Ad

திங்கள், 20 ஜூலை, 2020

கரூர்:`நாலு மாசமா பொழப்பு காத்தாடுது!' - கலங்கும் குளித்தலை டெய்லர்

``பள்ளிகூடம் திறந்தாதான், மாணவர்கள் என்கிட்ட கிழிந்த பேக்குகளை தைக்க வருவாங்க. வருமானம் கிடைக்கும். ஆனா, அதுக்கு இப்போ வழியில்லை. கொரோனா வந்து எங்கப் பொழப்பை காத்தாட வச்சுட்டு. கடன் வாங்கி குடும்பத்த்தைக் காப்பாத்திக்கிட்டு இருக்கிறேன் சார்" என்று சோகம் இழையோட பேசுகிறார் மாதவன்.

பேக் தைக்கும் மாதவன்

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள காவல் நிலையத்தின் அருகில் சாலையோரமாக சிறிய தையல் மெஷினைப் போட்டு, பழைய பேக்குகளைத் தைக்கும் தொழில் செய்துவருகிறார்.

Also Read: கரூர்: `பலவேளைகள்ல டீதான் மதியசாப்பாடு!’ - கலங்கும் கடலை விற்கும் பெரியவர்

கடந்த 20 வருடமாக இந்தத் தொழிலை செய்துவருகிறார். மனைவி, ஒரு பெண், ஒரு ஆண் குழந்தைகள் என்று அளவான குடும்பம்தான் மாதவனுக்கு. குளித்தலை நாடார் தெருவில் உள்ள புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டு, குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

பேக் தைக்கும் மாதவன்

எளிய வருமானத்தில் வாழ்க்கையை இழுத்துப் பிடித்து வாழ்ந்து வந்த மாதவனின் இப்போதையை நிலைமை கவலைக்கிடமாகியிருக்கிறது. கொரோனா, தனது ஆக்டோபஸ் கரங்களால் சிதைத்துப் போட்ட எண்ணற்றோரின் வாழ்க்கைப் போல, மாதவனின் வாழ்க்கையும் நிர்மூலமாகியிருக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக வருமானத்துக்கு அறவே வழியில்லாமல் விக்கித்து நிற்கிறார்.

இன்றாவது தன்னிடம் யாராவது பேக்குகள் தைக்க வருவார்களா என அந்த வழியாக போவோர் வருவோரை வைத்த கண் மாறாமல் பார்க்கிறார். அவர்கள் நேராக செல்ல, ஏமாற்றம் மொத்தமாக அசுர உருவெடுத்து, அவரது முகத்தில் வந்து உட்கார்கிறது. அந்த சோகத்தை மென்று விழுங்கிய மாதவனிடம் பேசினோம்.

``எனக்கு இப்போ வயசு 37 சார். நான் இந்தத் தொழிலை கடந்த 20 வருஷமா செஞ்சுக்கிட்டு இருக்கிறேன். இந்த பழைய மெஷின், விரிசல் விழுந்த ஓட்டுவீட்டைத் தவிர, வேறு சொத்தில்லை. இந்தப் பகுதியில் தனியார், அரசு பள்ளிகள் நிறைய இருக்கு. மாணவர்கள், தங்கள் பழைய பேக்குகளை என்கிட்ட தைக்க வருவாங்க. சொற்பம்னாலும், நிரந்தரமா வருமானம் கிடைக்கும். அதனால், என்னை இந்தத் தொழில் ராஜாவாக்கி அழகுபார்க்கவில்லை என்றாலும், சிப்பாயாகவாச்சும் வச்சுருந்துச்சு.

மாதவன்

இந்தக் கொரோனா வந்து, அதுக்கும் வழியில்லாம பண்ணிட்டு. பலநாள் பட்டினி, ஏற்கெனவே வாங்கிய கடன்களை அடைக்க புதிய கடன்னு வாழ்க்கை இருண்ட பக்கமாக நகர்ந்துகிட்டு இருக்கு. முன்னாடி தினமும் அதிகப்பட்சம் ரூ.400 வருமானம் கிடைக்கும். ரேஷன் அரிசி கிடைப்பதால், அதை வச்சு பழுதில்லாமல் குடும்பத்தை நகர்த்திக்கிட்டு வந்தேன். ஆனா, இந்த கொரோனா வந்து, என்னோட வருமானத்துக்கான அத்தனை வழிகளையும் அடைத்துவிட்டது. வேறு வேலைக்குப் போகலாம்னாலும், வேற தொழில்களின் நிலைமை இதைவிட மோசமா இருக்கு. சாக்கடை அள்ளக்கூட தயாராக இருக்கிறேன். ஆனால், எனக்கு வேலை தரத்தான் யாருமில்லை.

Also Read: கரூர்: `பலவேளைகள்ல டீதான் மதியசாப்பாடு!’ - கலங்கும் கடலை விற்கும் பெரியவர்

ஏற்கெனவே குடும்ப கஷ்டத்துக்காக, தினமும் கட்டுறமாதிரி இரண்டு இடங்கள்ல ஃபைனான்ஸ் வாங்கியிருந்தேன். தொழில் முடங்கியதால், அதைக் கட்ட முடியலை. ஆனால், பணம் கொடுத்தவங்க பணம் கேட்டு நெருக்கினாங்க. அதனால், ரெண்டையும் கட்டிமுடிக்க கந்துவட்டிக்கு 60,000 வரை கடன் வாங்கியிருக்கிறேன். அதுக்கு மூணு மாசமா வட்டி கட்ட முடியலை. அவங்க வட்டியைக் கேட்டு நெருக்குறாங்க. என் கஷ்டத்தை வெளியில் சொல்லவும் முடியலை, மெல்லவும் முடியலை. வீட்டுக்கு காய்கறி, மளிகை சாமான்கள் வாங்கி, இரண்டு மாசம் ஆயிட்டு. ரேஷன் அரிசியை பொங்கி வெறும் தண்ணீர் ஊத்தி, ஊறுகாயை தொட்டுக்கிட்டு சாப்பிடுகிறோம்.

பேக் தைக்கும் மாதவன்

இன்னும் ஒருவருஷத்துக்கு பள்ளிகூடங்கள் திறக்கப்பட மாட்டாதுனு சொல்லி பயமுறுத்துறாங்க. அப்போ என் பொழப்பு அவ்வளவுதானா? வீட்டுல உட்கார்ந்தா இதை நினைச்சு விருக் விருக்னு இருக்குதேனு, ஒருத்தரும் பேக் தைக்க வரலன்னாலும், கடையில் வந்து உகார்ந்துக்கிறேன். பேசாம கொரோனா பாதிச்சு, என்னைக் கொண்டு போனாலும் பரயாயில்லைனு தோணுது சார். என் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய கொரோனா, என் கண்ணுக்கு முன்னால கருப்புத்திரையை விரிச்சுருக்கு. இருப்போமா பறப்போமானு மூலிவாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு இருக்கிறேன் சார்" என்று முடிக்கிறார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/kulithalai-tailor-shares-in-lock-down-story

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக