து வரும் நிலையில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தன்னுடைய அறக்கட்டளை மூலம் மூன்று வேளை உணவு வழங்க ஏற்பாடு செய்தது மட்டுமல்லாமல், சமையல் செய்யும் இடத்தில் அவரே இருந்து உணவைத் தயார் செய்து வருகிறார்.
இதற்காக மதுரையில் `அம்மா கிச்சன்' என்ற பெயரில் உணவுக் கூடத்தை உருவாக்கியுள்ளவர். தினமும் காலையும் மாலையும் அங்கு வந்துவிடுகிறார். சமையல் செய்பவர்கள் சுகாதாரமான முறையில் இருக்கிறார்களா என்று சோதனை செய்கிறார். அதன் பின்பு அவரும் சேர்ந்து சமைக்கிறார். சமைத்த உணவுகளை சாப்பிட்டுப் பார்க்கிறார். பிறகு, மூன்று வேளையும் கொரோனா நோயாளிகளுக்கும் பணியாளர்களுக்கும் அங்கிருந்து உணவு அனுப்பப்படுகிறது.
இதுபற்றி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், ''முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஜெயலலிதா பேரவை, அம்மா சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உட்பட பலருக்கும் மூன்று வேளையும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி புரதச்சத்து நிறைந்த உணவை சுகாதாரமான முறையில் வழங்குகிறோம்.
ஏதோ உணவு கொடுக்கிறோம் என்று பேருக்கு வழங்காமல், காலையில் கேசரி, பொங்கல் அல்லது கிச்சடி, ஊத்தாப்பம், இட்லி, வடை, முட்டை, மிளகுப்பால், இரண்டு வகை சட்னி, சாம்பாரும்,
மதியம் சோறு, சாம்பார், புளிக்குழம்பு, ரசம்,மோர், சப்பாத்தி, பருப்பு, இரண்டு வகை காய்கறிகள், முட்டை, அப்பளம், ஊறுகாய் வழங்குகிறோம். இரவு இட்லி, தோசை, கிச்சடி, சப்பாத்தி, இரண்டு வகை சட்னி, சாம்பார், குருமா மற்றும் மிளகுப் பால் ஆகியவை வழங்குகிறோம். இதுமட்டுமல்லாமல் காலை 11 மணிக்கு சூப் மற்றும் பாசிப்பயறு, மாலை 4 மணிக்கு இஞ்சி டீ, சுண்டல் வழங்குகிறோம்.
Also Read: எடப்பாடி `ரகசிய' சந்திப்பு; தங்கமணிக்கு கொரோனா வந்தது எப்படி? - டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்
கொரோனாவிலிருந்து மீள மருந்து மாத்திரைகள் சிகிச்சை ஒரு பக்கம் இருந்தாலும், நல்ல சத்தான உணவு அவசியம். அதை நாங்கள் கொடுத்து வருகிறோம். மதுரையில் கொரோனா பரவலைத் தடுக்க முதலமைச்சர் அக்கறையெடுத்து கண்காணித்து வருகிறார்.
எதிர்க்கட்சியினர் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் விஷமப் பிரசாரத்தை செய்து வருகின்றனர். நாங்களோ முதலமைச்சரின் அறிவுரைப்படி மக்களுக்கு தைரியம் அளிக்கும் வகையிலும், நம்பிக்கையூட்டும் வகையிலும் செயல்பட்டு வருகிறோம். தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையால் மதுரை, கொரோனா இல்லாத மாவட்டமாக விரைவில் மாறும்'' என்றார்.
ஏற்கெனவே மூன்று துறைகளை நிர்வகித்து வரும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை இப்போது `அறுசுவை அமைச்சர்' என்று ஆதரவாளர்கள் அழைக்கத் தொடங்கியுள்ளனர்.
source https://www.vikatan.com/news/politics/minister-udhayakumar-preparing-food-for-corona-patients-in-madurai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக