Ad

ஞாயிறு, 19 ஜூலை, 2020

தேர்தல் ஆணைய சட்டத்திருத்தங்கள்: `காலத்தின் கட்டாயம்' பா.ஜ.க - `சந்தேகத்துக்குரியது' தி.மு.க

`தேர்தல் நடத்தும் (சட்டத் திருத்தம்) விதிமுறை 2019’ மற்றும் `தேர்தல் நடத்தும் (சட்டத் திருத்தம்) விதிமுறை 2020’ ஆகிய இரண்டு புதிய திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது, இந்தியத் தேர்தல் ஆணையம். இந்தச் சட்டத் திருத்தத்தின்படி, 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் மூலம் வாக்கு செலுத்தலாம் என்பது 65 வயதாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, கொரோனா பாசிட்டிவ் சர்டிஃபிகேட் வைத்திருப்பவர்கள், கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்கிற சந்தேகத்துக்கு உரியவர்களும் தபால் வாக்கு அளிக்கலாம் என்றும் புதிய சட்டத்தில் சொல்லப்பட்டிருந்தது. இந்தச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மு.க. ஸ்டாலின்

கடந்த மாத இறுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர், சீதாராம் யெச்சூரி இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ``பீகார் தேர்தலை முன்னிட்டு, அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல் இந்தத் திருத்தம் அவசர அவசரமாகச் செய்யப்பட்டுள்ளது'' என்றும் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு, ``இது குறிப்பிட்ட சில இடங்களுக்காக மட்டும் எடுக்கப்பட்ட முடிவு. அதனால் தேசிய அளவில் கட்சிகளைக்கூட்டி கூட்டம் நடத்த வேண்டிய தேவையில்லை'' என பதிலளித்திருந்தார் துணைத் தேர்தல் ஆணையர் சந்திரபூசன் குமார்.

சீதாராம் யெச்சூரி மட்டுமல்ல, காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்தச் சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியிருந்தன. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுத, தமிழகத்தில் இந்த விவகாரம் சூடுபிடித்தது. அவரைத் தொடர்ந்து, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், கடந்த வியாழக்கிழமை, 65 வயதுக்குக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்கிற தனது முடிவை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்.

இது ஒருபுறமிருக்க, தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை முன்னாள் தேர்தல் ஆணையர்கள் வரவேற்கின்றனர். ``புதிய சட்டத்தைக் கட்டாயம் என்று சொல்லியிருந்தால் அது தவறு. தேவைப்படுகிறவர்கள் அதுவும் `ஆப்ஷனல்'தான் என்று சொல்வதால் அதில் எந்தத் தவறும் இல்லை" எனச் சொல்லியிருந்தார் முன்னாள் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி.

அதேபோல, ``65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமல்ல, அனைவருக்கும் தபால் மூலம் வாக்களிக்கும் உரிமையை ஏற்படுத்தித் தர வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்திருந்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். தி.மு.க கூட்டணியிலேயே இப்படி மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டது, இது குறித்த புதிய விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. தவிர, கொரோனா நெருக்கடியான காலகட்டத்தில், தேர்தலில் இது போன்ற வழிமுறைகள் தேவைதானே என்கிற குரல்களும் கூடவே ஒலிக்கின்றன. எனவே இந்த விவகாரம் குறித்து, தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் தேர்தல் ஆணையரின் கருத்துக்களைக் கேட்டறிந்தோம்.

கிருஷ்ண மூர்த்தி

முதலில், முன்னாள் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம்;

``கொரோனா காலகட்டத்தில் தென் கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறது. புதிய தொழில்நுட்பங்கள், வழிமுறைகளைப் பயன்படுத்தி கண்டிப்பாக இங்கேயும் தேர்தல் நடத்தப்பட்ட வேண்டும். இவ்வளவு ஆண்டுகளில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது கட்டாயம். அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை முறையாகப் பின்பற்றித்தான் ஆக வேண்டும். தவறுகள் எல்லா முறைகளிலும் நடக்கத்தான் செய்கிறது. அதைக் காரணம்காட்டி, புதிய தொழில்நுட்பங்களை, வழிமுறைகளை மறுக்கக் கூடாது. அதேசமயம், பாதுக்காப்பான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதே என் கருத்து'' என்கிறார் அவர்.

அனைவருக்கும் தபாலில் வாக்களிக்கும் உரிமையை அளிக்க வேண்டும் எனக் குரலெழுப்பிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக, அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசிடம் பேசினோம்.

``தபால் வாக்களிக்க கொரோனாவைக் காரணம் காட்டி 65 வயதாகக் குறைத்தார்கள். ஆனால், வயது வரம்பில்லாமல் கொரோனா தொற்று அனைவருக்கும்தான் பரவி வருகிறது. உயிரிழப்பவர்களிலும் அனைத்து வயதினரும்தான் இருக்கிறார்கள். அதனால், அனைத்து வயதினருக்குமே அந்த வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கோரிக்கையை எங்கள் தலைவர் முன்வைத்தார். அனைத்து முறைகளிலும்தான் முறைகேடுகள் நடக்கத்தான் செய்கின்றன. அதை முறைப்படுத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது. அனைத்துக்கட்சிகளுடனும் பேசி அந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை'' என்கிறார் வன்னி அரசு.

வன்னி அரசு

அடுத்ததாக, இந்த விவகாரத்தை முதலில் எழுப்பிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, அருணனிடம் பேசினோம்.

``கொரோனாவைக் காரணம் காட்டி தேர்தலை முடக்குவது என்பது ஜனநாயகத்தை முடக்குவது போலானது. அதேவேளை, இப்போதைய சூழலில் வழக்கமான தேர்தல் முறையில் மாற்றங்கள் வேண்டும் என்பது அவசியம்தான். ஆனால், தேர்தல் ஆணையம் தற்போது செய்தது ஓர் அடிப்படையான மாற்றம். தபாலில் வாக்குச் செலுத்தும்போது, தனிநபர் சர்பார்ப்புக்கு வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும்போது அனைத்துக்கட்சியைக் கூட்டி முடிவு செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. அதுவே ஜனநாயக விரோதம்தான். இனிவரும் காலங்களில் தேர்தல் குறித்து என்ன மாற்றங்கள் செய்தாலும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கலந்துரையாட வேண்டும். வாக்களிப்பவர் சரியான நபர்தானா என்கிற தனிநபர் சர்பார்ப்பு முறையாக நடந்தால், ரகசியம் காக்கப்பட்டால் அனைவருக்குமே தபாலில் வாய்ப்பளிக்கும் முறையைக் கொண்டு வரலாம் என்பதே எங்கள் கருத்து'' என்கிறார் பேராசிரியர் அருணன்.

இந்த நடைமுறையை முழுமையாக எதிர்க்கும் தி.மு.க-வின் சார்பில், அந்தக் கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர், வழக்கறிஞர் பரந்தாமனிடம் பேசினோம்.

``கொரோனா நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டாலும், முறையாக நடைமுறைப்படுத்தப்படுமா என்பது சந்தேகம்தான். யார் தபால் வாக்குகளைச் சேகரிப்பது, கண்காணிப்பது போன்ற சிக்கல்கள் இருக்கின்றன. ஆளும்கட்சி தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்த அதிக வாய்ப்பிருக்கிறது. அதனால் நியாயமாகத் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. அதேபோல கொரோனா பாதிப்புள்ளவர்கள், சந்தேகத்துக்குள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால், தொற்று இருப்பதாகச் சான்றிதழ் வாங்குவது மிக எளிதானது. கொரோனா நெருக்கடியால் பல புதிய முடிவுகள் எடுக்க வேண்டிய தேவை இருப்பது உண்மைதான். ஆனால், அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி அந்த முடிவுகளை எடுக்க வேண்டும்.

பரந்தாமன்

வி.சி.க அனைத்து வாக்காளர்களுக்கும் இந்த வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் எனச் சொல்லியிருப்பது அந்தக் கட்சியின் தனிப்பட்ட கருத்து. பெரிய மாற்றங்களை சின்னச் சின்ன இடைத் தேர்தல்களில்தான் டிரையல் செய்து பார்ப்பதுதான் சரியாக இருக்கும். பொதுத் தேர்தல்களில் அத்தகைய வேலையைச் செய்யக் கூடாது என்பதே எங்களின் கருத்து. தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பு எனச் சொல்லப்பட்டாலும் மத்திய அரசை நம்பித்தான் இருக்கிறது. அடுத்து தேர்தல் வரப்போகும் ஐந்து மாநிலங்கள் பா.ஜ.க-வுக்குச் சாதகமான மாநிலங்கள் அல்ல. பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்கள். அதனால்தான் இது போன்ற முறைகளைப் புகுத்துகிறார்களோ என்கிற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது'' என்கிறார் வழக்கறிஞர் பரந்தாமன்.

Also Read: தேர்தல் குறித்த புதிய சட்டத் திருத்தங்கள்... போர்க்கொடி உயர்த்தும் எதிர்க்கட்சிகள்!

பா.ஜ.க தங்களின் அரசியலுக்காக இதை முன்னெடுக்கிறதா எனத் தமிழக பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர், நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.

``2019-ம் ஆண்டில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், அவர்கள் விரும்பினால் தபால் மூலமாக வாக்களிக்கலாம் என ஒரு விதிமுறையைக் கொண்டு வந்தது தேர்தல் ஆணையம். தற்போது கொரோனாவைக் கருத்தில்கொண்டு அதை 65 வயதாகக் குறைக்கத் திட்டமிட்டார்கள். அதுவும் மருத்துவர்களின் அறிவுரைகளைக் கருத்தில் கொண்டுதான். இது ஜார்க்கண்டுக்கும் டெல்லிக்கும்தான். பீகார் பொதுத்தேர்தலுக்கு இந்தமுறை பின்பற்றப்படவில்லை என்பதை சீதாராம் யெச்சூரிக்கு தேர்தல் ஆணையர் எழுதிய கடிதத்தில் விவரமாகச் சொல்லியிருந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், 10 நாள்களுக்கு முன்பாகவே உரிய மருத்துவச் சான்றிதழ் கொடுத்தால் அவர்களுக்கும் தபால் வாக்கு உண்டு எனவும் குறிப்பிட்டிருந்தார்கள். இதெல்லாம் வரவேற்கப்பட வேண்டிய விஷயங்கள்தான்.

நாராயணன் திருப்பதி

ஆனால், தி.மு.க தலைவர் ஸ்டாலின் தொற்று ஏற்பட்டவர்களின் வீட்டுக்குச் சென்று தபால் வாக்குகளைச் சேகரிக்கும் தபால்காரர்களுக்கு தொற்று பரவாதா என்கிற கேள்வியை எழுப்புகிறார். அவரிடம் நான் ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். கொரோனா தொற்றாளர்களுக்கு அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமை வேண்டாமா? அவசர கால நிலையில், அனைவரையும் அழைத்து முடிவெடுக்க வேண்டும் எனக் கோருவது சரியா? அப்படிச் செய்ய நினைத்தால் அதற்கே ஆறு மாதம் ஆகிவிடும். எல்லா விஷயத்திலும் அரசியல் செய்கிறார் ஸ்டாலின். எதிர்க்கட்சியாக இருந்தால் எல்லா விஷயத்தையும் எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. தான் தோற்றுவிடுவோம் என்கிற பயம் ஸ்டாலினுக்கு இப்போதே தொற்றிக்கொண்டுவிட்டது. தொடர்ச்சியாக அவர் இப்படி நடந்துகொள்வது அழகல்ல'' என்கிறார் நாராயணன்.



source https://www.vikatan.com/government-and-politics/election/tn-political-parties-oppose-eci-decision-on-amendments-in-election-rules

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக