Ad

ஞாயிறு, 19 ஜூலை, 2020

கொரோனா: `தடுப்பு மருந்து ஆராய்ச்சியைக் குறிவைக்கும் உளவாளிகள்!’ - மறுக்கும் ரஷ்யா

உலக மக்களைப் பாடாய்ப்படுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி 6 மாதங்கள் கடந்துவிட்டன. இன்னும் எந்த நாடும் வைரஸுக்கான மருந்தைக் கண்டுபிடிக்கவில்லை. சில நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுப்பிடித்து விட்டதாக அறிவித்திருந்தாலும், அது சோதனை நிலையில் உள்ளதே தவிர, அதிகாரபூர்வமாக மக்கள் பயன்பாட்டுக்கு இன்னும் வரவில்லை. இந்நிலையில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை ரஷ்ய உளவாளிகள் குறி வைத்துள்ளதாக இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தடுப்பு மருந்து

இலக்கு வைக்கப்பட்ட கணினிகளில் இருக்கும் மென்பொருள் குறைபாடுகளைப் பயன்படுத்தியும், போலியான இமெயில் அனுப்பி அதைத் திறக்கச் செய்வதன் மூலமும் கணினியில் இருக்கும் கோப்புகள் திருடப்படுவதாகப் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. ஹேக்கர்கள், ரஷ்ய உளவுத்துறையின் ஒரு பகுதியாகச் செயல்படுவதாகவும், இந்தச் சம்பவத்தால் தடுப்பு மருந்து ஆராய்ச்சி பாதிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஹேக்கிங் சம்பவங்களுக்குப் பின்னால் வெறும் ரஷ்யா மட்டும் இருப்பதாகத் தோன்றவில்லை என மின்னணு பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: ரஷ்யாவின் கோவிட்-19 தடுப்பு மருந்து - மனிதர்கள் மீதான சோதனையில் வெற்றி!

இந்த ஹேக்கிங் சம்பவத்தில் எந்தெந்த நிறுவனங்கள் குறி வைக்கப்பட்டன இதனால், ஏதேனும் தகவல்கள் திருடப்பட்டுள்ளதா என்பது குறித்து இங்கிலாந்து பாதுகாப்பு மையம் எதுவும் குறிப்பிடவில்லை. இந்நிலையில் இந்த ஹேக்கிங் சம்பவத்தை முற்றிலும் மறுத்துள்ளது ரஷ்யா. ``இங்கிலாந்தின் ஆராய்ச்சி மையங்களை யார் ஹேக் செய்திருப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், இதற்கும் ரஷ்யாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

ஹேக்கிங்

இதைப் பற்றி பேசியுள்ள ரஷ்யாவுக்கான இங்கிலாந்துத் தூதர் ஆண்ட்ரி கெலின், ``இந்தக் கதையை நான் நம்பவில்லை, இதில் எந்த அர்த்தமும் இல்லை. ரஷ்யா இதைச் செய்யவில்லை என்பது மிகத் தெளிவாக உள்ளது. மற்ற நாடுகளின் இதுபோன்ற விஷயங்களில் நாங்கள் தலையிடுவதில்லை. எங்கள் நாட்டில் கன்சர்வேட்டிவ் கட்சியோ, தொழிற்கட்சியோ யார் ஆட்சியிலிருந்தாலும் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள். நாங்கள் பிற நாடுகளுடனான உறவை மேலும் வலுப்படுத்தத்தான் முயல்வோம்” என்று கூறியுள்ளார். இருந்தும் ரஷ்யா மீதான இங்கிலாந்தின் குற்றச்சாட்டு சர்வதேச அளவில் அதிக கவனம் பெற்றுள்ளது.



source https://www.vikatan.com/news/international/russia-rejects-coronavirus-vaccine-hacking-allegations

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக