Ad

வெள்ளி, 10 ஜூலை, 2020

சாத்தான்களின் குளம்! - சிறுகதை #MyVikatan

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

யானையின் பலம் தும்பிக்கையில் இருக்கிறது!

மனிதனின் பலம் நம்பிக்கையில் இருக்கிறது!

அந்த நம்பிக்கை துளியும் இல்லாமல் அவள் நின்றிருந்தாள். தன்னை இந்த நிலைக்குத் தன்னை தள்ளியவன் வந்தால் இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டும் என வைராக்கியத்தோடு நின்றிருந்தாள். அவளுக்கு இப்போது ஆத்மபலம்! சாதுவாக இருக்கும்போது ஆன்மிக பலம்!

அன்று இதே இடத்தில் ஒற்றை ஆளாக நின்று போராடினாள். தாசில்தார் வந்தார்! காக்கிகள் வந்தார்கள்! பத்திரிகையாளர்கள் வந்தார்கள். பல கோணங்களில் போட்டோ எடுத்தார்கள். அடுத்த நாள் உள்ளூர் செய்தித்தாள்களில், “மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்!” என்ற பரபரப்பு செய்தி கூட வந்தது. ஓரிரு நாள்கள் வாட்ஸப் குரூப்புகளில் சுடச்சுடப் பதிவுகள் பரிமாறப்பட்டன.

ஆனால், எல்லாம் கண் துடைப்பு! மெதுவாக 90 டிகிரியில் திருப்பினாள்.

Representational Image

”அபாயம்!” என்ற வார்த்தைக்கு மேலே இரண்டு கை எலும்புகளுக்குள் சிக்கிய மண்டையோடு ஒன்று சிரிக்கிறது! அது பொறுக்காமல் அந்த சிவப்பு அறிவிப்புப் பலகை மின்வேலியிலிருந்து குதித்து அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்ததும் அவளுக்கு ஆத்திரமாக வந்தது.

”எல்லை மீறிப் போயிருக்கக் கூடாது” என நினைக்கும்போது, 10 நாள்கள் கடந்து போயிருந்தன. ஒவ்வொரு முறையும் இந்த இடத்தை கடக்கும்போது மெளனித்து நிற்பது வாடிக்கையாகி விட்டது. அவளுடைய தினசரி நடராஜா சர்வீஸில் எந்த இடத்திலும் நிற்பதில்லை அந்த இடத்தைத் தவிர!

அவள் நின்றுக்கொண்டிருக்கும் இடம் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையின் 1- வது கொண்டை ஊசி வளைவு! அங்கிருந்து நேர்பார்வையில் அவளின் பூர்வீகமான மேட்டுப்பாளையம் தெரியும்.

”மேல்நோக்கி வரும் வாகனங்களுக்கு வழி விடவும்!” என்ற அறிவிப்புப் பலகை வளைவில் இருந்தது. சற்றுத்தள்ளி ”இடதுபுறமே செல்க!” என்ற வாசகமும் இருந்தது. இப்போது நடப்பதை நிறுத்தினாள். அவளுடைய சினத்தை அடையாள கண்டுகொண்ட ஓரிரு குரங்குகள் அருகில் கிடந்த காரட் துண்டுகளை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தன. சில குட்டி குரங்குகள் சிப்ஸ் பாக்கெட்டுகளை எடுத்து உதறியதில் உதிரிக்காற்று வெளியேறிக்கொண்டிருந்தது.

coonoor

குட்டிகளுக்கு பழம் பறிக்கிற பழக்கமே காணாமப் போச்சு! குரங்களுக்கு இப்படி எதையாவது தந்து ரோட்டுக்கு வரவழைச்சு சாகடிக்கிறாங்க! வண்டியில அடிப்பட்டு போகுதுங். பாதி குரங்குகள் பிச்சைக்காரர்களாக மாறியிருச்சு! குட்டிகளைப் பார்க்காம தலைசொறிச்சுட்டு நிக்காட்டி என்ன?

அம்மா குரங்கின் மீது கோபம் வந்தது.

மரமொன்றில் சிங்கவால் குரங்கு கிளைமீது அமர்ந்து ஆடிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்தவுடன் போன வாரம் நடந்த அப்பா, பிள்ளை உரையாடல் ஞாபகம் வந்தது.

10 நாள்களுக்கு முன் குடும்பமாக அதே பகுதியில் நடந்துகொண்டிருந்தார்கள்.

அப்பா… சிங்கவால் குரங்கு முறைக்குது.

அது அப்படிதான். காட்டுபலாவை பறிக்க வந்துட்டோமுன்னு நினைச்சுருக்கும்.

ஏன் காட்டுப்பலா, அவங்க சொத்தா?

ஆமாம், நம்ம இனம் எப்படி தண்ணி இருக்கிற இடத்தில நாகரிகம் ஆரம்பிச்சமோ அப்படிதான் அதுகளும், காட்டுப்பலா இருக்கிற இடத்திலதான் சிங்கவால் குரங்கும் இருக்கும்.

சிங்கத்தோடு வால் இருக்குமா?

Representational Image

இல்லைடா, சிங்கத்தோட வால் இல்லை, அப்படிப் பேரு.

வரும்போது பார்த்த சிங்கத்திற்கு கழுத்தில் வால் இருந்தது.

ஹா ஹா ஹா! அது வால் அல்ல. பிடரி.

அது எதுக்குப்பா?

அதுவா, ஆண் சிங்கத்திற்குப் பிடரி மயிர், ஆண் மானுக்கு கொம்பு, ஆண் புலிக்கு வரிகள், மனுசனுக்கு மீசை, ஆண் யானைக்கு தந்தம். இப்படி ஆம்பிள, பொம்பிள வித்தியாசம் தெரியதான்!

சந்தடிசாக்கில் மகனுக்குத் தெரியாமல் அவளை ரொமான்டிக் லுக் விட்டு கண் சிமிட்டினான். சுய நினைவு வந்து கணவனைத் தேடினாள். சற்றுத்தொலைவில் புதிய மண் மேட்டின் மீது வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகையைப் பிடிங்கிக்கொண்டிருந்தான்.

ஒரு நாய் அவளை நோக்கி முன்னும் பின்னும் ஓடியவாறு குரைத்தது! ”மொச புடிக்கிற நாயை மூஞ்சியைப்பார்த்தா தெரியாதா?” என்ற எண்ணோட்டத்தில் திரும்பி ஒரு பார்வைப் பார்த்தாள். தூரப்போய் நின்று மோப்பம் பிடித்தது.

coonoor

ஏற்கெனவே, அந்த இடத்தில் சில டூரிஸ்ட்டுகள் நின்று போட்டோ எடுத்துக்கொண்டிருந்தவர்கள், நகர்ந்து போயிருந்தார்கள்.

வேற இடமே கிடைக்கலையா, நம்ம இடத்தை வந்து ஆக்கிரமிப்பு செஞ்சுட்டாங்களா?

அந்த நெடுஞ்சாலையோரப்பகுதி எல்லோருக்கும் பொதுவானது தான் ஆனாலும் அவளுக்கு எரிச்சல் வந்தது. அவளுக்கு இப்படி எரிச்சல் வருவது முதல்முறையல்ல! இங்கிருந்து பார்த்தால் சிறுவயதில் ஓடியாடிய இடமும், நெகா பழம் பறித்த வனச்சோலையும் தெரிகின்றன. தனக்கென ஒரு இடத்தைப்பிடித்துக்கொண்டு விளையாடியது ஞாபகம் வந்தது! அந்த அதிர்ஷ்டம் தனது பிள்ளைக்கு வரவில்லையே என்ற ஆதங்கம் அவளின் பெருமூச்சில் தெரிந்தது.

எப்போதும் முகத்தில் நிலவும் சாந்தம் காணாமல் போயிருந்தது. தேன் நிறத்தில் மின்னும் கண்களில் இப்போது கோபம் கொப்பளித்திருந்தது. ஆக மொத்தமாக, அவளின் சாமுத்திரிகா லட்சணம் முழுமையாகக் கலைந்து போயிருந்தது.

பாதையில் பல ஆண்டுகளாக விழுந்து மக்கிப்போன இலைகளும் சருகுகளும் மெத்தைப்போல இருந்தன. ’சரசர’ என்றுக்கூட ஒலியெழுப்பாத மென்மையான பாதங்கள் மகனுடையது!

அன்று அப்பா அம்மாவின் பேச்சிற்கு காது கொடுக்காமல் தாறுமாறாக நடக்கும் மகனின் மீது ஒரு கண் வைத்துக்கொண் தான் இருந்தார்கள். சிறுத்தை நடமாட்டம் இருந்தது. அதற்கு பயந்து தனியாக மகனை வெளியே அனுப்பாமல் இருந்தாள். காட்டுப்பகுதி என்பதால் கவனமாகப் போய்க்கொண்டிருந்தது நடை.

coonoor

பறவைகள் கூட்டுக்குத் திரும்பும் நேரம். கீச் சத்தம் இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்தன. ஓரிரு வாகனங்கள் கடந்து போயின.

அம்மா பசிக்குது.

இருடா… இன்னும் கொஞ்ச தூரம் போனா பெரிய மரம் வரும்.

பையன் பசிக்குதுனு சொல்றான்.

சரி இங்கேயே நில்லு.

எட்டிய தூரத்தில் இருந்த வாழை மரத்தில் இருந்து வாழைப்பழம் பறித்துக்கொடுத்தான். அவன் காட்டுப்பலா கிடைக்கும் என நினைத்தான்.

தண்ணீ…

பக்கத்துத் தோட்டத்திற்குள் குளம் ஒன்றிலிருந்து கால்வாய்க்குள் சலசலென நீர்ப் பாயும் சத்தம் கேட்டது.

நீங்க ரெண்டு பேரும் அடங்கமாட்டீங்களா? கொஞ்ச தூரம் போனதும் ஆறு வந்துடும். எதுக்கு தோட்டத்திற்குள்ள போகணும்.

விதி விளையாடும்போது கேள்விகள் விதிவிலக்காகிவிடும்.

இருள் சூழ ஆரம்பித்தது.

அட தண்ணி தானே? நம்ம என்ன வாழை மரத்தையா சாய்க்கப்போறோம்.

சரி குடிச்சுட்டு வாங்க, நான் தள்ளி நிற்கிறேன்

அப்பாவும் பிள்ளையும் தோட்டத்தின் ஓரமாகவே தோட்டத்திற்குள் செல்ல வழி தேடி நடந்தார்கள். லாரி புகும் அளவிற்கு அகலமான கேட்! சங்கிலிப்போட்டு பூட்டப்பட்டிருந்தது.

விக்கல் எடுத்தது.

Representational Image

நான் வேலியைத் தாண்டுறேன். அப்புறமா, நீ குதி.

சரிப்பா…

இரு….இரு… முள் கம்பி குத்தும்.

என்ன ஆகும்?

என்ன ஆகுமா? கீறி ரத்தம் வரும். புண் சீக்கிரமா ஆறாது.

அப்பா, நீங்க மட்டும் தொட்டுப்பார்க்கிறீங்க…

லூசாடா நீ. பேசாம இரு. அப்பா கட்டை எடுத்துட்டு வரேன்.

கட்டையைத்தேடும் அந்தச் சமயத்தில், அப்பா வருவதற்குள் காட்டுப்பலாவைப் பறித்துவிடலாம் எனத் தோட்டத்திற்குள் முன்னேற முயன்றான்.

”அம்மா!” என்ற அலறல்!

கொஞ்ச தூரத்தில் நின்றிருந்த அவள் ஓடி வந்து பார்க்கும்போது

பிள்ளையின் முகம் வெளுத்தும், கண் சிவந்தும், பாவை விரிந்தும், தோல் குளிர்ந்தும், உணர்வற்று போயிருந்தான்.

கணவன் செய்வதறியாது அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தான்.

தட்டி எழுப்பினாள்!

கேட்பதற்கு யாருமில்லை என்ற எண்ணமா?

தைரியமிருந்தா வாங்கடா?

எங்க வழியில எதுக்கு குறுக்கிடணும்?

நாங்க பரம்பரையா இந்த வழியா தான் நடப்போம்!

coonoor

இதெல்லாம் எங்க பாட்டன் காலத்துச் சொத்து. இன்னிக்கு சப்போர்ட்டுக்கு ஆளில்லைன்னு சொல்லி ஆடறீங்களா?

இந்த வழியே போற எந்த லாரி, பஸ் எதையும் விட மாட்டேன். நீதி கிடக்கணும்.

”யார் வந்தாலும் உடலை எடுக்க விட மாட்டேன்!”

சாத்தன்குளத்தில் ரெண்டு பேர் அநியாயமா செத்தாங்களே!, இதையும் பேச வைப்பேன்!

சட்டம் எல்லோருக்கும் பொது தானே?

என்னன்னவோ சொல்லி அழுது புரண்டாள்!

வாழ்க்கை ஓர் அழகிய பொய்! மரணம் தீர்க்கமான உண்மை என்பதை நம்பாமல் மகனை விட்டு நகர மறுத்தாள்.

இரவோடுஇரவாக போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது. அது வீடியோ பதிவும் செய்யப்பட்டது.

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் என்ன சொல்லியிருக்க போகிறார்களோ? வழக்கம் போல இயற்கை மரணம் என பைலை முடித்து விடுவார்கள். வீடுகளில் பயன்படும் 240 வோல்ட் மின் அழுத்தம் அல்ல, 1000 வோல்ட்க்கு மேல் மின்னழுத்தம் செலுத்தும் போது மூச்சுத்தடை நிச்சயம் தானே?

அவ்வளவு மின்னழுத்தம் பாய்ச்ச மிகுந்த நெஞ்சழுத்தம் தேவை! தோட்டத்துக்காரன் மனுசா அவன்?

மின்சாரம் தாக்கிய பகுதியை நுழைவு வாயில் என்றும் வெளிப்படும் பகுதியை வெளிவாயில் என்றும் சொல்லப்படும். கம்பியைத்தொட்ட இடத்தில் தசைத்துணுக்குகள் சிதறிக்கிடந்தன.

”அம்மா. ” என்ற மிகப்பெரிய அலறலோடு பிள்ளை சுருண்டு விழுந்த இடத்தில் இருந்து நகர்ந்து நின்று கணவனும் மனைவியும் தலையில் முட்டிக்கொண்டு அழுதார்கள்.

Elephants

சிறிது நேரத்தில் கூட்டம் சேர்ந்தது. புல்டோசரும் லாரியும் இல்லாத காலத்தில் பாரம் தூக்கிய கைக்கு கடைசியாக மகனைத் தூக்கி அழ முடியாத கையறு நிலை! அருகில் “இது விலங்குகள் நடமாடும் பகுதி!” என்ற அறிவிப்புப்பலகை மிதிப்பட்டு கிடந்தது. நெடுநேரம், கூக்குரல் ஓயவே இல்லை.

இப்படி அநியாயமா புள்ளையை பறிக்கொடுத்துட்டு நிக்கிறயே, என் ராசா.

”நான் மொதலில தொட்டு பார்த்தேன். லைட்டா ஷாக் அடிச்சுது. இருடா, நான் போய் காய்ச்ச கட்டை எடுத்துட்டு வரேன்னு சொல்லிட்டு திரும்பி போறதுக்குள்ள, படுபாவி தொட்டுட்டானே! என் வாழ்க்கை நாசமா போச்சே!

22 மாசம் சுமந்த வயிறு பற்றி எரியுதே!

மகனே! ஏண்டா மின்வேலி மேல தும்பிக்கையை வைச்ச?

*

-சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/short-story-about-wild-life

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக